இந்திய குடும்பங்கள் வசம் சுமார் 25,000 டன்கள் தங்கம் இருக்கின்றன. உலகின் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் வசம் இருக்கும் தங்கத்தை விட இது அதிகம். இந்திய குடும்பங்களிடம் நகைகளாவும், தலை தலைமுறையாக பாதுகாக்கப்பட்டு வரும் தங்கமாகவும் இவை இருக்கின்றன.

Advertisement

இந்திய குடும்பங்கள் வசம் 25,000 டன்கள் தங்கம் இருந்தாலும் அது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப்படுகிறதா என்றால் இல்லை. ஏனெனில் இவை நம் வீட்டு பீரோவிலும் வங்கி லாக்கரிலும் மூடப்பட்டு கிடக்கின்றன. அவசர பண தேவை வரும் போது இவற்றை நாம் அடகு வைத்து பணமாக்குகிறோம். இந்த நிலையில் வீட்டில் சும்மா இருக்கும் தங்கத்தை வைத்து மக்கள் வருமானம் பார்க்க ஏதுவாக மத்திய அரசு ஒரு பழைய திட்டத்தை மேம்படுத்தி புதிய திட்டமாக அமல்படுத்த முடிவு செய்துள்ளதாம்.

Advertisement

இதன்படி வீடுகளில் பயன்படுத்தாமல் இருக்கும் தங்கத்தை, நாட்டின் பொருளாதார பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நோக்கில் 'தங்கத்தை பணமாக்கும்' திட்டத்தை மத்திய அரசு மேம்படுத்த இருக்கிறது. 2015ஆம் ஆண்டே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டாலும் இதில் உள்ள சிக்கல்களால் மக்கள் இதனை பயன்படுத்தாமல் உள்ளனர்.

Gold Monetization என அழைக்கப்படும் இந்த திட்டத்தின் கீழ் தற்போது மக்கள் தங்கள் வசம் இருக்கும் தங்கத்தை வங்கிகளிடம் ஒப்படைத்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அதற்கு வட்டி வருமானம் பெற முடியும். அதே போல குறிப்பிட்ட காலம் முடிந்த பின், தங்கமாகவோ அல்லது அதற்குரிய பண மதிப்பாகவோ திரும்ப பெறலாம்.

Advertisement

இதுவரை வங்கிகள் வாயிலாக மட்டுமே தங்கத்தை ஒப்படைக்க முடிந்த நிலையில், இனி நகைக்கடைகளிலும் தங்கம் சேகரிக்கும் மையங்களாக மாற்றி இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே பொதுமக்கள் தங்களிடம் உள்ள தங்கத்தை அருகிலுள்ள நகைக்கடைகளிலேயே ஒப்படைத்து வட்டி வருமானம் பெற முடியும்.

மத்திய அரசின் நிதி அமைச்சகம் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாகவும் 2 வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய திட்டம் அமலான பின், அங்கீகாரம் பெற்ற வங்கி அல்லது நகைக்கடையில் பொதுமக்கள் தங்களின் தங்கத்தை ஒப்படைக்கலாம். அங்கே தங்கத்தின் துாய்மை பரிசோதிக்கப்பட்டு அதன் எடை பதிவு செய்யப்படும். அதன் அடிப்படையில் கணக்கு தொடங்கப்பட்டு, அந்த தங்கத்தின் டெபாசிட் காலம் முடியும் வரை வட்டி வழங்கப்படும். தற்போது இதில் 2.5 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில் அந்த வட்டி விகிதமும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாம்.

Advertisement

டெபாசிட் காலம் முடியும் போது தங்கமாக அல்லது அந்த தங்கத்திற்கு உரிய பணமாக நீங்கள் பெறலாம். உங்க வீட்டில் சும்மா இருக்கும் தங்கம் இந்த திட்டத்தில் உங்களுக்கு வட்டி வருமானம் பெற்று தர போகிறது. இந்த திட்டத்தை நவீனப்படுத்துவதன் மூலம் ஆயிரம் டன் வரை தங்கத்தை பொருளாதார பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியும் என அரசு நம்புகிறது. இந்திய குடும்பங்களிடம் உள்ள தங்கத்தில் 5 சதவீதம் மட்டும் திட்டத்தில் சேர்ந்தாலும், 7 முதல் 8 லட்சம் கோடி ரூபாய் வரை உள்நாட்டு நிதி உருவாகுமாம், இதனால் தங்கம் இறக்குமதி தேவை குறையும். வீடுகளில் முடங்கி கிடக்கும், தங்கம் வெளியே வந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படும், பொதுமக்களுக்கும் தங்கமும் பாதுகாப்பாக இருக்கும் அதற்கு ஒரு வருமானமும் கிடைக்கும்.

Advertisement

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.