"இந்த அமெரிக்கா சீன தொல்லை தாங்க முடியலிங்க" என ஒரு சாமானியன் கூட புலம்பும் அளவுக்கு வந்துவிட்டது இவர்கள் பிரச்சனை.
அந்த அளவுக்கு இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த பிரச்சனையை சுமூகமாக முடிக்க இரு நாட்டு தரப்பினர்களும் தயாராக இல்லையோ என்று தான், சமீபத்தைய உதாரணங்கள் நமக்குச் சொல்கின்றன.
அப்படி சமீபத்தில் என்ன நடந்தது? இப்போது அமெரிக்காவுக்கு சீனா என்ன செக் வைத்துவிட்டது. ஏன் சர்வதேச அரசியல் வெப்பம் அதிகரித்துக் கொண்டே போகிறது. வாருங்கள் ஒவ்வொன்றாகப் பார்ப்போம். முதலில் அமெரிக்க சீன பிரச்சனை அதிகரிக்கத் தொடங்கிய இடத்தில் இருந்து பார்ப்போம்.

வர்த்தகப் போர் தான் ஆரம்பம்
கடந்த 2018-ம் ஆண்டு சீன பொருட்கள் மீது பில்லியன் டாலர் கணக்கில் வரி விதித்தது அமெரிக்கா. அதற்கு சீனாவும் தன் தரப்பில், அமெரிக்க பொருட்கள் மீது பில்லியன் டாலர் கணக்கில் வரி விதித்தது. இது தான் அமெரிக்கா சீனா புகைச்சல் அதிகரிக்கும் முக்கியப் பிரச்சனை. அதற்கு முன்பு வரை, அமெரிக்காவைப் பொறுத்த வரை, சீனா என்கிற நாடு, ஈரோடு பக்கம் தூத்துக்குடி பக்கம் இருக்கும் ஒரு சக நாடு என்கிற ரேஞ்சில் தான் பார்த்துக் கொண்டிருந்தது. இதைத் தான் நாம் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தகப் போர் என்கிறோம்.

இரு பெரும் நாடுகள்
இந்த வர்த்தகப் போரால், ஒட்டு மொத்த உலக ஏற்றுமதி இறக்குமதி கூட பாதிப்புக்கு உள்ளானது. இந்த பஞ்சாயத்தை சுமூகமாக பேசித் தீர்த்துக் கொள்ள, இரு தரப்பும் சேர்ந்து ஒரு டிரேட் டீல் கொண்டு வந்தார்கள். ஜனவரி 2020 கால கட்டத்தில் தான் சீனா மற்றும் அமெரிக்கா, டிரேட் டீலின் முதல் பாகத்தை ஒப்புக் கொண்டு கையெழுத்து போட்டார்கள். அந்த டீலின் படி, சிவப்பு கொடி கொண்ட சீனா, அமெரிக்காவிடம் இருந்து 200 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும், என்பது தான் டீலின் மிக முக்கிய அம்சம்.

கொரோனா வைரஸ்
அதன் பிறகு கொரோனா வைரஸ் மெல்ல உலகம் முழுக்க பரவத் தொடங்கியது. சீனாவில் பரவியது வரை அமெரிக்காவுக்குப் பிரச்சனை இல்லை. ஆனால் அமெரிக்காவில் பரவத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் உலகிலேயே, மிக அதிகமாக கொரோனா வைரஸ் பரவி இருக்கும் நாடாக மாறிவிட்டது அமெரிக்கா. அவ்வளவு தான் சீனாவை, தன் வார்த்தைகளால் பொறிக்கத் தொடங்கிவிட்டர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். சீனா & அமெரிக்காவுக்கு இடையிலான புகைச்சல் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

உதாரணம் 1 டிரேட் டீல் மிரட்டல்
சில வாரங்களுக்கு முன்பு "சீனா முறையாக டிரேட் டீலில் சொல்லி இருப்பது போல 200 பில்லியன் டாலருக்கு அமெரிக்க பொருட்களை வாங்க வேண்டும். கொரோனாவை காரணம் காட்டி அமெரிக்க பொருட்களை, சீனா வாங்க மறுத்தால், மொத்த டிரேட் டீலையும் ரத்து செய்து விடுவேன், பார்த்துக்குங்க" என, ஒரு பலமான மிரட்டலை கொடுத்தார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அதோடு விட்டாரா மனிதர்..? என்றால் இல்லை.

