ராகுல் பாட்டியாவின் தந்தையின் 20 ஆண்டுகால டிராவல்ஸ் பிஸினஸான தில்லி எக்ஸ்பிரஸ் திவாலானதால் கடுமையான சிரமத்துக்கு ஆளானார்.
அப்போது ராகுல் பாட்டியா தனது தந்தைக்கு உதவ நினைத்து, இன்டர்குளோப் என்ற நிறுவனத்தை தொடங்கி டிராவல்ஸ் துறையில் புதிய தளத்தை உருவாக்கினார்.
காலப்போக்கில், அவர் அதை பயண தொழில்நுட்பம், விருந்தோம்பல் மற்றும் வணிக ஜெட் விமானங்களில் ஒரு கூட்டு நிறுவனமாக மாற்றினார்.
2004 இல் இண்டிகோ ஏர்லைன்ஸ்-ஐ உருவாக்கினார். அதிகரித்து வரும் எரிபொருள் விலையால் அனைவரும் விமான நிறுவனத்தை இயக்க முடியாமல் அதிகப்படியான நஷ்டத்தை எதிர்கொண்டனர்.
அந்த நிலையில், 2005 ஆம் ஆண்டு பாரிஸ் விமான கண்காட்சியில் $6.5 பில்லியன் மதிப்புள்ள 100 ஏர்பஸ் ஏ320-200 விமானங்களை ராகுல் ஆர்டர் செய்தார். 2006 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி இண்டிகோவின் முதல் ஏர்பஸ் விமானத்தை டெலிவரி செய்தார்.
இறுதியாக ஆகஸ்ட் 4, 2006 அன்று இண்டிகோ முதல் முறையாக புது தில்லியிலிருந்து குவாஹாட்டி வழியாக இம்பாலுக்கு பறந்தது. அதுவும் கூடுதல் சேவைகள் இல்லாத குறைந்த விலையுள்ள விமானத்தை இயக்கினார்.
இந்த வெற்றியை தொடர்ந்து ராகுல் 2007 இல், மேலும் 15 விமானங்களை வாங்கினார். 2010 இல் இண்டிகோ நிறுவனம் ரூ.2664 கோடி விற்பனையை தொட்டது.
2010 இல் இந்தியாவின் இரண்டு பெரிய தனியார் விமான நிறுவனங்களான ஜெட் ஏர்வேஸ் மற்றும் கிங்ஃபிஷர் ரூ.2,114 கோடி நஷ்டம் அடைந்த அதே நேரத்தில் இண்டிகோ ரூ.550 கோடி லாபம் ஈட்டியது.
17.3% சந்தை பங்குகளுடன் இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிறுவனமாக மாறியது. 2011ல், இண்டிகோ நிறுவனம் சர்வதேச விமானங்களை இயக்க அனுமதி பெற்றதால், 15 பில்லியன் டாலர் மதிப்புள்ள 180 ஏர்பஸ் ஏ320 நியோ விமானங்களை ராகுல் ஆர்டர் செய்தார்.
2013ல், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை முறியடித்து 27% சந்தை பங்கை பெற்று, இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமாக மாறியது.
2015ல் இண்டிகோ 44,290 கோடி சந்தை மதிப்பை தொட்டது. இன்று இண்டிகோ 100 இடங்களுக்கு தினமும் 1800 விமானங்களை இயக்குகிறது. அதோடு, 702 கோடி லாபத்துடன் ஆண்டுக்கு 54,000 கோடி வருவாய் ஈட்டுகிறது.