பொதுவாக எந்த டிஜிட்டல் பேமெண்ட் சேவைக்கும் இண்டர்நெட் இணைப்பு மிக முக்கியம், குறிப்பாகக் கூகுள் பே, பேடிஎம் போன்ற சில செயலிகளுக்குச் சிறப்பான இண்டர்நெட் இணைப்பு தேவை. இப்படியிருக்கையில் இண்டர்நெட் இணைப்பே இல்லாமல் பணத்தை அனுப்புவதோ, பேமெண்ட் செய்யவோ முடியுமா..? கட்டாயம் முடியும்.
குறிப்பாகத் தற்போது மக்கள் அதிகம் பயன்படுத்தும் பேடிஎம், கூகுள்பே, பார்த்பே, அமேசான்பே, போன்பே மற்றும் ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்க் மற்றும் இதர பல செயலிகள் வாயிலாகவும் பேமெண்ட் செய்ய முடியும்.
இதை விட முக்கியமாக ஸ்மார்ட்போன்கள் இல்லாத, இண்டர்நெட் இணைப்பு இல்லாதவர்களுக்கும் UPI வாயிலாகப் பேமெண்ட்களைச் செய்ய முடியும்.
இண்டர்நெட் இல்லாமல் டிஜிட்டல் பேமெண்ட்.. ஆர்பிஐ-யின் புதிய சேவை..!

USSD சேவை
இதைச் செய்ய, முதலில் நீங்கள் உங்கள் போன்களில் இலவசமாக இருக்கும் USSD சேவை பயன்படுத்த வேண்டும். உங்கள் போனில் *99# என்பதை டைப் செய்து டயல் செய்வதன் வாயிலாகவே பணத்தை அனுப்ப முடியும்.

NPCI அமைப்பு
UPI பேமெண்ட் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தி நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) அமைப்பு ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத அனைத்து இந்திய மக்களுக்கு டிஜிட்டல் பேமென்ட் சேவையை அளிக்க வேண்டும் என் முடிவை எடுத்தது.

99 சேவை
இந்த *99# சேவையை ஆரம்பக்கட்டத்தில் BSNL மற்றும் MTNL ஆகிய இரண்டு தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் (TSPகள்) மட்டுமே வழங்கினர். ஆகஸ்ட் 2016 இல், NPCI அமைப்பு இரண்டு டிஜிட்டல் கட்டண முறைகளை (UPI மற்றும் *99#) ஒருங்கிணைத்தது, பயனர்கள் UPI ஐடி அல்லது கட்டண முகவரியைப் பயன்படுத்திப் பணத்தை அனுப்பவும் பெறும் வசதியை ஏற்படுத்தியது.

BHIM செயலி
UPI கணக்கை உருவாக்குவதற்கும், ஒரு முறை பதிவு செய்வதற்கும் முதலில் மத்திய அரசின் BHIM செயலியில் பதிவு செய்து கொள்ளுங்கள்.
வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட உங்கள் சரியான தொலைப்பேசி எண்ணை உள்ளிடவும்.

வங்கி சேவைகள்
உங்கள் மொபைல் போனில் டயல் பேடைத் திறந்து '*99#' என டைப் செய்யவும். இது 'எனது சுயவிவரம்', 'பணத்தை அனுப்பு', 'பணத்தைப் பெறு', 'நிலுவையில் உள்ள கோரிக்கைகள்', 'செக் பேலன்ஸ்', 'UPI பின்' மற்றும் 'பரிவர்த்தனைகள்' போன்ற ஏழு விருப்பங்களைக் கொண்ட புதிய மெனுவிற்கு உங்களைத் அழைத்துச் செல்லும்

பணத்தை அனுப்ப
புதிய மெனுவிற்கு வந்த உடன் உங்கள் டயல் பேடில் உள்ள டயல் பேட்-ல் இருக்கும் எண் 1ஐ அழுத்துவதன் மூலம் 'பணம் அனுப்பு' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க முடியும்.
இது உங்கள் வங்கிக் கணக்கு எண், UPI ஐடி மற்றும் IFSC குறியீடு அல்லது போன் எண்ணை பயன்படுத்திப் பணத்தை அனுப்ப வழிவகைச் செய்யும். இதில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வழியைத் தேர்வு செய்யக்கொள்ள முடியும்.

UPI முறை
நீங்கள் UPI ஐ தேர்ந்தெடுத்தால், பணம் அனுப்பும் நபரின் UPI ஐடியை உள்ளிட வேண்டும், அதேநேரம் நீங்கள் போன் எண் விருப்பத்திற்குச் சென்றால், நீங்கள் பணம் அனுப்பும் நபரின் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.
வங்கிக் கணக்கு விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தால், 11 இலக்க IFSC குறியீடு மற்றும் பெறுநரின் வங்கிக் கணக்கு எண்ணை உள்ளிட வேண்டும்.

தொகை உள்ளீடு
அடுத்து, Google Pay அல்லது Paytm போன்ற பிற டிஜிட்டல் பரிவர்த்தனை தளத்தைப் போலவே, நீங்கள் பணம் அனுப்பும் நபருக்கு நீங்கள் விரும்பும் தொகையை உள்ளிட வேண்டும்.

UPI பின்
கடைசியா, BHIM தளத்தில் நீங்கள் உருவாக்கிய UPI பின் எண்ணை உள்ளிடவும். பரிவர்த்தனையை முடிக்க 'அனுப்பு' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பணம் மாற்றப்பட்டதும், உங்கள் தொலைப்பேசியில் ஆதார் ஐடியுடன் உறுதிப்படுத்தல் கிடைக்கும். அவ்வளவு தான் வேலை முடிந்தது.

தரவுகள் சேமிப்பு
இதேபோல மீண்டும் அதே நபருக்குப் பணத்தை அனுப்ப வேண்டிய தேவை வரும் என நீங்கள் நினைத்தால் அனுப்பிய நபரின் தகவல்களைச் சேமிக்க முடியும். இதற்காக நீங்கள் பேமெண்ட்-ஐ முடித்த பின்பு எதிர் நபரின் தகவல்களைச் சேமிக்க வேண்டுமெனக் கேட்கப்படுவீர்கள்.
இந்தச் சேவையைப் பயன்படுத்தினால் ரூபாய் 0.50 பைசா என்ற கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.