ஏஐ தொழில்நுட்பத்தின் வருகையால் ஐடி, கால் சென்டர், ஹெச்.ஆர் போன்ற துறைகளில் தான் மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு பறி போகிறது என பார்த்தால் தற்போது வங்கி வேலைகளும் பறி போக தொடங்கியுள்ளன. அதுவும் இந்தியாவில் ஏஐ-ஆல் தனியார் வங்கியில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி வங்கி, தனது அன்றாட வேலைகளை தானியங்கி முறைக்கு (Automation) மாற்ற அதிகளவில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கடந்த நிதியாண்டில் 3,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

Advertisement

கடந்த மார்ச் 31ஆம் தேதியுடன் முடிந்த காலாண்டின் படி, ஹெச்டிஎப்சி வங்கியின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 2,11,178 ஆக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டு 2,14,521 என இருந்தது. அதாவது கடந்த ஆண்டை விட 3,343 ஊழியர்கள் குறைக்கப்பட்டுள்ளனர். ஹெச்டிஎப்சி வங்கியில் 9 ஆண்டுகளில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்படுவது இதுவே முதல்முறை.

ஹெச்டிஎப்சி வங்கி தினமும் ஒரே மாதிரி செய்ய கூடிய வேலைகளை 'Neev' என்ற ஏஐ கருவி மூலம் மேற்கொள்கிறது. அதே போல பணத்தை தானாகவே கணக்கிட்டு வழங்கும் இயந்திரங்களை (Cash Recycler Machines) பயன்படுத்துவதையும் அதிகரித்துள்ளது.

Advertisement

இதன் காரணமாக, வங்கியில் மேற்பார்வையாளர் அல்லாத பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள், அதாவது எழுத்தர், அலுவலக உதவியாளர்கள் போன்ற Non-supervisory roleகளில் இருந்தவர்கள் தான் அதிக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரிவில் பணியாளர்களின் எண்ணிக்கை 8,000-க்கும் மேல் குறைந்து 1,62,797 ஆக சரிந்துள்ளது. மேலும், புதிய பணியாளர்களை சேர்ப்பதும் சுமார் 3,811 ஆக குறைந்துள்ளது.

அதே வேளையில் மிடில் லெவல் மற்றும் ஜூனியர் நிலை பணியாளர்களின் எண்ணிக்கை முறையே 1,252 மற்றும் 3,543 ஆக உயர்ந்துள்ளது. மூத்த நிர்வாகத்தில் கூடுதலாக 15 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில் வங்கிகளில் எந்த பணிகளுக்கு தேவை அதிகரித்துள்ளது குறைந்துள்ளது என்பது தெரிய வருகிறது.

Advertisement

இது குறித்து வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி சசிதர் ஜெகதீசன் அளித்த பேட்டியில் தொழில்நுட்பத்தை முன்னிறுத்திய, வாடிக்கையாளர் மைய வங்கி சேவையை நோக்கி முன்னேறி வருகிறோம். இந்த மாற்றத்திற்கு ஏற்ப ஊழியர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம் என கூறியுள்ளார். அலுவலக பணிகளில் இருக்கும் திறமையானவர்களை, நேரடியாக வாடிக்கையாளர்களை கையாளும் பணிகளுக்கு நாங்கள் மாற்றி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஆக்சிஸ் வங்கியும் கூட கடந்த நிதியாண்டில் 3100 பேரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. வங்கிகள் சேவைகளை மேம்படுத்தவும் அதிக வருவாய் ஈட்டவும் தற்போது தொழில்நுட்ப மேம்பாட்டில் தான் அதிக கவனம் செலுத்துகின்றன. இதனால் சில வேலைகள் மனிதர்களிடம் இருந்து ஏஐ வசம் செல்ல தொடங்கியுள்ளன.