உதாரணம் 2 உறவு முறிப்பு மிரட்டல்
"அமெரிக்க நாடு, சீனா உடனான உறவை, முழுமையாக முறித்துக் கொள்ள முடியும். அப்படி முறித்துக் கொண்டால், அமெரிக்க நாட்டுக்கு சுமாராக 500 பில்லியன் டாலர் இறக்குமதி செலவுகள் குறையும்" எனச் சொல்லி உலக பொருளாதார அமைப்புகளுக்கே பகீர் கிளப்பினார், அமெரிக்க அதிபர் ட்ரம்ப். சீனா இப்போதும் பெரிதாக வாய் திறக்கவில்லை. மாறாக "நடந்தது நடந்துவிட்டது. அடுத்த செய்ய வேண்டிய வேலைகளைப் பார்ப்போம்" என நட்புக் கரம் நீட்டியது சீனா. ஆனால் ட்ரம்ப் அதை கண்டு கொள்ளவே இல்லை.

உதாரணம் 3 தனி மனித தாக்குதல்
ட்ரம்ப் பொத்தம் பொதுவாக, அதை செய்வேன், இதை செய்வேன் என மிரட்டிக் கொண்டிருந்தவர், சில வாரங்களுக்கு முன் "சீனாவின் பேச்சாளர் முட்டாள் தனமாகப் பேசுகிறார். சீனா, உலகம் முழுக்க பரப்பிய கொரோனா வைரஸால் ஏற்பட்ட வலி மற்றும் இறப்புகளை திசை திருப்பப் பார்க்கிறார் சீன பேச்சாளர்" என ட்ரம்ப் தன் ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்து, ஒரு கருத்தைச் சுட்டிக் காட்டி தாக்கத் தொடங்கினார்.

உதாரணம் 4 கார சார குற்றச்சாட்டு
"சீனா ஒரு மிகப் பெரிய பொய் பிரச்சாரத்தில் இருக்கிறது. ஏன் என்றால், சீனாவுக்கு தூங்கி வழியும் ஜோ பிடன் அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால், நான் வருவதற்கு முன்பு வரை, பல ஆண்டுகளாக சீனா, அமெரிக்காவை ஏமாற்றியது போல ஏமாற்றலாம்." என சீனாவை, சர்வதேச அரங்கில் வைத்து செய்தார் ட்ரம்ப். இப்போது கூட சீனா பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை.

ட்ரம்பின் பிரம்மாஸ்திரம்
அமெரிக்கா, சீனாவின் சிங் ஜியாங்க் பகுதியில் வாழும் உய்கர் இஸ்மாலிமியர்கள் பிரச்சனையைக் கையில் எடுத்தது. சீனா உக்ரமடைந்து விட்டது. Uyghur Human Rights Policy Act of 2020-ஐக் கொண்டு வந்தது அமெரிக்கா. இந்த சட்டத்தை கடந்த 17 ஜூன் 2020 அன்று தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் கொடுத்து சட்டமாக்கினார். இந்த சட்டத்தின் வழியாக, உய்கர் இன மக்கள், சீனாவின் சிங் ஜியாங் பகுதியில் நடத்தப்படுவதைக் குறித்தும், சிங் ஜியாங்கில் இருக்கும் மறு கல்வி கேம்புகளைக் குறித்தும் பேச பல நாடுகளுக்கும் வழிவகுக்கிறது.

