பிரதமர் மோடியின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருப்பவர் நிர்மலா சீதாராமன். தற்போது கர்நாடகா ராஜ்யசாபா எம்.பி ஆக உள்ளார்.
தமிழ்நாடு, ஆந்திராவில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு பணமில்லை என நிர்மலா சீதாராமன் கூறியது கடந்த 2 நாட்களாக தேசிய அளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலுக்காக அவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தனது சொத்து விபரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்து இருந்தார்.
அதில் நிர்மலா சீதாராமன் தனது ஆண்டு வருமானம் ரூ.8.08 லட்சம் என்ற அளவில் உள்ளதாகவும், கடனாக ரூ.30.44 லட்சம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது பெயரில் ரூ.17 லட்சம் மதிப்பிலான விவசாயம் சாராத நிலம், ரூ.35.52 லட்சம் மதிப்புள்ள வங்கி டெபாசிட்கள் மற்றும் ரூ.18.39 லட்சம் மதிப்பிலான நகைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ரூ.1.87 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும், ரூ.69.12 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துகளும் என மொத்தம் 2.56 கோடி இருப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.