இன்றைய காலகட்டத்தில் நாம் எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும், நம் குழந்தைகளாவது நன்றாக இருக்க வேண்டும். அவர்களின் வருங்காலத்திற்காக கொஞ்சமேனும் சேமிக்க வேண்டும் என்று பலரும் நினைப்பதுண்டு.
ஆனால் அப்படி நினைப்பவர்களுக்கு எதில் முதலீடு செய்வது? எதில் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்? என்பது பலருக்கும் தெரிவதில்லை.
அதிலும் பெண் குழந்தைகள் என்றால் கொஞ்சம் கூடுதலாகவே சேமிக்க வேண்டியிருக்கும். அப்படி நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். அதிலும் இன்றைய காலகட்டத்தில் அரசின் பாதுகாப்பான ஒரு சேமிப்பு திட்டம் என்றால் நல்ல விஷயம் தானே.

அரசின் முதலீட்டு திட்டம்
அரசின் இந்த திட்டத்தில் எப்படி இணைவது? என்னென்ன பலன்கள்? இதில் எப்படி இணைவது? வயது தகுதி என்ன? இதனை வைத்து கடன் வாங்க முடியுமா? இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் குழந்தைகளுக்காக பல முதலீட்டு திட்டங்கள் உள்ளன. குறிப்பாக அரசின் சில முதலீட்டு திட்டங்கள் பல உள்ளன. எனினும் இன்று நாம் பார்க்கவிருப்பது சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்.

பெண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டம்
இந்த திட்டம் பெற்றோர்களுக்கு தங்களது பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கவும், சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கிலும் உருவாக்கப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக மைனர் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. ஒரு குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை எந்த நேரத்திலும், இந்த சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தினை தொடங்க முடியும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகளாகும்.

வயது ஆதாரம்
அரசின் பெண் குழந்தைகளுக்கான இந்த திட்டத்தில், பெண் குழந்தைகள் மட்டுமே கணக்கு வைத்திருக்க தகுதியுடையவர்கள். இந்த கணக்கினை தொடங்க பெண் குழந்தையின் வயது ஆதாரம் கட்டாயமாகும். ஒரு பெற்றோர் இந்த திட்டத்தின் மூலம் இரண்டு கணக்குகளை துவங்கிக் கொள்ள முடியும்.

முதலீடு எவ்வளவு செய்யலாம்?
இந்தியாவில் எந்தவொரு அஞ்சல் அலுவலகமும், சேமிப்பு வங்கி வேலையினை செய்கின்றன. இந்த திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் வைப்பு ஒவ்வொரு ஆண்டும் 1000 ரூபாய் தேவைப்படுகிறது. இதே ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சுகன்யா சம்ரிதி திட்டத்திற்கு வட்டி விகிதம், நிலவரத்திற்கு ஏற்றப்படி அவ்வப்போது இந்திய நிதி அமைச்சகத்தால் மாற்றியமைக்கப்படுகிறது.

இந்த சேமிப்பு திட்டத்திற்கு வட்டி உண்டு
பெண் குழந்தைகள் பிறந்த நாளிலிருந்து 21 ஆண்டுகள் நிறைவடையும் போது இந்த திட்டமும் முதிர்ச்சியடைகிறது. நிலுவைத் தொகை மற்றும் கணக்கில் நிலுவையில் உள்ள வட்டியுடன், கணக்கு வைத்திருப்பவர்களுக்கு செலுத்தப்படும். இந்த கணக்கு முதிர்ச்சியடைந்த பிறகும் இந்த கணக்கு மூடப்படாவிட்டால், மீதமுள்ள தொகைக்கு தொடர்ந்து வட்டி கொடுக்கப்படும். ஆக உண்மையில் இது பெண் குழந்தைகளுக்கு ஏற்ற ஓரு சேமிப்பு திட்டமாக பார்க்கப்படுகிறது.

எவ்வளவு வட்டி?
மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள அரசின் இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 வருடங்கள் அல்லது அந்த பெண் 18 வயதிற்கு மேல் திருமணம் ஆனாலும் அந்த கணக்கு தானாகவே மூடப்படும். இதற்கான வட்டி விகிதம் ஏப்ரல் - ஜூன் 2020 நிலவரப்படி 7.6% ஆகும். இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒரு முறை அரசால் மாற்றம் செய்யப்படும். இது முதலீட்டுக்கு பங்கமில்லாமல், கணிசமான லாபத்தினை கொடுப்பதால், பெண் குழந்தைகளின் வருங்காலத்திற்கு ஏற்ற ஒரு பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது.

