சிறு சேமிப்பு திட்டங்கள் என்றழைக்கப்படும் பிபிஎஃப், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம், சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம், வங்கி வைப்பு நிதி என பல சிறு சேமிப்பு திட்டங்கள், பெயரிலேயே சிறு சேமிப்பு திட்டங்கள் என்றழைக்கப்படுகின்றன. ஆக சிறிய அளவில் சேமிப்பினை தொடங்குபவர்களுக்கு இவைகள் உகந்த திட்டங்களாக உள்ளன;.
இந்த திட்டங்களில் கூடுதலாக மக்களை ஊக்கப்படுத்தும் விதமாக வரிசலுகையும் கிடைக்கும். இது இன்னும் சிறிய அளவில் சேமிக்கும் சாமனியர்களை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக மேற்கண்ட இந்த திட்டங்களில் 7.6% வரை உத்தரவாத வருமானமும் உண்டு.
ஆக அரசின் சேமிப்பு திட்டங்கள், வரி சலுகை, வட்டி வருவாய், பாதுகாப்பு எல்லாவற்றுக்கும் மேலாக எளிய முறையில் இந்த திட்டங்களை தொடங்கிக் கொள்ள முடியும். இப்படி பல்வேறு சலுகைகள் உள்ளதானலோ என்னவோ? இந்த திட்டங்கள் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பினை பெற்றுள்ளன.

வரி சேமிப்பு வைப்பு நிதி திட்டம்
அந்த வகையில் நாம் இன்று சில திட்டங்களைப் பற்றி விரிவாக பார்க்கப் போகிறோம். முதலாவதாக பார்க்கவிருப்பது 5 வருட வரி சேமிப்பு வைப்பு நிதி திட்டம். பொதுவாகவே வங்கி வைப்பு நிதி அல்லது பிக்ஸட் டெபாசிட் என்றாலே பாதுகாப்பான ஒரு திட்டமாக பார்க்கப்படுகிறது. உத்தரவாத வருமானமும், எல்லாவற்றுக்கும் மேலாக முதலீட்டு தொகைக்கு எந்த பங்கமும் இல்லை என்பதால் மிக பாதுகாப்பானதாக பார்க்கப்படுகிறது. இப்படி பல அம்சங்களை கொண்ட சேமிப்பு திட்டங்களுக்கு, கூடுதலாக வரி சலுகையும் கிடைத்தால் வேண்டாம் என்றும் கூற முடியுமா? 5 வருட லாக் இன் பீரியட் கொண்ட வரி சேமிப்பு FDsக்கள், இன்னும் சிறந்த சேமிப்பு திட்டமாக பார்க்கப்படுகிறது.
எஸ்பிஐ இந்த திட்டத்திற்கு வட்டி விகிதம் 5.4%-த்தினை வழங்குகிறது,. இதே மூத்த குடிமக்களுக்கு 6.2% வட்டி விகிதத்தினை வழங்குகிறது. இது 80TTB-ன் படி வரி சலுகை அளிக்கிறது. இதே மூத்த குடிமக்கள் வைப்பு தொகையிலிருந்து பெறப்பட்ட வட்டிக்கு 50000 ரூபாய்க்கு வரி விலக்கு கோரலாம். அதோடு இந்த வரி சேமிப்பு வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு மற்றும் முதிர்வு தொகை வரி இல்லை. ஆனால் வட்டிக்கு வரி விதிக்கப்படுகிறது. இந்த எஃப்டி வருமானத்தில் வருடத்தில் 40,000 ரூபாயினை தாண்டினால் மட்டுமே டிடிஎஸ் வங்கியால் கழிக்கப்படுகிறது. இதே மூத்த குடி மக்களுக்கு 50,000 ரூபாயினை தாண்டி டிடிஎஸ் கழிக்கப்படுகிறது.

அரசின் தேசிய சேமிப்பு பத்திரம்
என்எஸ்சி எனப்படும் தேசிய சேமிப்பு பத்திர திட்டம் (National Savings Certificate), நாட்டில் உள்ள அனைத்து அஞ்சலகத்திலும் பெறக்கூடிய அரசின் திட்டமாகும். இது ஒரு நிலையான வருமானத்தை தரக்கூடிய சிறு சேமிப்பு முதலீட்டு திட்டங்களில் ஒன்றாகும். தேசிய சேமிப்பு பத்திரம் என்பது பாதுகாப்பான மற்றும் அதே வேளையில் ரிஸ்க் குறைவாக கொண்ட திட்டமாக கருதப்படுகிறது. இது 5 வருட சேமிப்பு திட்டமாகும்.
அனைத்து இந்திய குடிமக்களும்(Resident Individual) இத்திட்டத்தில் முதலீடு செய்ய தகுதியுள்ளவர். குறைந்தபட்ச முதலீடாக 1,000 ரூபாயும், அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு ஏதும் இல்லை. தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் முதலீடு செய்யும் ஒருவர், அதற்கான வரி சலுகையையும் வருமான வரிச்சட்டம் 80சி பிரிவின் கீழ் சலுகை பெறலாம். இந்த திட்டத்திற்கு தற்போது வட்டியாக 6.8% வழங்கப்படுகிறது. இதுவும் வருடத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட வருமானத்தினை கொடுக்கிறது.
இந்த தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தின் முடிவில் கிடைக்கப்பெறும் தொகைக்கு டிடிஎஸ் பிடித்தம் இல்லை. முழுத்தொகைக்கும் சந்தாதாரர்களின் கையில் கிடைக்கப்பெறும். இருப்பினும் ஒருவர் தனது வருமான வரம்பை கணக்கில் கொண்டு, முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு வரி செலுத்த வேண்டியிருக்கும்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS)
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களில் SCSS ஒரு சிறப்பான திட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த சேமிப்புத் திட்டத்தினை ஓய்வூதிய சலுகைகள் கிடைத்த ஒரு மாதத்திற்குள் கணக்கு திறக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை உண்டு. இந்த சேமிப்பு திட்டத்தில் சேர ஒரு நபர் 55 வயது அல்லது 60 வயது, அதற்கு மேற்பட்டவராக இருக்கவேண்டும். 50 வயதுக்கு மேற்பட்ட ஓய்வுபெற்ற பாதுகாப்பு பணியாளார்களும் இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய தகுதியானவர்கள் தான்.
அரசின் இந்த சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரையில் இருக்கலாம். எனினும் பணியில் இருந்து ஓய்வுபெற்றபோது பெறப்பட்ட தொகைக்கு மேல் இருக்கக் கூடாது. இந்த சேமிப்பு திட்டத்திற்கு காலாண்டுக்கு ஒரு முறை அரசு வட்டியை மாற்றியமைக்கிறது. தற்போது 7.4% வட்டி வழங்கப்படுகிறது.
இந்த SCSS திட்டத்தின் முதிர்வுகாலம் 5 ஆண்டுகள் தான். இருப்பினும் இந்த திட்டத்தினை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும்.
மூத்த குடி மக்களுக்கான இந்த சேமிப்பு திட்டத்தில் வரி சலுகைகளும் உண்டு. இது 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் வரை வரி விலக்கு கோரலாம். அதோடு இந்த வைப்பு தொகையின் மூலம் ஈட்டப்பட்ட வட்டி முழுமையாக வரி விதிக்கப்படக்கூடியது தான். அதோடு டிடிஎஸ்ஸூம் பிடித்தம் செய்யப்படும். வருமான வரி விதிக்கப்பட்டாலும், 15h அல்லது 15g படிவத்தை வழங்க வேண்டும்.

சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY)
இந்திய அஞ்சல் துறை வழங்கும் சேமிப்பு திட்டங்களில் சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது பிரபலமான பெண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டமாகும். இது அவரது எதிர்காலத்தில் நிதி ரீதியாக பெரும் ஆதாரவினைக் கொடுக்கும்.
இந்த திட்டம் மைனர் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. ஒரு பெண் குழந்தையின் பிறப்பு முதல் 10 வயது வரை எந்த நேரத்திலும், இந்த சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தினை தொடங்க முடியும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகளாகும்.
இந்த திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் வைப்பு ஒவ்வொரு ஆண்டும் 250 ரூபாய் தேவைப்படுகிறது. இதே ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சுகன்யா சம்ரிதி திட்டத்திற்கு வட்டி விகிதம், நிலவரத்திற்கு ஏற்றப்படி அவ்வப்போது இந்திய நிதி அமைச்சகத்தால் மாற்றியமைக்கப்படுகிறது. தற்போது 7.6% வட்டி வழங்கப்படுகிறது.
நிலுவைத் தொகை மற்றும் கணக்கில் நிலுவையில் உள்ள வட்டியுடன், கணக்கு வைத்திருப்பவர்களுக்கு செலுத்தப்படும். இந்த கணக்கு முதிர்ச்சியடைந்த பிறகும் இந்த கணக்கு மூடப்படாவிட்டால், மீதமுள்ள தொகைக்கு தொடர்ந்து வட்டி கொடுக்கப்படும்.
இந்த சுகன்யா சமிரிதி திட்டத்தின் கீழ் செய்யப்படும் டெபாசிட் தொகைக்கு வருமான வரி சட்டத்தின் கீழ் 80சி-ன் படி அதிகபட்சமான 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ஆக சேமிப்புடன் கூடுதலாக வரிச்சலுகையும் உண்டு.

பொது வருங்கால வைப்பு நிதி (PPF)
அரசின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம், நீண்டகால நோக்கங்களுக்காக, அதுவும் ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்ய நினைப்போருக்கு நிச்சயம் ஒரு வரப்பிரசாதம் தான். ஏனெனில் முதலீட்டிற்கு பங்கம் இல்லாத ஒரு சிறந்த முதலீடு. இந்த திட்டமானது 15 ஆண்டுகால திட்டமாகும். இதில் வரிச்சலுகையும் உண்டு. இதற்கான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கிறது. தற்போதைய விகிதம் வருடத்திற்கு 7.1% ஆகும்.
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் செலுத்திக் கொள்ளலாம், அதிகபட்சமாக 1.5 லட்சம் வரையில் செலுத்திக் கொள்ளலாம். எனினும் முதிர்வு காலத்திற்கு பிறகும் 5 ஆண்டுகள் தொடர்ந்து கொள்ளலாம். ஒரு ஆண்டில் அதிகபட்சம் 12 பங்களிப்புகள் இருக்கலாம். அதாவது 12 தவணைகளாக உங்களது தொகையை நீங்கள் செலுத்திக் கொள்ளலாம்.
உங்களது கணக்கு தொடங்கப்பட்ட ஆண்டில் இருந்து 7வது நிதியாண்டில் உங்களது பிபிஎஃப் கணக்கில் இருந்து ஓரளவு தொகையினை பெறலாம். எனினும் ஒரு பகுதி மட்டுமே திரும்ப பெற அனுமதிக்கப்படும். சில வங்கிகள் 5 ஆண்டுகளுக்கு பிறகும் பணம் எடுக்க அனுமதிக்கின்றன. சில 7 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதிக்கின்றன. அவ்வாறு எடுக்கப்படும் தொகையானது ஒரு நிதியாண்டில் ஒரு முறை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுகிறது. அதுவும் நடப்பு ஆண்டின் முந்தைய ஆண்டின் நிலுவையில் 50% மட்டும் எடுக்க அனுமதிக்கப்படுகிறது.