பெண் குழந்தைகளின் படிப்பிற்காகவும், திருமணத்திற்காகவும் உதவும் வகையில் மத்திய அரசு அறிவித்த மிக முக்கியமான சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தைத் தமிழ்நாட்டு மகள் மிகவும் சிறப்பான வகையில் பயன்படுத்தி வருகின்றனர்.
21 வருடம் அல்லது பெண் குழந்தை திருமண வயதான 18 வரையிலான முதிர்வு காலம் கொண்ட இந்தத் திட்டம், பெண் குழந்தைகளின் கல்வியில் அதிகளவில் கவனம் செலுத்தும் தமிழ்நாட்டு மக்கள் விட்டு வைப்பார்களாக என்ன..?

சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் பெண் குழந்தை பெயரில் பெற்றோர்கள் துவங்கப்படும் சிறு சேமிப்புக் கணக்கில் வருடம் 250 ரூபாய் முதல் அதிகப்படியாக 1.5 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்ய முடியும். இந்த முதலீட்டுத் திடத்திற்குத் தற்போது 7.6 சதவீதம் வட்டி வருமானம் அளிக்கப்படுகிறது.

வரிச் சலுகை
ஒரு பக்கம் பெற்றோர்களுக்குப் பெண் குழந்தைக்கான கல்லூரி படிப்பிற்கு இந்தத் தொகை உதவும் என்றாலும், மறுபக்கம் 80 சி பிரிவின் கீழ் முதலீடு செய்யும் தொகைக்கு வருமான வரிச் சலுகை பெற முடியும் என்பது தான் கூடுதலான சிறப்பு. இதனால் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் பெற்றோர்கள் வருமான வரி சேமிக்கும் ஒரு கருவியாக உள்ளது.

தமிழ்நாட்டு மக்கள்
இந்த நிலையில் 2015-16ஆம் நிதியாண்டில் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் துவக்கப்பட்ட போது தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 12.35 லட்சம் பேர் இத்திட்டத்தில் முதலீடு செய்து அசத்தியுள்ளனர். இந்தக் காலகட்டத்தில் இந்தியாவிலேயே மொத்தமாக இத்திட்டத்தில் முதலீடு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை என்பது 85.31 லட்சம் மட்டுமே.

தமிழ்நாடு தான் டாப்பு
சொல்லப்போனால் 2015-16ஆம் நிதியாண்டில் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் அதிகம் முதலீடு செய்த மாநிலத்தில் தமிழ்நாடு தான் முதல் இடம். இது தான் தமிழகம் மக்கள் மத்தியில் உருவாக்கிய விழிப்புணர்வு, பெண்களின் கல்விக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தையும் படம் போட்டுக் காட்டியுள்ளது.

2015 முதல் 2021 வரை
இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த வருடத்தில் இருந்து சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
2016-17 நிதியாண்டில் - 1,71,507 பேர்
2017-18 நிதியாண்டில் - 1,58,396 பேர்
2018-19 நிதியாண்டில் - 2,68,685 பேர்
2019-20 நிதியாண்டில் - 2,92,348 பேர்
2020-21 நிதியாண்டில் - 3,30,633 பேர்

குழந்தை
நீங்கள் புதிதாகப் பெண் குழந்தை பெற்று இருந்தால் அல்லது உங்கள் குழந்தைக்கு 1 வயதுக்குக் குறைவாக இருக்கும் பட்சத்தில் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் முதலீடு செய்யச் சரியான நேரம்.
இந்தத் திட்டத்தில் எவ்வளவு விரைவாக முதலீடு செய்கிறோமோ, அந்த அளவிற்கு நன்மை.

சுகன்யா சம்ரிதி யோஜனா முதலீட்டுக் கணக்கு
சரி 2021ல் நீங்கள் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் முதலீடு செய்யத் துவங்கினால், 2042ஆம் ஆண்டு அதாவது பெண் குழந்தையின் 21 வயதில் முதிர்வு பெறும். ஆனால் நீங்கள் 15 வருடம் மட்டுமே இத்திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.
இத்திட்டத்தின் அதிகப்படியான தொகையான 1.5 லட்சம் ரூபாயை முதலீடு செய்யப்படும் போது 2042ஆம் ஆண்டு நீங்கள் முதலீடு செய்த 22.50 லட்சம் ரூபாய்க்கு 41,15,155 ரூபாய் வட்டி உடன் சேர்த்து சுமார் 63.65 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

பெண் குழந்தைகளின் கனவு
இது போதுமே பெண் குழந்தையின் கல்வி செலவுகளைத் தீர்க்க. இந்தத் தொகையை வைத்துப் பெண் குழந்தைகள் படிப்பது மட்டும் அல்லாமல் இன்றைய வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் ஸ்டார்ட்அப் நிறுவனம் கூடத் துவங்க முடியும்.
பெண் குழந்தைகளின் கனவுகளை நினைவாக்கு இந்தத் தொகை ஒரு அடித்தளமாக இருக்கட்டுமே..!

பங்களாதேஷ்
பங்களாதேஷ் போல இந்திய பெண்களின் பங்கீடு முழுமையாக இருந்தால் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சியை எளிதாக அடைந்துவிட முடியும். அதேவேளையில் பெண்களுக்கான ஊதியமும், வேலைவாய்ப்புகளும் ஆண்களுக்கும் இணையாக அளிக்கப்பட வேண்டியது மிக முக்கியமானது.

சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்
இந்த நிலையை அடைய வேண்டும் என்றால் இந்திய பெண்கள் கட்டாயம் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். இதற்கான நிதியை உருவாக்கப் பெற்றோர்களுக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய வாய்ப்பு தான் இந்தச் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்.