உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக் காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதாரச் சந்தை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் பல கோடி குடும்பங்கள் நிதி நெருக்கடியால் போராடியதை நாம் கண்முன்னே பார்த்திருப்போம்.
ஆனால் சில பணக்காரர் தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு இந்தக் கொரோனா லாக்டவுன் காலத்திலும் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது. இதைப்பற்றி PwC மற்றும் ஸ்விஸ் வங்கியான UBC இணைந்து செய்த ஆய்வில் ஒரு முக்கியமான தகவல் கிடைத்துள்ளது.
இந்த ஆய்வில் சுமார் 2000 பணக்காரர்களின் சொத்து மதிப்பு பெரிய அளவில் அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் கொரோனா பாதிப்பு நிறைந்த கடந்த 10 வருடத்தில் இவர்களின் சொத்து மதிப்பு சுமார் 10 டிரில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது.
இந்த 2000 வெற்றிகரமான தொழிலதிபர்களில் டாப் 5 பணக்காரர்களைத் தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.
புதிய உச்சத்தைத் தொட்ட அதானி க்ரீன் பங்குகள்..!

ஜெப் பிசோஸ்
உலகின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் குழுமத்தின் தலைவரான ஜெப் பிசோஸ் அவர்களின் சொத்து மதிப்பு 2019 அக்டோபர் மாதம் 114 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு ஜெப் பிசோஸ் அவர்களின் சொத்து மதிப்பு 184 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இதில் ஆகஸ்ட் மாதம் சில வாரங்களில் ஜெப் பிசோஸ்-ன் சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

மார்க் ஜூக்கர்பெர்க்
பேஸ்புக் நிறுவனத்தின் தலைவரான மார்க் ஜூக்கர்பெர்க்-ன் சொத்து மதிப்பு கடந்த ஏப்ரல் மாதம் 54.7 பில்லியன் டாலராக மட்டுமே இருக்கும் நிலையில், தற்போது இவரது சொத்து மதிப்பு 101.5 பில்லியன் டாலர் அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.

எலான் மஸ்க்
ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரும், நிறுவனருமான எலான் மஸ்க்-ன் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு வெறும் 23.9 பில்லியன் டாலராக மட்டுமே இருந்த நிலையில், கடந்த ஒரு வருடத்தில் எலான் மஸ்க்-ன் சொத்து மதிப்பு 300 சதவீதம் வரையில் அதிகரித்து 92.4 பில்லியன் டாலராக உள்ளது.
எலான் மஸ்க்-ன் டிவிட்டர் பதிவுகளால் டெஸ்லா நிறுவனத்தின் பங்கு மதிப்பு பல முறை பெரிய அளவிலான சரிவை எதிர்கொண்டது. எலான் மஸ்க் டிவிட்டர் பதிவுகளைச் செய்திடாமல் இருந்தால் அவரது சொத்து மதிப்பு 115 பில்லியன் டாலருக்கும் அதிகமான அளவிற்கு உயர்ந்திருக்கும்.

கோலின் ஹூவாங்
சீனா ஈகாமர்ஸ் நிறுவனமான Pinduoduo நிறுவனத்தின் நிறுவனரும் சீனாவின் 4வது பெரும் பணக்காரராக வளர்ந்துள்ளார்.
கோலின் ஹூவாங் சொத்து மதிப்புத் தற்போது 39.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இவரின் சொத்து மதிப்பு இரட்டிப்பு வளர்ச்சி அடைந்துள்ளது.

எரிக் யுவான்
இந்த லாக்டவுன் காலத்தில் பெரும்பாலான மக்களின் முக்கியத் தேவையாக மாறிய Zoom செயலி நிறுவனத்தின் தலைவரான எரிக் யுவான் சொத்து மதிப்பு இந்த லாக்டவுன் காலத்தில் 1900 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து. இதன் மூலம் எரிக் யுவான் சொத்து மதிப்பு 18.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.