ஆந்திரப் பிரதேசம்: நடந்து முடிந்த 2019 சட்டமன்ற தேர்தலில் வொய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய வெற்றி பெற்று, ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சி அமைத்தது. வொய் எஸ் ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் இரண்டும் சரமாரியாக தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி இருந்தார்கள். அதில் சிலவைகள் தற்போது நடை முறைக்கும் வந்து கொண்டிருக்கிறது.

புதிய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று (ஜூலை 22, 2019) தனியார் நிறுவனங்களில் இருக்கும் 75 சதவிகித வேலைவாய்ப்புகள் உள்ளூர் இளைஞர்களுக்கு (Job Reservation) ஒதுக்கும் சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி பரவலான பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறார்.
Andhra Pradesh Employment of Local Candidates in Industries/Factories Act, 2019 என்கிற சட்டத்தின் படி தொழிற்சாலைகள், உற்பத்தி ஆலைகள், தனியார் மற்றும் அரசு கூட்டு (Joint Venture) நிறுவனங்களில் 75 சதவிகித வேலை வாய்ப்பை, உள்ளூர் இளைஞர்களுக்கு ஒதுக்குகிறார்கள். இங்கு தான் Job Reservation அழுத்தமாக ஊன்றப்படுகிறது.
இந்த புதிய சட்டப் படி ஒரு நிறுவனம், தனக்கு தேவையான அல்லது தகுதியான உள்ளூர் இளைஞர்கள் வேலைக்கு கிடைக்கவில்லை என்றால், உள்ளூர் இளைஞர்களுக்கு முறையாக பயிற்சி அளித்து, அவர்களை பணியமர்த்த வேண்டும். எந்த சாக்கு போக்கும் சொல்லி வேறு நபர்களை பணிக்கு அமர்த்த முடியாதாம். இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் வேலையை, தனியார் நிறுவனங்கள் அரசோடு சேர்ந்து செய்ய வேண்டுமாம்.
தற்போதைய ஆந்திர முதல்வர், தேர்தல் சமயத்தில் பாத யாத்திரை சென்ற போது, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கு தனி இட ஒதுக்கீடு செய்து தருவதாகச் சொல்லி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு தன் தேர்தல் வாக்குறுதிகளிலும் இதைக் குறிப்பிட்டிருந்தார். இந்த சட்டத்தை அடுத்த மூன்று ஆண்டுகளில் தொழிற்துறையினரிடம் கலந்து பேசி சம்மதிக்க வைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியும் எனச் சொல்லி இருக்கிறது ஆந்திர அரசு.
ஜெகன் மோகன் ரெட்டியைப் போல, மத்தியப் பிரதேசத்தின் முதல் அமைச்சர் கமல்நாத்தும் தன் மாநிலத்தில் 70 சதவிகித வேலைவாய்ப்புகளை, உள்ளூர் இளைஞர்களுக்கு ஒதுக்க ஒரு சட்டம் இயற்ற இருப்பதாக கடந்த ஜூலை 09, 2019 அன்று சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கை ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும், இப்போது இளைஞர்களை, வேலைக்கு தகுதியானவர்களாக மாற்ற, திறன் மேம்பாட்டில் ஆந்திரப் பிரதேச அரசு கவனம் செலுத்த வேண்டும் எனப் பரவலாக பேசப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications