"போரிடும் நாடுகள் தங்களின் வலிமையை ஒப்பிட்டு பார்த்து, அவனை என்னால் எளிதில் வெல்ல முடியும் அல்லது அவனை என்னால் நிச்சயம் ஜெயிக்கவே முடியாது என ஏதோ ஒரு முடிவை ஏற்றுக்கொள்ளும் போது போர்கள் தொடக்கத்திலேயே முடிவடைகின்றன. அந்த நாடுகள் தங்களின் வலிமை ஒப்பீடுகளை ஏற்று கொள்ளாத போது நிஜப் போர்கள் தொடங்குகின்றன" என்கிறார் ஜெஃப்ரி பிளேனி என்கிற வரலாற்று ஆசிரியர்.
இந்தியாவின் இரு பெரு எல்லைகள் என்றால் சீனா மற்றும் பாகிஸ்தான் தான். இந்தியாவிடம் அணு ஆயுதங்கள் இருப்பது போல இந்த இரண்டு நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் இருக்கின்றன. அதோடு இந்த இரண்டு நாடுகளோடு இந்தியா சில முறை நேரடியாக போரிட்டு இருக்கிறது.
அதோடு எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற ரீதியில் சீனாவும், பாகிஸ்தானும் ஜிகினி தோஸ்துகள் வேறு. இந்த அணு ஆயுதம் என்கிற சமாச்சாரம் தான் இந்தியாவின் ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீட்டை சாதாரணக் குடிமகன் வரை கவனிக்க வைக்கிறது.

2014-ல் பாஜக
பாஜக பொறுப்பேற்ற அருண் ஜெட்லி போட்ட 2014 - 15 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 2.33 லட்சம் கோடி ரூபாய் ராணுவத்துக்கு அறிவித்தார். 2013 - 14 நிதியாண்டில் காங்கிரஸ் அறிவித்ததை விட 9% கூடுதல் தொகை தான். இத்தனைக்கு பாதுகாப்புத் துறை அமைச்சராக அன்று பதவியில் இருந்தது அன்றைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தான். ஆக எதிர்பார்த்த படியே நிதியும் கொஞ்சம் கூடுதலாக வந்தது.

ராணுவத்தினர் மத்தியில்
2015 -ம் ஆண்டு இந்தியாவின் முக்கியமான விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா கப்பலை நாட்டுக்கு சமர்பித்த போது "வல்லரசு நாடுகள் ராணுவத்தில் அதிக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இந்தியா ஒரே நேரத்தில் தொழிற்நுட்பத்தைப்புகுத்தி தன்னை நவீன்ப்படுத்திக் கொள்ளவும், ஆட்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளவும் முயல்கிறது" என்றார்.

2015 - 16 நிதியாண்டுக்கு
பாரதிய ஜனதா கட்சி தன் முதல் முழு ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்த போது, 2015 - 16 நிதியாண்டுக்கு 2.55 லட்சம் கோடி ரூபாய் அறிவித்தது. 2014 - 15 நிதி ஆண்டில் பாஜக அறிவித்த தொகையை விட மீண்டும் 9% அதிகம். மீண்டும் ராணுவத்தினருக்கு சந்தோஷம். ஒரு அரசு ராணுவ நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை அறிந்த அரசு தங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதை பார்த்து சந்தோஷப்படாதா என்ன..? மீண்டும் 2016 - 17 நிதியாண்டுக்கு 2.58 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியது பாஜக அரசு. இதற்கும் ராணுவ தரப்பு மகிழ்ந்து கொண்டது.

பாஜகவின் 3-வது & 4-வது பட்ஜெட்
2017 - 18 நிதி ஆண்டில் ராணுவத்தினருக்கு 2.74 லட்சம்கோடி ரூபாய் நிதி. முந்தைய ஆண்டை விட 6% அதிக நிதி. அடுத்த 2018 - 19 நிதி ஆண்டில் ராணுவத்தினருக்கு 2.95 லட்சம் கோடி ரூபாய் 2017 - 18-ஐ விட 8% கூடுதல் நிதி. ஆனால் ராணுவம் திருப்தி பட்டதே ஒழிய சந்தோஷப்பட வில்லை. காரணம் அவர்கள் எதிர்பார்த்த நிதி அத்தனை அதிகம்.ராணுவ மேலதிகாரிகளோ தொழில் நுட்பத்தில் இந்திய ராணுவம் முழுமையாக திருப்தி அடையாமல் ஆட்களை குறைத்தால் பிரச்னை எழும் என்று ஆணிதத்ரமாக நம்பியது.