சட்டத்தில் சீனாவுக்கு செக்
இந்த Uyghur Human Rights Policy Act of 2020 சட்டத்தைச் சுட்டிக் காட்டி சீன அதிகாரிகள், அமெரிக்காவுக்குள் வருவதை தடை செய்யலாம். அதோடு இந்த உய்க்ர் சட்டத்தை வைத்து, அமெரிக்காவில் இருக்கும், எந்த சீன அதிகாரியின் வங்கிக் கணக்கு மற்றும் சொத்துக்களையும் Freeze செய்யலாமாம். இதை எல்லாம் தெரிந்த கொண்ட பின் சீனா வெறுமனே வாய் மூடி இருக்குமா என்ன?

வெடித்த சீன பதிலடி
Uyghur Human Rights Policy Act of 2020 சட்டத்தைக் கொண்டு வந்ததால், சீனா சில தினங்களுக்கு முன்பு பதிலடி கொடுப்பேன் என கோபத்தில் கொக்கரித்தது. "சீனாவும், அமெரிக்காவை திருப்பித் தாக்கும். அன்று அமெரிக்கா அனைத்து பின் விளைவுகளையும் தாங்கிக் கொள்ள வேண்டி இருக்கும்" என உரக்கச் சொன்னது சீனாவின் வெளி உறவுத் துறை அமைச்சகம். அமெரிக்கா, சீனாவின் உள் விவகாரங்களில், தேவை இல்லாமல் தலையிடுகிறது. அமெரிக்கா தன் தவறை சரி செய்து கொள்ள வேண்டும். எனவும் சொன்னது சீனாவின் வெளி உறவுத் துறை அமைச்சகம்.

இறுகும் அமெரிக்க பிடி
Uyghur Human Rights Policy Act of 2020 சட்டம் ஒரு பக்கம் இருக்க, சமீபத்தில் "சீனாவிடம் இருந்து, அமெரிக்க, முழுமையாக பிரிந்து கொள்ளும் (Complete Decoupling) ஆப்ஷன் இன்னமும் இருக்கிறது" என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன் ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்து இருந்ததும் இங்கு நினைவு கூறத்தக்கது. சீனாவின் மிரட்டலுக்கு இப்படி பதில் கொடுத்தார் ட்ரம்ப். மேலும் ஒரு பிரச்சனையை இழுத்தார்.

புதிய சிக்கல் ஹாங்காங்
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா ஒரு புதிய பிரச்சனையை சொரிந்துவிட்டு இருக்கிறது "ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தை, சீன அரசு மீறுவதால், சீன அதிகாரிகளின் அமெரிக்க விசாக்களை restrict செய்வதாகச் சொன்னது". ஏற்கனவே செம கடுப்பில் இருக்கும் சீனா உடனடியாக தன் பதிலைச் சொல்லி ட்ரம்புக்கே செக் வைத்து இருக்கிறது.

சீனாவின் பதில்
அமெரிக்கா, ஹாங்காங்கை கையில் எடுத்ததால், சீனாவுக்கு வரும் அமெரிக்கர்களின் விசா மீது தடைகளை (Restriction) விதிக்க இருப்பதாகச் சொல்லி, அமெரிக்காவுக்கே செக் வைத்து இருக்கிறது சீனா. மேலும், அமெரிக்கா, ஹாங்காங் விவகாரத்தில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால், சீனா தகுந்த பதிலடி கொடுக்கும் எனச் சொல்லி இருக்கிறது.

பங்குச் சந்தை
ஏற்கனவே ஆசிய, அமெரிக்க, ஐரோப்பிய பங்குச் சந்தைகள் தடுமாறிக் கொண்டு இருக்கின்றன. இதில், அமெரிக்கா மேலும் மேலும் சீனாவை சீண்டுவதும், சீனாவும் "அமெரிக்கா தம்பி அடிச்சிருவேன் பாத்துக்க" என்கிற ரீதியில் பதில் கருத்து சொல்வதும், முதலீட்டாளர்களை கலக்கத்திலேயே வைத்திருக்கிறது. உலகின் இரு பெரும் பொருளாதாரங்கள், மற்ற சிறு பொருளாதாரங்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு அமைதி காத்தால் சரி. இல்லை என்றால் எல்லோருக்கும் நஷ்டம் தான்.