சீனாவின் மிகப் பிரபலமான அலிபாபா நிறுவனத்தின் மீது, சமீப காலமாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது.
இதற்கிடையில் உலகின் மிக பிரபலமான நிறுவனமான அலிபாபாவின் நிறுவனர் ஜாக் மாவை கடந்த இரண்டு மாதங்களாக காணவில்லை. இது சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான மத்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்துடன் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு, இரண்டு மாதங்களாக அவரை காணவில்லை என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.
விவசாயிகள் போராட்டம்.. ஜியோ டவர்கள் சேதம்.. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு.. வோடபோன், ஏர்டெல் பளிச்..!

ஜாக் மா எங்கே?
உலகளவில் மிகப் பெரிய, மிக பிரபலமான தொழிலதிபரான ஜாக் மா, அவரது டேலன்ட் ஷோ ஆப்பிரிக்காவின் பிசினஸ் ஹீரோஸ் நிகழ்ச்சியின் இறுதி எபிசோடில் நடுவராக பங்கெடுக்க இருந்தார். ஆனால் அவர் அந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. சீனாவின் பெரும்பாலான தொழிலதிபர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படையாக வெளியிடுவதில்லை.

சீன அரசை கடுமையாக விமர்சனம்
ஆனால் ஜாக் மாவோ வித்தியாசமானவர். சொல்லப்போனால் அவ்வப்போது எதையேனும் ஒன்றை சொல்லிவிட்டு பின்னர் மாட்டிக் கொள்வார். இந்த முறையும் அப்படித் தான். கடந்த அக்டோபர் மாதம் ஷாங்காயில் தான் ஆற்றிய உரையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசாங்கத்தினுடைய நிதி கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான வங்கிகள் குறித்து கடுமையாக பேசினார்.

சீன கோபம்
அதோடு மேலும் வணிக கண்டுபிடிப்புகளையும் புதிய முயற்சிகளையும் தடுக்கும் வகையில் இருக்கும் அமைப்பைச் சீர்திருத்த வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். உலகளாவிய வங்கி விதிமுறைகளை பழமைவாத அமைப்புகளுடன் அவர் ஒப்பிட்டார். ஜாக் மாவின் இந்த பேச்சு சீன அரசாங்கத்தை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியதாகவும் செய்திகள் அப்போது வெளியாகின.

ஐபிஓவுக்கு தடை
இதற்கிடையில் தான் ஜாக் மாவின் மீது சீனாவின் கவனம் திரும்பியது. சீன அதிபர் ஜின்பிங்கின் நேரடி உத்தரவின் பேரில், அவரது ஆண்ட் குழுமத்தின் 37 பில்லியன் டாலர் பொது பங்கு வெளியீடு நிறுத்தப்பட்டதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியது. இதே ப்ளூம்பெர்க் கூற்றுப்படி, கிறிஸ்துமஸ்துக்கு முந்தைய நாள், தனது அலிபாபா குழும விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பு, ஜாக் மா சீனாவில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஜாக் மாவை காணவில்லையே
அதன் பிறகு தான் ஒரு அவசர வேலை காரணமாக ஜாக் மாவால் இந்த ஆண்டின் ஆப்பிரிக்காவின் வணிக ஹீரோக்களின் ஃபைனலின் நடுவர் குழுவின் ஒரு பகுதியாக இருக்க முடியாது என்று அலிபாபா செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஆனால் தற்போது வரையில் அவரை எந்த செய்தி நிறுவனங்களோ எங்கும் வெளியில் காண முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆக அவர் காணாமல் போனதில் சீன அரசாங்கத்திற்கு ஏதாவது தொடர்பு இருக்குமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.