பியுஷ் கோயல்
மொத்த இந்திய பட்ஜெட் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்திய ராணுவத்துக்கு 3.18 லட்சம் கோடி ரூபாய் அறிவித்து ராணுவத்தினர் வயிற்றில் பால் வார்த்தார். 2018 - 19 நிதி ஆண்டை விட இதுவும் 8% கூடுதல் நிதி. இப்போதும் ராணுவத்தினருக்கு திருப்தி தானாம். ஏன் என்ன பிரச்னை..?

பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள்
எப்போதுமே இந்திய ராணுவத்தின் தேவையான பணமும், கிடைக்கும் பணத்தின் அளவுக்கும் ஒரு இடைவெளி இருந்து கொண்டே தான் இருக்கும். ஆக எப்போதுமே ஒரு ஆண்டில் எனக்கு 3.5 லட்சம் கோடி கொடு எனக் கேட்டால் அதை அப்படியே கொடுத்ததில்லை.

பாஜவே சொல்லி இருக்கிறது
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான மனோகர் ஜோஷி "இந்தியாவின் மொத்த ஜிடீயில் ராணுவச் செலவுகள் 1.56% ஆக இருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரமே தன்னிறைவடையாத போது, இந்திய ராணுவத்துக்கு எப்படி அதிக நிதி ஒதுக்க முடியும்" எனக் கேள்வி எழுப்புகிறார், அதோடு ராணுவம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு நாட்டை நடத்துவதும் முக்கியம் என ஒரு பஞ்சும் கொடுத்திருக்கிறார்.

எல்லாவற்றிலும் தாமதம்
2017-ம் ஆண்டில் போட்ட திட்டங்களுக்கான வேலைகளை 2018-ம் ஆண்டில் தான் முடிகிறது. இதனால் மக்கள் 1 ருபாயில் முடிய வேண்டிய வேலை 1.10 பைசா என விலை வாசி அதிகரித்து நிதி யும் பற்றாக்குறையாக இருக்கிறது. அதோடு விமானப் படைக்கு ஒதுக்கும் தொசை கணிசமாக குறைந்து வருகிறது. 2007 - 08-ல் மொத்த ராணுவ பட்ஜெட்டில் விமானப் படைக்கு 17.51 % ஒதுக்கீடு. 2016 - 17-ல் மொத்த ராணுவ பட்ஜெட்டில் விமானப் படைக்கு 11.96 % ஒதுக்கீடு. ஆனால் நம் எல்லையில் இருக்கும் சீனா தன் நிதி ஒதுக்கீடு தொடங்கி, ஆட்கள் வரை அனைத்திலும் சீன விமானப் படை தன்னை அதிகப்படுத்தி பலப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இந்தியாவுக்கு ரஃபேல் தொடங்கி, FICV - future infantry combat vehicles வரை பல்வேறு தேவையான திட்டங்களே இன்னும் கிடப்பில் தான் இருக்கின்றன. அவைகளை எல்லாம் முடித்து கேட்பதை கேட்ட நேரத்தில் கொடுக்க வேண்டும். அப்போது தான் மலையாக இருந்தாலும் மோதிப் பார்க்கலாம். புயலாக இருந்தாலும் பழகிப் பார்க்கலாம்.
சுருக்கமாக சீனாவை வெல்ல அல்லது சீனா உடன் போர் புரிய இந்த நிதி ஒதுக்கீடுகள் மட்டும் போதாது, விரைவாக செயல்பட்டு ராணுவ தளவாடங்கள் தொடங்கி ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் சம்பளம் வரை அனைத்தையும் சரி செய்ய வேண்டும் அப்போது தான் இந்திய ராணுவம் அதன் மிடுக்கோடும், பலத்தோடும் இருக்கும்.