கொரோனா என்பது மக்களிடையே வந்த பிறகு எந்த நேரத்தில் என்ன நடக்கிறது என்பதை, யூகிக்க முடியாத கடினமான சூழல் இருந்து வருகின்றது. ஆக மக்கள் பாதுகாப்பான சூழலில் இருக்க வேண்டியது அவசியமானதாக உள்ளது.
எனினும் இந்த கடினமான காலகட்டங்களில் முதலீடு என்பதை பற்றியும் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் மக்கள் உள்ளனர். குறிப்பாக மூத்த குடிமக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக முதலீடும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கு ஏற்ற பாதுகாப்பான, சந்தை அபாயம் இல்லாத ஒரு திட்டத்தினை பற்றித் தான் பார்க்கவிருகின்றோம்.
பாதுகாப்பான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்.. யாரெல்லாம் இணையலாம்.. வட்டி... மற்ற சலுகைகள்..?

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
நாம் இன்று பார்க்கவிருப்பது மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் (SCSS). இது அஞ்சலக திட்டம் என்பதால் மிக பாதுகாப்பானதாக பார்க்கப்படுகிறது. சந்தை ரிஸ்க் என்பது துளியும் இல்லை. நிலையான கணிசமான வருவாயினை கொடுப்பதால், வயதானவர்களுக்கு ஏற்ற ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. இது வயதான காலகட்டத்தில் நிதி ரீதியாக யாரையும் சார்ந்து வாழாமல் இருக்க உதவிகரமாகவும் இருக்கும்.

வயது வரம்பு
இந்த சேமிப்புத் திட்டத்தில் ஓய்வூதிய சலுகைகள் கிடைத்த ஒரு மாதத்திற்குள் கணக்கு திறக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை உண்டு. பொதுவாக அரசின் இந்த சேமிப்பு திட்டத்தில் சேர ஒரு நபர் 60 வயது, அதற்கு மேற்பட்டவராக இருக்கவேண்டும். இதே விஆர்எஸ் பெறுபவர்கள் 55 வயதிற்கு மேல் இணைந்து கொள்ளலாம். 50 வயதுக்கு மேற்பட்ட ஓய்வுபெற்ற பாதுகாப்பு பணியாளர்களும் இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய தகுதியானவர்கள் தான். எனினும் இந்த சேமிப்பு கணக்கில் HUF & NRI-கள் இணைய முடியாது.

அதிகபட்ச முதலீடு
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்யலாம். எனினும் பணியில் இருந்து ஓய்வுபெற்றபோது பெறப்பட்ட தொகைக்கு மேல் இருக்கக் கூடாது. இந்த பணம் ஒரு வைப்புத் தொகையாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். வைப்பு தொகை வரையறுக்கப்பட்டிருந்தாலும், ஒரு நபர் பல எஸ்சிஎஸ்எஸ் கணக்குகளை தொடங்கிக் கொள்ள முடியும். 15 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தால், சேமிப்பு கணக்குக்கு கிடைக்கும் சாதாரண வட்டி விகிதம் கிடைக்கும்.

வட்டி விகிதம்
இந்த திட்டத்திற்கு அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப வட்டியை மாற்றியமைக்கிறது. தற்போதைய நிலவரப்படி வட்டி விகிதம் 7.40% ஆக உள்ளது. இந்த சேமிப்பு திட்டத்தின் முதிர்வுகாலம் 5 ஆண்டுகள். இருப்பினும் இந்த திட்டத்தினை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். இந்த திட்டத்தில் முன் கூட்டியேவும் கணக்கினை முடித்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகு தான் அணுமதிக்கப்படுகிறது. இதற்கு கட்டணம் உண்டு.

வரி சலுகை உண்டா?
மூத்த குடி மக்களுக்கான இந்த திட்டத்தில் வரி சலுகையும் உண்டு. இது 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு கோரலாம். அதோடு இந்த வைப்பு தொகையின் மூலம் ஈட்டப்பட்ட வட்டி முழுமையாக வரி விதிக்கப்படக்கூடியது தான். வட்டி வருவாய் 50,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் டிடிஎஸ்ஸூம் பிடித்தம் செய்யப்படும். இதனை தவிர்க்க 15h அல்லது 15g படிவத்தை வழங்கி சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம்.

வங்கி வட்டியை விட அதிகம்
வங்கிகளில் பிக்சட் டெபாசிட்டுகளுக்கு கிடைக்கும் வட்டி விகிதத்தினை விட, இந்த திட்டத்தில் வட்டி விகிதம் அதிகம். இதனால் வங்கி டெபாசிட்டுகளுக்கு மாற்றாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது. இதில் காலாண்டுக்கு ஒரு முறை வட்டி விகிதம் கிடைக்கும். இது வயதான காலகட்டத்தில் முதியோர்களுக்கு கிடைக்கும் ஒரு வருமானமாகவும் பார்க்கப்படுகிறது.

ரூ.20 லட்சம் எப்படி சாத்தியம்
உதாரணத்திற்கு நீங்கள் ரூ.10,000 முதலீடு செய்தால் - வட்டி விகிதம் ரூ.3700 கிடைக்கும். இதன் மூலம் முதிர்வு தொகையாக - ரூ.13,700
- ரூ.5 லட்சம் டெபாசிட் - வட்டி விகிதம் - ரூ.6,85,000
- ரூ.15,00,000 டெபாசிட் - வட்டி விகிதம் - ரூ.20,55,000
ஆக அதிகபட்ச முதலீடான 15 லட்சம் ரூபாய் செய்யும்போது, 20,55,000 ரூபாய் முதலீடு கிடைக்கும்.