2020ல் தங்கம் மீதான முதலீட்டை விடவும் அதிகளவிலான லாபத்தை அளித்த பிட்காயின், 2021ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் பல்வேறு காரணங்களுக்காகத் தனது 40,000 டாலர் என்ற உச்ச விலையில் இருந்து 10,000 டாலர் வரையில் சரிந்து 30,000 டாலருக்கு வீழ்ச்சி அடைந்தது.
பிட்காயின் வர்த்தக வரலாற்றில் நீண்ட காலம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் இருந்த காலமாகப் பார்க்கப்பட்ட 2020ஆம் ஆண்டில் முடிவில் இந்த அதிரடி வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாத பல பிட்காயின் முதலீட்டாளர்கள் மொத்தமாக விற்பனை செய்துவிட்டு வெளியேறினர்.

பிப்ரவரியில் பிட்காயின்
இந்நிலையில் பிப்ரவரி மாதம் துவக்கத்தில் இருந்து பிட்காயின் மதிப்பு தட்டுத்தடுமாறி 30,000 டாலரில் இருந்து 38,000 டாலர் வரையில் உயர்ந்த நிலையில், இந்த உயர்வுக்குச் சரியான காரணம் தெரியாமல் முதலீட்டாளர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில் எலான் மஸ்க் தலைமை வகிக்கும் டெஸ்லா ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எலான் மஸ்க் முதலீடு
ஜனவரி மாதத்தில், அதாவது பிட்காயின் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு சரிவு பாதையில் இருந்த போது எலான் மஸ்க் தலைமை வகிக்கும் டெஸ்லா நிறுவனம் ஜனவரி மாதத்தில் சுமார் 1.5 பில்லியன் டாலர் தொகைக்குப் பிட்காயின் வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

பேமெண்ட்டாக ஏற்றுக்கொள்ள முடிவு
இதுமட்டும் அல்லாமல் கூடிய விரைவில் பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சியைப் பேமெண்ட் ஆகப் பெற்றுக்கொண்டு டெஸ்லா கார்களை மட்டும் அல்லாமல் இதர பிற சேவைகளையும் விற்பனை செய்யத் திட்டமிட்டு வருவதாகவும், கூடிய விரைவில் இத்திட்டம் அமலாக்கம் செய்யப்படும் எனவும் டெஸ்லா அமெரிக்கப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்திற்குச் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தடாலடி உயர்வு
இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில நொடிகளில் பிட்காயின் மதிப்புத் தடாலடியாக உயரத் துவங்கியது. 38,000 டாலரில் வர்த்தகம் செய்யப்பட்ட பிட்காயின் ஓரே நாளில் 47,513.57 டாலர் என்ற புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இந்த அதிரடி வளர்ச்சியாலும், டெஸ்லா அறிவிப்பாலும் பிட்காயின் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

2021ல் பிட்காயின்
பிட்காயின் மதிப்புக் கொரோனா தொற்று, லாக்டவுன் பாதிப்பு, பங்குச்சந்தை மற்றும் முதலீட்டுச் சந்தை வீழ்ச்சி ஆகியவற்றின் எதிரொலியாக அதிகளவிலான முதலீட்டைப் பெற்று 2020ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 300 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்தது. 2021ஆம் ஆண்டில் சுமார் 56 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சுமார் 20 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.