ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்துள்ள காரணத்தால், உக்ரைன் ஆதரவு நாடுகள் ரஷ்யா மீது தடை விதித்து வருவது மட்டும் அல்லாமல், ரஷ்யாவில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களும் வெளியேறி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் ரஷ்யா மீது தடை விதிக்காத முக்கிய நாடுகளில் சீனாவும் ஒன்றாக உள்ளது.
ரஷ்யாவில் இருந்து பல வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறி வரும் நிலையில் சீன நிறுவனங்கள் இதைப் புதிய வர்த்தக வாய்ப்பாகப் பார்க்கிறது.
மார்ச் மாதத்தில் 13 நாட்கள் விடுமுறையா? வங்கி ஸ்ட்ரைக்கும் இருக்கு.. கவனமா இருங்க!

DIDI குளோபல்
சீனாவின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனமான DIDI குளோபல் நிறுவனம் பல்வேறு காரணத்திற்காக ரஷ்யாவில் இருந்து மொத்தமாக வெளியேறுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது. DIDI குளோபல் அறிவிப்பின் படி மார்ச் 4ஆம் தேதி ரஷ்யாவில் இருந்து வெளியேறும் கடைசி நாள்.

புதிய வாய்ப்பு
ஆனால் உக்ரைன் மீதான போரின் காரணமாகத் தற்போது நிலைமை மொத்தமாக மாறியுள்ள நிலையில் சீனாவில் DIDI குளோபல் தனது முடிவை மாற்றித் தொடர்ந்து ரஷ்யாவில் சேவை அளிக்க உள்ளதாக DIDI வெளியிட்டு உள்ளது.

DIDI வர்த்தகம்
இதேபோல் தான் கஜகஸ்தான் நாட்டிலும் DIDI முன்பு சேவை நிறுத்த உள்ளதாக அறிவித்துத் தற்போது மீண்டும் சேவை அளிக்க உள்ளதாக முடிவை மாற்றியுள்ளது. DIDI நிறுவனம் ரஷ்யாவில் 1.5 வருடமாகவும், கஜகஸ்தானில் 1 வருடமாகவும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

சீனா திட்டம்
ஏற்கனவே சீனா ரஷ்யா மீது தடை விதிக்காதது மேற்கத்திய நாடுகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சீனா ரஷ்யா உடன் மிகப்பெரிய கச்சா எண்ணெய் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், தற்போது ரஷ்யாவில் சீனாவின் டெக் நிறுவனங்கள் நுழைய துவங்கியுள்ளது.

அமெரிக்காவில் ஐபிஓ
அமெரிக்காவில் ஐபிஓ வெளியிட்ட ஒரே காரணத்திற்காகச் சீனாவின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனமான DIDI குளோபல் நிறுவனத்தின் மீது சீன அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது மட்டும் அல்லாமல் அனைத்துச் சேவைகள், செயலிகளைச் சீனா ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியது.

ஹாங்காங் பங்குச்சந்தை
இது பெரும் பாதிப்பாக இருந்த நிலையில் DIDI குளோபல் அமெரிக்கப் பங்குச்சந்தையில் இருந்து வெளியேறி ஹாங்காங் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு, சீன அரசு சொன்ன அனைத்தையும் வாயை மூடிக் கேட்டுக் கொண்ட காரணத்தால் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.

சீன அரசு நிறுவனம்
ஆனால் இந்நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகள் சீன அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் பல்வேறு நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது. இதனால் DIDI குளோபல் தற்போது கிட்டதட்ட ஒரு சீன அரசு நிறுவனமாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

கூகுள் - RT
இதேவேளையில் ரஷ்ய நாட்டின் அரசு பத்திரிக்கை நிறுவனமான RT செயலியைக் கூகுள் நிறுவனம் உக்ரைன் நாட்டின் தனது கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து தடை விதித்து நீக்கியுள்ளது. இது உக்ரைன் நாட்டின் அரசு வேண்டுகோளின் படி நீக்கப்பட்டு உள்ளதாகக் கூகுள் தெரிவித்துள்ளது.