இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரலாற்று உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலைகள் தற்போது பெருமளவில் சரிந்துள்ளன. இப்போது மக்களுக்கு இருக்கும் ஒரு சந்தேகம் தங்கம் , வெள்ளி விலை இன்னும் சரியுமா அல்லது கடந்த ஆண்டை போலவே மீண்டும் உயர தொடங்கிவிடுமா என்பது தான். இதற்கு நாம் கடந்த காலங்களில் எல்லாம் தங்கம் எப்போது பெரிய சரிவை கண்டது, எத்தனை மாதங்களில் சரிவில் இருந்து மீண்டது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

Advertisement

கடந்த ஜனவரி மாதம் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1.33 லட்சம் ரூபாயையும் ஒரு கிலோ 4.25 லட்சத்தையும் தொட்டது. அதுவே தற்போது ஒரு சவரன் தங்கம் விலை 1.08 லட்சமாகவும் ஒரு கிலோ வெள்ளி விலை 2.50 லட்சமாகவும் குறைந்துள்ளன. உலக சந்தையிலும் கூட உச்சபட்ச விலையுடன் ஒப்பிடும்போது, தற்போது தங்கம் சுமார் 30% மற்றும் வெள்ளி 54% வரை சரிவை சந்தித்துள்ளதாக DSP Netra மியூச்சுவல் ஃபண்டு நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதாவது ஜனவரி 2026இல் ஒரு அவுன்ஸ் தங்கம் 5,602 டாலர் வரை உயர்ந்திருந்தது. அங்கிருந்து விலை குறைந்து தற்போது 3,942 டாலர் என்ற நிலையை தொட்டுள்ளது. இதே காலகட்டத்தில், ஒரு அவுன்ஸ் வெள்ளி 121.6 டாலர் என்ற உச்சத்திலிருந்து, 55.6 டாலர் வரை சரிவடைந்துள்ளது. நமக்கெல்லாம் இந்த சரிவு மிகப்பெரியதாக தெரிந்தாலும், கடந்த கால வரலாறுடன் ஒப்பிடும்போது தங்கம் விலை இன்னமும் குறைய வேண்டும் என்கிறது இந்த அறிக்கை.

1980-ஆம் ஆண்டு திடீரென 773% விலை உயர்ந்து ஒரு அவுன்ஸ் 873 டாலர் என்ற உச்சபட்ச விலையை தொட்ட தங்கம் அதன் பின்னர் சர்ரென சரிந்து 252 டாலர்கள் அதாவது 71% வரை சரிந்தது. அது மீண்டும் பழைய நிலையை அடைய பல ஆண்டுகள் தேவைப்பட்டது. 1974, 2011, ஆகிய ஆண்டுகளிலும் இதே போல தான் தங்கம் தடாலடியாக உயர்ந்து பின்னர் 49% வரை சரிந்தது. அந்த வகையில் பார்த்தால் தங்கம் விலை தற்போதுவரை 30% தான் குறைந்துள்ளது. வரலாறு திரும்பும்பட்சத்தில் இன்னும் கூட விலை குறைய வாய்ப்புள்ளது என்கிறது இந்த அறிக்கை.

Advertisement

அதேபோல, வெள்ளி 1980இல் 93% , 2011இல் 77% வரை கூட விலை சரிந்துள்ளது. ஆனால் இப்போது 54% வரை மட்டுமே விலை குறைந்துள்ளது. எனவே, தற்போதைய சரிவு வரலாற்றில் மிகவும் ஆழமான விலை சரிவு அல்ல என்கிறது இந்த ஆய்வறிக்கை.

இந்த பெரிய விலை வீழ்ச்சிக்கு முன்பு எல்லாமே தங்கம் தாறுமாறாக விலை உயர்ந்திருக்கிறது. இதனால் இதனை ஒரு சுழற்சி என அழைக்கின்றனர். 1980, 2011 , 1974 ஆகிய ஆண்டுகளை போலவே தற்போது தங்கம், வெள்ளி ஆகிய இரண்டுமே திடீரென விலை உயர்ந்து உச்சத்தை தொட்டு தற்போது சரிந்து வருகின்றன. ஒருவேளை வரலாறு திரும்பினால் தங்கம் விலை 71% வரையும் வெள்ளி விலை 93% வரையும் கூட குறைய வாய்ப்புள்ளது.

Advertisement

விலை சரிவு என்பது சந்தையின் ஒரு பகுதி மட்டுமே, ஆனால் Time correction இன்னும் முடியவில்லை என இந்த அறிக்கை எச்சரிக்கிறது. வரலாற்றில் தங்கம் மற்றும் வெள்ளி தங்கள் அடிமட்ட விலை (Durable bottom) அடைய சில மாதங்கள் முதல் பல ஆண்டுகள் வரை எடுத்துக்கொண்டுள்ளன. மீண்டும் பழைய உச்சத்தை அடைய பல தசாப்தங்கள் தேவைப்பட்ட வரலாறும் உண்டு என்பதால் இப்போது விலை ஏறவும் இறங்கவும் 50:50 வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

2026 ஜனவரி மாத உச்சத்திற்குப் பிறகு, மிக விரைவாகவே தங்கம் மற்றும் வெள்ளி 25% சரிவை எட்டிவிட்டன. இருப்பினும், இந்தச் சந்தை சுழற்சி இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதால், விலை எப்போது மீண்டும் சீராகும் அல்லது எப்போது புதிய உச்சத்தைத் தொடும் என்பதை இப்போதே கணிப்பது கடினம் என இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

Advertisement

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.