இன்றைய காலகட்டத்தில் சொந்த வீடு என்பது பலருக்கும் ஒரு சவாலான ஒரு விஷயமே. எனினும் நம்மில் பலருக்கும் இது தான் வாழ் நாள் கனவாகவே இருக்கும். அப்படியான கனவு நிறைவேற, இது சரியான நேரம் என்று தான் கூற வேண்டும்.
ஏனெனில் வீடு கட்ட வேண்டும் என்றாலே, அங்கு முதலாவது தடையாக நிற்பது நிதி பிரச்சனை தான். அந்த நிதி பிரச்சனையை தீர்க்க ஒரு வழி வீட்டுக் கடன். அந்த கடனும் குறைந்த வட்டியில், பல்வேறு சலுகைகளுடன் கிடைக்கிறது எனில், இது சரியான வாய்ப்பு தானே. ஆக இது சரியான நேரம் தான்.
அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியில் எவ்வளவு வட்டி? என்னென்ன சலுகை வாருங்கள் பார்க்கலாம்.

எஸ்பிஐ-யில் வட்டி குறைப்பு
இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) தற்போது வட்டி விகிதத்தில் 70 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளது. இதன் மூலம் வட்டி விகிதம் 6.70% ஆக குறைத்துள்ளது. வட்டி குறைப்பு மட்டும் அல்ல, செயல்பாட்டுக் கட்டணம் 100 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இது சரியான நேரம்
இந்த வட்டி சலுகையானது அவரவர் சிபில்ஸ்கோரினை பொறுத்து இருக்கும் என்றும் எஸ்பிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. வீட்டு கடன் வழங்குவதில் முன்னணி வங்கியாக இருக்கும் எஸ்பிஐ, தொடர்ச்சியாக அவ்வப்போது பல சலுகைகளை வழங்கி வருகின்றது. ஆக தேவை இருக்கும் பட்சத்தில் இது வீட்டு கடன் வாங்க சரியான நேரமாக பார்க்கப்படுகிறது.

இஎம்ஐ குறையும்
எஸ்பிஐ-யின் இந்த சலுகையினால் நீங்கள் மாதந்தோறும் செலுத்தும் இஎம்ஐ தொகையானது குறையும். நல்ல கிரெடிட் ஸ்கோர் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 75 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக்கடனுக்கு 6.70% வட்டியும், இதே 75 லட்சம் ரூபாய்க்கு மேலாக வீட்டு கடனுக்கு 6.75 சதவீத வட்டியும் விதிக்கப்படுகிறது.

யோனோ ஆப் மூலம் பதிவு செய்தால் சலுகை
வாடிக்கையாளர்கள் தங்களது கடனை எஸ்பிஐ-யின் யோனோ ஆப் மூலமாக விண்ணப்பித்தால், கூடுதலாக 5 அடிப்படை புள்ளிகளை வட்டியில் சலுகையாக பெற முடியும். அதிலும் பெண்கள் எனில் இன்னும் கூடுதலாக 5 அடிப்படை புள்ளிகளை வட்டி சலுகையாக பெற முடியும்.