இந்தியாவில் தங்கம் விலை அதன் வரலாற்று உச்சபட்ச விலையில் இருந்து சுமார் 24,000 ரூபாய் சரிந்துள்ளது. ஜனவரி 29ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 1.33 லட்சத்தை தொட்டது. அதன் பின் விலை சரிந்து ஒரு சவரன் 1.09 லட்சத்திற்கு இன்று விற்கப்படுகிறது.

Advertisement

தங்கம் விலை குறைந்து வருவது சாமானிய மக்களுக்கு நல்ல செய்தி. ஆனால் தங்க நகை கடன் வாங்கியவர்களுக்கும் நகை கடன் வாங்க திட்டமிடுபவர்களுக்கும் நல்ல செய்தி அல்ல. வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் நாம் அடகு வைக்கும் தங்கத்தின் சந்தை மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை மட்டுமே நமக்கு கடனாக வழங்குகின்றன. இதனை Loan-to-Value (LTV) என அழைக்கின்றனர். பொதுவாக, இது 75% ஆக நிர்ணயிக்கப்படும். அதாவது உங்கள் தங்கத்தின் மதிப்பு 1 லட்சம் ரூபாய் என்றால், அதிகபட்சமாக 75,000 ரூபாய் வரை மட்டுமே கடன் பெற முடியும்.

Advertisement

தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருப்பதால் பெரும்பாலான வங்கிகள் 65% வரை மட்டுமே அதாவது 65,000 வரை மட்டும் தான் கடனே தருகின்றன. தங்கம் விலை 1.33 லட்சமாக இருக்கும் போது நீங்கள் நகை அடகு வைத்தால் அதிகபட்சமாக ஒரு சவரனுக்கு 95,000 ரூபாய்க்கு மேல் கிடைத்திருக்கும், ஆனால் தற்போது 1.09 லட்சம் என்ற விலைக்கு தங்கம் விற்கும் போது நகை அடகு வைத்தால் 77,000 ரூபாய் மட்டுமே கடன் கிடைக்கும்.

ஒரு வேளை தங்கம் விலை உச்சத்தில் இருந்த போது நீங்கள் கடன் வாங்கி இருந்தால் தங்கத்தின் விலை குறையும்போது, அடகு வைக்கப்பட்ட தங்கத்தின் சந்தை மதிப்பு குறைகிறது. ஆனால், நீங்கள் வாங்கிய கடனின் தொகை மாறாது. இதனால், உங்கள் கடன் தொகையானது தங்கத்தின் புதிய மதிப்பை விட அதிகமாகிவிடும். அதாவது LTV விகிதம் உயரும். இது வங்கிகளை பொறுத்தவரை மிகப்பெரிய நிதி அபாயமாக பார்க்கப்படுகிறது.

Advertisement

எனவே தங்கம் விலை கணிசமாக குறையும்போது, கடன் கொடுத்த நிறுவனங்கள் உங்களை அணுகி சில மாற்றங்களை செய்ய சொல்லலாம். இதை 'Margin Call' என்பார்கள். நிலுவையில் உள்ள கடனின் ஒரு பகுதியை உடனடியாகச் செலுத்துவது, அல்லது LTV விகிதத்தைச் சரி செய்தல், கடன் விகிதத்தை ஈடு செய்ய கூடுதலாக மேலும் சில தங்க நகைகளை அடகு வைத்தல் ஆகியவற்றை மேற்கொள்ள நேரிடலாம்.

வங்கி மற்றும் நிதி நிறுவனம் தொடர்ந்து இந்த Margin Callகளை விடுத்து நீங்கள் அவற்றை புறக்கணித்தால், சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனம் உங்கள் தங்கத்தை ஏலம் விடுவதற்கு சட்டப்பூர்வ உரிமை பெற்றுள்ளது. இருப்பினும், ஏலம் விடுவதற்கு முன்பாக உங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும். எனவே, பயப்படத் தேவையில்லை, ஆனால் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.

Advertisement

ஒரு வேளை நீங்கள் நகை அடகு வைத்த நிறுவனம் அண்மையில் உங்களை தொடர்பு கொள்ள முயன்று நீங்கள் அதனை புறக்கணித்திருந்தால் உடனே அது என்ன என்பதை கேட்டு தெரிந்து வைத்து கொள்ளுங்கள். சிறு புறக்கணிப்பு கூட உங்கள் நகையை இழக்க செய்ய வாய்ப்புள்ளது.

அதே வேளையில் புதிதாக நகை கடன் வாங்க திட்டமிடுபவர்களுக்கு முன்பே அடகு வைத்திருந்தால் அதிக கடன் கிடைத்திருக்கும், இப்போது விலை குறைந்திருப்பதால் அதே தங்கத்திற்கு குறைந்த பணமே கடனாக கிடைக்கும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.