பிரிட்டன் நாட்டின் ஆடை மற்றும் பேஷன் நிறுவனமான Debenhams திங்கட்கிழமை திவாலானதாக அறிவித்த நிலையில், இந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த 12,000 ஊழியர்கள் இரவோடு இரவாகப் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
பிரிட்டன் நாட்டில் வர்த்தகம் செய்யும் Debenhams ஆன்லைன் வர்த்தகப் போட்டியை எதிர்கொள்ள முடியாமல் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வர்த்தகத்தை இழந்து வந்த நிலையில் கொரோனா தொற்று மற்றும் அதனால் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் கட்டுப்பாடுகள் மூலம் இந்நிறுவனத்தின் வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

Debenhams நிறுவனத்தின் வீழ்ச்சி
Debenhams நிறுவனம் ஆன்லைன் சந்தையில் இல்லாத காரணத்தால் கொரோனா காலத்தில் வர்த்தகத்தில் பெருமளவிலான சரிவை எதிர்கொண்டது. இதனால் இந்நிறுவனம் தற்போது திவாலாக அறிவிக்கப்பட்டுப் பிரிட்டன் நாட்டில் இருக்கும் அனைத்து கடைகளையும் மூட உள்ளதாக அறிவித்துள்ளது.

லாக்டவுன் தளர்வுகள்
பிரிட்டன் நாட்டில் கொரோனா தொற்றுக் காரணமாகக் கடுமையான லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, Debenhams கடைகள் திறக்கப்பட்டு Clearance sale அறிவிக்கப்பட்டும் எனத் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் விற்பனை
இதேவேளையில் பிரிட்டன் ஆன்லைன் பேஷன் குரூப் Boohoo, Debenhams நிறுவனத்தின் அறிவுசார் சொத்துக்களைக் கைப்பற்றியுள்ளதால் கடைகள் திறக்கும் வரையில் மக்கள் Debenhams ஆடைகள் Boohoo தளத்தில் ஆடைகளை வாங்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

12,000 ஊழியர்கள் பணிநீக்கம்
8ஆம் நூற்றாண்டிலிருந்து வர்த்தகம் செய்து வரும் Debenhams பிரிட்டன் நாட்டில் சுமார் 124 கடைகளை வைத்து வர்த்தகம் செய்து வருகிறது. வர்த்தகத்தில் ஏற்பட்ட தொடர் சரிவும், லாக்டவுன் காலத்தில் ஏற்பட்ட அதிகப்படியான பாதிப்பின் எதிரொலியாக மொத்தமாக அனைத்து கடைகளையும் மூடும் நிலை உருவாகியுள்ளது. இதனால் இக்கடைகளில் பணியாற்றி வந்த 12,000 ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.

வர்த்தகப் பேச்சுவார்த்தை
மேலும் Debenhams நிறுவனத்தின் சில கடைகளைப் பிரிட்டன் ரீடைல் குழுமம் ஆன Frasers வாங்கவும் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை உறுதியாகும் பட்சத்தில் முக்கியப் பகுதிகளில் இருக்கும் கடைகளை Frasers கைப்பற்றும்.

ஆன்லைன் வர்த்தக விரிவாக்கம்
Boohoo ஏற்கனவே Debenhams நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தரவுகள் பிற அறிவுசார் சொத்துக்களை 55 மில்லியன் யூரோவிற்குக் கைபற்றியது குறிப்பிடத்தக்கது. இந்தத் தரவுகளை வைத்து Debenhams நிறுவனத்தை ஆன்லைன் சந்தைக்குக் கொண்டு சென்று வர்த்தகத்தை விரிவாக்கத் திட்டமிட்டு வருகிறது Boohoo.