சீனாவில் முதன் முதலாக தோன்றிய தொற்று நோயானது இன்று உலகின் பெரும்பாலான நாடுகளையே படாதபாடு படுத்தி வருகின்றது.
இந்நிலையில் சீனாவில் இந்த தொற்று நோய் ஆரம்பித்து இருந்தாலும், முதலாவதாக அதிலிருந்து வெளியேறியது சீனா தான். இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டில் சீனாவின் ஜிடிபி விகிதம் 2.3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது கடந்த 1970 பிறகு ஒரு ஆண்டில் கண்ட மோசமான சரிவு என்றும் கூறியுள்ளது. கடந்த ஆண்டில் கொரோனாவின் காரணமாக சில மாதங்கள் நாடு தழுவிய லாக்டவுன் போடப்பட்ட நிலையில், அதே நேரம் அமெரிக்க - சீன வர்த்தக பிரச்சனை காரணமாகவும் பெரும் பின்னடைவை சந்தித்தது.

மெதுவான வளர்ச்சி
சொல்லப்போனால் சீனாவின் இந்த ஜிடிபி விகிதம் வீழ்ச்சி காணலாம் என்று கருதப்பட்ட நிலையில், அது சற்று வளர்ச்சி கண்டுள்ளது. இது சீனா வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டுள்ளதையே காட்டுகிறது. அதே சமயம் மற்ற பெரிய பொருளாதார நாடுகள் மந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சில முக்கிய பொருளாதார நாடுகள் மோசமான சரிவினைக் கண்டு வருகின்றன.

விரைவில் மீட்சி காணலாம்
அதனுடன் ஒப்பிடும்போது சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் தான் உள்ளது. ஆனால் வழக்கத்தினை விட சற்று வளர்ச்சி குறைந்துள்ளது. எனினும் இது விரைவில் மீண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மொத்தத்தில் சீன பொருளாதாரம் எதிர்பார்ப்பினை விட சரிவினைக் கண்டிருந்தாலும் வளர்ச்சி பாதையில் தான் உள்ளது. எனினும் வருடத்தில் ஜிடிபி விகிதம் இவ்வளவு சரிவினைக் கண்டுள்ளது பல தசாப்தங்களில் இதுவே முதல் முறையாகும்.

மூன்றாவது, நான்காவது காலாண்டு ஜிடிபி
சீனாவின் மூன்றாவது காலாண்டு வளர்ச்சி 4.9% இருந்த நிலையில், மிக வேகமாக வளர்ந்து கொண்டுள்ளது. இது நான்காவது காலாண்டில் 6.5% ஆக வளர்ச்சி கண்டுள்ளது. இது மிக வேகமான வளர்ச்சியாகும். குறிப்பாக தொழில்துறை உற்பத்தியானது நல்ல வளர்ச்சியினை கண்டுள்ளது. இது கடந்த டிசம்பரில் முந்தைய ஆண்டினை விட் 7.3% அதிகரித்துள்ளது.

வலுவான வர்த்தகம்
சீனாவின் வர்த்தகமும் வலுவான வளர்ச்சியினை கண்டு வருகின்றது. இதனால் சீனாவின் வர்த்தக உபரி முந்தைய ஆண்டினை காட்டிலும் 27% அதிகரித்து, 535 பில்லியன் டாலராக வரலாறு காணாத அளவு உச்சத்தினை தொட்டுள்ளதாக, கடந்த வாரம் வெளியான அதிகாரப்பூர்வ தரவுகள் கூறுகின்றன. அதோடு அதிகரித்து வரும் தேவை, வளர்ச்சிக்கு உறுதுணை புரியலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.