பொதுவாக தங்கம் என்றாலே நம்மவர்களுக்கு அபார பிரியம். அதிலும் இன்றைய காலக்கட்டத்தில் ஆண்களும் பெண்களும் விரும்பி அணியும் ஒரு ஆபரணமாகவும் உள்ளது.
அதிலும் இன்றைய காலகட்டத்தில் வெறும் ஆபரணமாக மட்டும் அல்ல, முதலீடுகளிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஆபரணமாகவும், பார்களாகவும் வாங்காதவர்கள், பேப்பர் தங்கத்திலும் முதலீடு செய்கின்றனர்.
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது கோல்டு இடிஎஃப் மற்றும் தங்க பார்கள், தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட முதலீடுகள் தான். இவற்றில் எது சிறந்தது? எதில் முதலீடு செய்யலாம் என்பதை தான் பார்க்கவிருக்கிறோம்.

கோல்டு இடிஎஃப் முதலீடு
பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடு என்பது நல்ல விஷயம் தான். அதிலும் கோல்டு இடிஎஃப்பில் முதலீடு செய்வது இன்னும் நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. GOLD Exchange trade funds என்று அழைக்கப்படும் கோல்டு இடிஎஃப்களில், தற்போது முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. கோல்டு இடிஎஃப்கள் மின்னணு வடிவில் நம்மிடம் இருக்கும்.

கோல்டு இடிஎஃப்களை டீமேட் மூலம் வாங்கலாம்
நீங்கள் பங்கு சந்தைகளில் முதலீடு செய்வது போன்றே, கோல்டி இடிஎஃப், கோல்டு ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். அங்கு நீங்கள் பங்குகளை போல விற்கவும் முடியும், வாங்கவும் முடியும். உங்களது கோல்டு இடிஎஃப்களை விற்கும்போது அப்போதைய தங்கத்தின் விலையை பெறுவீர்கள். இதனை டீமேட் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அல்லது பங்கு தரர்களிடம் வாங்கிக் கொள்ளலாம். இதனை ஆபரணத் தங்கத்துடன் ஒப்பிடும்போது செலவுகள் குறைவுதான். தங்கத்தின் விலையை பொறுத்தே, இதன் விலை வர்த்தகமாகிறது. ஆக இதன் மூலம் இதன் வெளிப்படைத் தன்மையை அறிய முடியும்.

தங்க பாரில் முதலீடு
தங்க பார்கள் மிக உயர்ந்த தூய்மை தரத்தினைக் கொண்டிருக்கும். நீங்கள் வாங்கும்போது அதனை விசாரித்து வாங்கலாம். இது 100% தூய தங்கமாகும். இதனை முதலீட்டு நோக்கில் மட்டும் வாங்கலாம். அப்படி இல்லை என்றாலும் 22 கேரட் தங்கத்தினையும் நீங்கள் வாங்கலாம். ஆனால் இதனை நீங்கள் வாங்குவதற்கு முன்பு,ஹால்மார்க் சான்றிதழை பெறுவது அவசியமான ஒன்று.

தங்க நகையாக வாங்கலாம்
தங்கத்தினை வாங்கும்போது அதன் தரத்தினை பார்த்து வாங்குவது நல்லது. நகை வாங்கும் போது BIS ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்று பாருங்கள். ஏனெனில் இந்த முத்திரைகள் தரக்குறியீட்டு நிறுவனங்களால் சோதிக்கப்பட்டதென்றும், தரக்குறியீடு அளிக்கப்பட்டதென்றும் அங்கீகரிக்கிறது. நகைகள் தங்கத்தினை விட, சற்று விலை கூடுதலாக உள்ளன. இது செய்கூலி, சேதாரம் என பலவும் சேர்க்கப்படுகிறது. இது 6 - 14% இருக்கும்

முதலீட்டிற்கு எது சிறந்தது?
பொதுவாக கோல்டு இடிஎஃப்கள் மற்றவைகளுடன் ஒப்பிடும்போதும் சிறந்தவையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் நினைத்தவுடன் அன்றைய விலை நிலவரத்திற்கு ஏற்ப வாங்கலாம், விற்கலாம், கட்டணமும் குறைவு தான். பாதுகாப்பானதும் கூட, ஆனால் தங்க பார்கள் மற்றும் நகைகளை பாதுகாக்க வேண்டும், இதில் நகையாக வாங்கும்போது அதிக கட்டணம் உள்ளது. ஆக முதலீட்டு நோக்கில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் கோல்டு இடிஎஃப்களில் முதலீடு செய்யலாம். இதுவே ஆபரணம் முதலீடு என நினைப்பவர்கள் தங்க நகைகள் வாங்கலாம். தங்க பார்களும் முதலீட்டு நோக்கில் வாங்கி வைக்கலாம். ஆனால் இது பாதுகாப்பானதா? என்ற யோசிக்க வேண்டும்.