எப்படி SSY கணக்கினை தொடங்குவது?
இந்தியாவில் உள்ள எந்தவொரு அஞ்சல் அலுவலகத்திலும் இந்த கணக்கினை தொடங்கி கொள்ள முடியும். ஆக அஞ்சலகங்களில் நீங்கள் இந்த கணக்கினை தொடங்க முடியும். இல்லையேல் பொதுத்துறை அல்லது தனியார் துறை வங்கிகள் மூலம் தொடங்கி கொள்ளலாம். அப்படி இல்லையெனில் ஆர்பிஐயின் இணையதளத்தில் https://rbidocs.rbi.org.in/rdocs/content/pdfs/494SSAC110315_A3.pdf இந்த படிவத்தினை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

வங்கிகளிலும் தொடங்கலாம்
இது தவிர பொதுத்துறை வங்கிகளான எஸ்பிஐ, பிஎன்பி, பிஓபி வங்கிகளின் இணையத்திலும் டவுன்லோடு செய்து கொள்ளலாம். இது தவிர தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்டவற்றின் இணையத்தளத்தில் இருந்தும் பெறலாம்.

விண்ணப்பத்தில் என்னென்ன செய்ய வேண்டும்?
இணையத்தில் இருந்து டவுன்லோடு செய்யப்பட்ட விண்ணப்பத்தில் குழந்தையின் பெயர், பெற்றோரின் பெயர், எவ்வளவு தொகை ஆரம்பத்தில் முதலீடு செய்யப்போகிறீர்கள். அதனை டிடியாக கொடுக்க போகிறீர்களா? அல்லது செக் என்றால் அதன் எண், மற்றும் தேதியை குறிப்பிட வேண்டியிருக்கும். அதனுடன் குழந்தையின் பிறந்த தேதி, பிறப்பு சான்றிதழ் விவரங்கள், பெற்றோரின் அடையாள ஆவணங்கள், பான் எண் என பல விவரங்கள் கொடுக்கப்பட வேண்டியிருக்கும்.

விண்ணப்பத்தினை எங்கு கொடுப்பது?
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை, உங்களது கையொப்பமிட்டு, அதனை சம்பந்தபட்ட அஞ்சல் அலுவலகத்திலோ அல்லது நீங்கள் கணக்கு தொடங்க நினைக்கும் சம்பந்தப்பட்ட வங்கிகளிலோ கொடுத்து, அதனுடன் சரியான ஆவணங்களையும் இணைத்து இந்த கணக்கினை தொடங்கிக் கொள்ளலாம். இங்கு அடையாள அட்டையாக பெற்றோரின் ஆதார் அல்லது ஓட்டுனர் உரிமம், அடையாள ஆவணமாக பான் அட்டையும் கொடுக்க வேண்டியிருக்கும்.

எப்படி தெரிந்து கொள்வது?
உங்களது சுகன்யா சம்ரிதி கணக்கு எந்த வங்கிக் கிளையில் நிர்வகிக்கப்படுகிறதோ? அந்த வங்கியின் நெட் பேங்கிங் மூலமாக எளிதாக நிலுவையை தெரிந்து கொள்ளலாம். அதற்காக உங்களது இணைய வங்கியிலேயே ஆப்சன் உள்ளது. அல்லது பாஸ்புக் மூலமாகவும் நீங்கள் அவ்வப்போது வங்கிக் கிளைக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம். இதே அஞ்சல் அலுவலகத்தில் நீங்கள் கணக்கினை தொடங்கியிருந்தால், நேரடியாக அலுவலகத்திற்கு சென்று மட்டுமே பேலன்ஸினை தெரிந்து கொள்ள முடியும்.

வரிச் சலுகை உண்டா?
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் ஒரு வேளை 21 வயது பூர்த்தியாவதற்குள், திருமணம் முடிந்துவிட்டால் கணக்கு தானாகவே மூடப்படும். இந்த சுகன்யா சமிரிதி திட்டத்தின் கீழ் செய்யப்படும் டெபாசிட் தொகைக்கு வருமான வரி சட்டத்தின் கீழ் 80சி-ன் படி அதிகபட்சமான 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ஆக சேமிப்புடன் கூடுதலாக வரிச்சலுகையும் உண்டு.

முன்கூட்டியே பணம் பெற முடியுமா?
பெண் குழந்தையானது 18 வயதை அடைந்த பிறகே பணம் திரும்ப பெற முடியும். ஆனால் அதுவும் நிலுவையில் 50% தொகையினை குழந்தையின் கல்விச் செலவினங்களுக்காக பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் நீங்கள் ஒரு வேளை உங்களது சுகன்யா சம்ரிதி கணக்கினை இடையில் தொடராவிட்டால், 15 வருடங்கள் கழித்து வட்டியுடன் திரும்ப பெற முடியும்.

