வங்கிகள் என்றுமே ஏழை எளிய மக்களுக்கும், சாமானியர்களுக்கு சாதகமாகவும், நெருக்கமாகவும் இருக்க முடிவதில்லை.
ஆனால் மக்கள், வங்கி சேவைகளைப் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய அவசியத்தில் இருக்கிறார்கள். அரசு சிலிண்டருக்கு வழங்கும் மானியம் தொடங்கி, நிதி அமைச்சர் கொரோனா காலத்தில் வழங்கும் 500 ரூபாய் வரை எல்லாமே வங்கிக் கணக்குகளில் தான் வரவு வைக்கிறார்கள்.
ஆக மக்கள், வங்கிகளுக்கு வரும் போது, வங்கிகள் மக்களுக்கான அடிப்படை வசதிகளை இலவசமாக கொடுப்பதில்லை.

சேவைகளுக்கு பணம்
குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஏடிஎம் பணப் பரிமாற்றங்களுக்கு கட்டணம் வசூலிப்பது, ஏடிஎம் கார்ட்களுக்கு தனியாக கட்டணம் வசூலிப்பது, குறைந்தபட்ச பேலன்ஸை வைத்திருக்கவில்லை என்றால் அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அபராதமாக பிடித்தம் செய்வது, வங்கி தொடர்பாக எஸ் எம் எஸ் சேவைக்கு கட்டணம் வசூலிப்பது என மக்களிடம் இருந்து பணத்தை வங்கிகள் வசூலித்துக் கொண்டே இருக்கின்றன.

ஏடிஎம் பிரச்சனை
இப்போதும், அப்படி ஒரு விஷயத்தைத் தான் ஆர்பிஐ பேனல் ஒன்று பரிந்துரைத்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஒரு வங்கிக் கணக்கில் இருந்து ஒருவர் 5,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால், வங்கிகள் கட்டணம் வசூலிக்கலாம் என, ஆர்பிஐயின் ஏடிம் கட்டண பேனல் பரிந்துரைத்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ஏன் 5000 ரூபாய்
கடந்த ஏப்ரல் 2019 முதல் ஜூன் 2019 வரையான கால கட்டத்தில், இந்தியாவில்ல் 66 % ஏடிஎம் பணப் பரிமாற்றங்கள், 5,000 ரூபாய்க்குக் கீழ் தான் நடந்து இருக்கின்றனவாம். ஆகையால் தான் 5,000 ரூபாயை, இந்த பேனல் ஒரு வரம்பாக பரிந்துரை செய்து இருக்கிறார்களாம். அதோடு விட்டார்களா என்றால் இல்லை.

டிரான்சாக்ஷனுக்கு கட்டணம்
வங்கிகள் கொடுக்கும் இலவச ஏடிஎம் டிரான்சாக்ஷன் எண்ணிக்கைகளுக்கு மேல், கட்டணத்தை வசூலிப்பார்கள். அந்த கட்டணம் 20 ரூபாயாக இருக்கிறது. அதை 24 ரூபாயாக வசூலிக்க, இந்த ஆர்பிஐ ஏடிஎம் கட்டண பேனல் அறிக்கை பரிந்துரைத்து இருப்பதாக ப்ளூம்பெர்க் தன் வலைதளத்தில் சொல்லி இருக்கிறது. இதற்கு மேல் ஜிஎஸ்டி போன்ற வரிகள் வேறு தனியாக வரும்.

மற்ற வங்கி ஏடிஎம் நிதி சார் பரிமாற்றங்கள்
மற்ற வங்கி ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தி நிதி சார்ந்த பணப் பரிவர்த்தனைகளைச் செய்தால் 15 ரூபாய் கட்டணம் வசூலித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதை 10 லட்சம் பேருக்கு மேல் வசிக்கும் நகரங்களில் 17 ரூபாய் வசூலிக்கவும், 10 லட்சத்துக்கு கீழ் மக்கள் வசிக்கும் நகரங்களில் 18 ரூபாய் வசூலிக்கவும் இந்த ஆர்பிஐயின் ஏடிஎம் கட்டண பேனல் அறிக்கை பரிந்துரைத்து இருக்கிறதாம்.

மற்ற வங்கி ஏடிஎம் Non Financial Transaction
மற்ற வங்கி ஏடிஎம்களில், பணப் பரிமாற்றம் அல்லாமல் வேறு ஏதாவது டிரான்சாக்ஷன் செய்கிறார்கள் என்றால் தற்போது 5 ரூபாய் வசூலிக்கிறார்கள். ஆனால் ஆர்பிஐயின் ஏடிஎம் கட்டண பேனல் அறிக்கையோ, 10 லட்சம் பேருக்கு மேல் வாழும் நகரங்களில் 7 ரூபாயும், 10 லட்சம் பேருக்கு கீழ் வாழும் சிறு நகரங்களில் 8 ரூபாயும் வசூலிக்கச் சொல்லி பரிந்துரைத்து இருக்கிறார்கள்.

ஜூன் 2019
கடந்த ஜூன் 2019-ல் ஆர்பிஐ, இந்தியாவின் ஏடிஎம் கட்டணம் குறித்து பரிசீலனை செய ஒரு பேனலை அமைத்தது. அந்த காலகட்டத்தில் இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைவராக இருந்த வி ஜி கண்ணன், இந்த பேனலுக்கு தலைவராக இருந்தார். இந்த பேனல் கடந்த 22 அக்டோபர் 2019 அன்றே தன் அறிக்கையை, ஆர்பிஐ இடம் சமர்பித்துவிட்டது. ஆனால் இதுவரை ஆர்பிஐ அந்த அறிக்கையை வெளியிடவில்லை.

ஏடிஎம் செலவுகள்
இந்தியாவில் ஏடிஎம் இயந்திரங்களை செயல்படுத்துவதற்கான செலவுகள் (Operating Cost) அதிகரித்துவிட்டது, இருப்பினும் டெபிட் கார்ட் கொடுத்த வங்கி இல்லாமல் வேறு வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து பணம் எடுப்பதற்கு வசூலிக்கும் Interchange Fees 2012-ம் ஆண்டுக்குப் பின் பரிசீலிக்கவில்லை. கட்டணத்தை உயர்த்தவும் இல்லை.

பணம் எடுக்கும் அளவு
அதே போல 2008-ம் ஆண்டுக்குப் பின், ஒரு வாடிக்கையாளர் ஏடிஎம் இயந்திரத்தை எத்தனை முறை பயன்படுத்தலாம் (Cap on Customer ATM usage Charge), எத்தனை முறைக்கு மேல் ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தினால் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும், என்பதையும் பரிசீலிக்கவில்லை என்கிறது ஆர்பிஐயின் ஏடிஎம் கட்டண பேனல் அறிக்கை.