அமெரிக்காவின் 46வது அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பிடன் ஆட்சியில் துணை அதிபராக இந்திய அமெரிக்கரான கமலா ஹாரிஸ் உட்பட பிடன் நிர்வாகக் குழுவில் 20க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இடம்பெற்று உள்ளனர். இதுவே அமெரிக்கா - இந்தியா இடையிலான நட்புறவு பெரிய அளவில் மேம்படும் என்பதற்கான சமிக்கையாக விளங்குகிறது.
இந்நிலையில் ஜோ பிடன் ஆட்சியில் இந்தியாவுக்கும் - அமெரிக்காவுக்குமான நட்புறவில் ஏற்படப்போகும் முக்கியமான மாற்றங்கள் என்ன..? எந்தத் துறை அதிகம் லாபம் அடையப் போகிறது..? அமெரிக்கா - இந்தியா இடையிலான வர்த்தக
தடைகள் நீங்கி எந்த அளவிற்கு மேம்படும்..? எனப் பல கேள்விகள் எழுந்துள்ளது.

அதிபர் ஜோ பிடன்
ஜோ பிடன் ஆட்சியில் தற்போதைய நிலவரத்தின் படி அமெரிக்கா - சீனா இடையில் இருக்கும் நெருக்கடிகள், தடைகளில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் தொடரும் என்ற நிலைப்பாடு நிலவுகிறது.
இதேவேளையில் அமெரிக்கா இந்தியா உடனான நட்புறவும், வர்த்தக நிலையும் பெரிய அளவில் மேம்படும் எனத் தெரிகிறது. இதேபோல் அமெரிக்கா உடன் ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய இதர பசிபிக் நாடுகள் உடனும் நட்புறவு மேம்படும்.

விசா கட்டுப்பாடுகள்
அடுத்த சில வாரத்தில் டிரம்ப் அரசு மென்பொருள் ஏற்றுமதி, ஹெச்1பி விசா, வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவிற்கு வரும் வாய்ப்புகளில் ஏற்பட்டுள்ள தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது இந்தியாவிற்கும், இந்திய நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்குப் பெரும் வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா இந்தியா வர்த்தகம்
இதேவேளையில் அமெரிக்கா இந்தியா இடையிலான வர்த்தகம் 2019-20ஆம் நிதியாண்டில் பல்வேறு தடைகளைத் தாண்டியும் சுமார் 88.75 பில்லியன் டாலராக உள்ளது. இதுமட்டும் அல்லாமல் 2019ல் இந்தியாவில் இருந்து அளவிலான சரக்குகள் அமெரிக்காவிற்கு இறக்குமதியை விடமும் ஏற்றுமதி அதிகமாக செய்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் மொத்த ஏற்றுமதி வர்த்தகத்தில் 17 சதவீதம் அமெரிக்கச் சந்தையைச் சார்ந்துள்ளது.

சிறப்பு அந்தஸ்து
மேலும் அமெரிக்கா இந்தியாவிற்குக் கொடுத்த சிறப்பு வர்த்தகக் கூட்டணி நாடு அந்தஸ்து டிரம்ப் ஆட்சியில் பல்வேறு நெருக்கடியைச் சந்தித்த நிலையில், ஜோ பிடன் ஆட்சியில் டிரம்ப் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேக் இன் இந்தியா திட்டம்
ஒபாமா ஆட்சியில் ஜோ பிடன் துணை அதிபராக இருந்த போது Trans-Pacific Partnership (TPP) ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஜோ பிடன் ஆட்சியில் இந்த TPP ஒப்பந்தம் மேலும் வலிமை அடையும் பட்சத்திலும், இந்தியா மற்றும் பாகிஸ்தானை சரிசமமாக நடத்தினால் "Make in India for World" திட்டம் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.