இடையில் நிறுத்தப்பட்ட கணக்கினை மீண்டும் தொடங்கலாமா?
ஒரு வேளை உங்களது கணக்கினை இடையில் நிறுத்திவிட்டால், மீண்டும் தொடரலாம். இதற்காக குறிப்பிட்ட தொகையை அபராதமாக விதிக்கப்படும். இந்த அபராதத்தினை செலுத்தி விட்டு மீண்டும் கணக்கினை தொடரலாம். ஆக குறிப்பிட்ட காலம் செலுத்திவிட்டு, தவிர்க்க முடியாத காரணங்களால் இடையில் முதலீட்டினை தொடர முடியாமல், பின்னர் தொடரலாம் என நினைப்பவர்களுக்கு இது மிக பயனுள்ளதாக இருக்கும்.

வேறு வேறு வங்கிக்கு கணக்கை மாற்றலாமா?
ஒரு வங்கிக் கிளையில் இருந்து இன்னொரு கிளைக்கு உங்களது கணக்கினை மாற்ற முடியும். அதுவும் இந்தியாவின் வேறு எந்தவொரு பகுதிக்கும் மாற்றிக் கொள்ள முடியும். இதற்காக நீங்கள் டிரான்ஸ்பர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, அதனை உங்களது கணக்கு நிர்வகிக்கப்படும் சம்பந்தபட்ட வங்கிக் கிளையில் அல்லது அஞ்சல அலுவகத்தில் கொடுக்க வேண்டும்.

இடையில் கணக்கினை மூடிக் கொள்ளலாமா?
முதிர்வு காலத்திற்கு முன்பே, உங்களது கணக்கினை எதிர்பாராத விதமாக ஏற்படும் முக்கிய காரணங்களுக்கான மூடிக் கொள்ளலாம். அதாவது தீவிர நோய், அல்லது முதன்மை கணக்கு வைத்திருப்பவர் ஒரு வேளை எதிர்பாராத விதமாக இறந்து விட்டால், கணக்கினை முடித்துக் கொள்ளலாம். பெண் குழந்தையின் மேற்படிப்பு செலவுக்கு பணம் தேவையென்றால், 18 வயது நிரம்பியவுடன் 50% சேமிப்பு நிதியை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிணையமாக வைத்து கடன் வாங்க முடியுமா?
சில திட்டங்களில் சேமிப்புக்கான ஆதாரத்தினை காட்டி வங்கிகளில் கடன் பெற முடியும். அதே போல இந்த பெண் குழந்தைகளுக்கான திட்டத்தில் கடன் வாங்க முடியாது. ஆனால் இதுவும் நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் இடையில் இதனை எதற்காகவும் நீங்கள் பயன்படுத்த முடியாதே.
நாட்டில் பல சேமிப்பு திட்டங்கள் இருந்தாலும், இதுபோன்ற திட்டங்களில் ரிஸ்க் இல்லாத, பாதுகாப்பான முதலீட்டு திட்டங்கள் மக்களிடம் அதிக வரவேற்பினை பெற்றுள்ளது. உண்மையில் பெண் குழந்தைகளுக்கு ஏற்றதொரு நல்ல திட்டம் தான்.

அஞ்சல கணக்கிற்கு எப்படி ஆன்லைனில் பணம் அனுப்புவது?.
அஞ்சலத்தில் நீங்கள் இந்த கணக்கினை தொடங்கியிருந்தால், உங்களது வங்கிக் கணக்கில் இருந்து, உங்களது IPPB (India Post Payments Bank) கணக்கினை இணைத்துக் கொள்ளலாம். அதன் மூலம் நீங்கள் பணத்தினை டெபாசிட் செய்து கொள்ளலாம். அங்கு DOP என்ற ஆப்சனை கிளிக் செய்யவும், அதில் சுகன்யா சம்ரிதி யோஜனா கணக்கினை கிளிக் செய்யவும். அதன் பிறகு உங்களது ssy நம்பரை கொடுக்க வேண்டும். அதன் பிறகு DOP வாடிக்கையாளர் ஐடியை கேட்கும். அதனை பதிவு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு எவ்வளவு காலம் செலுத்த வேண்டும், எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்பதை கொடுத்து பதிவு செய்தபிறகு பணத்தினை பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இந்த ஆப்சன் மூலம் நீங்கள் மற்ற சேமிப்பு கணக்குகளுக்கும் பணம் செலுத்திக் கொள்ளலாம்.

அரசின் DakPay digital payments app
கடந்த மாதம் அரசு DakPay digital payments app என்ற ஆப்சனை தொடங்கியது. இதன் மூலமும் நீங்கள் அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு பணம் செலுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம் மற்ற பண பரிவர்த்தனைகளையும் செய்து கொள்ள முடியும். ஸ்கேன்னிங் மூலம் QR கோடினை ஸ்கேன் செய்தும் பேமெண்ட் செய்து கொள்ள முடியும்.