கிருஷ்ணகிரி : இந்தியாவின் மிகப்பெரிய பேட்டரி ஆலை கிருஷ்ணகிரியில் அமைய இருக்கிறது. நொய்டா பகுதியை சேர்ந்த LOHUM என்ற நிறுவனம் பல ஆயிரம் கோடி முதலீட்டில் ஆலையை அமைக்க உள்ளது. இதனால் இந்த பகுதியில் சுமார் 1,000 வேலைவாய்ப்புகள் உருவாகக் கூடும். மறுசுழற்சி , மறு பயன்பாடு குறைந்த கார்பன் வெளியீடு என்ற நோக்கத்தில் பேட்டரி மூலப் பொருட்களை நிலையான முறையில் உற்பத்தி செய்து வருகிறது LOHUM என்ற நிறுவனம்.
கிரேட்டர் நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம். விரைவில் இந்நிறுவனம் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி சிப்காட்டில் உள்ள ஃபியூச்சர் மொபிலிட்டி பூங்காவில் ஆலை அமைக்க உள்ளது.

இந்த ஆலையில் கேத்தோடு ஆக்டிவ் மெட்டீரியல் உற்பத்தி செய்யப்படும். இந்த ஆலைக்காக LOHUM நிறுவனம் அடுத்த ஆறு ஆண்டுகளில் 2000 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது . இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்நிறுவனம் 65 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளது. மேலும் 18 மாதங்களில் இந்த நிறுவனம் அதன் உற்பத்தியை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் இரண்டு ஆண்டுகளில் 400 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக LOHUM நிறுவனத்தின் தலைவர் சச்சின் மகேஸ்வரி தெரிவித்துள்ளார். இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் பேட்டரி தயாரிக்க கூடிய ஓலா, எக்ஸ்சைட், டிவிஎஸ் மற்றும் அமரராஜா நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படும் எனக் கூறியுள்ளார்.
இந்த நிறுவனம் ஏற்கனவே 8 இடங்களில் உற்பத்தி ஆலைகளை நிறுவியுள்ளது. நொய்டாவில் 7 ஆலைகளையும் குஜராத்தில் ஒரு ஆலையையும் செயல்படுத்தி வருகிறது. தற்போது கிருஷ்ணகிரியிலும் ஆலை அமைய உள்ளது.
கடந்த ஆண்டில் தான் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ஓலா நிறுவனத்தின் பேட்டரி ஆலை கட்டுமான பணிகள் தொடங்கின. தற்போது சூளகிரி பகுதியில் பேட்டரி தொழிற்சாலை அமைய இருப்பது கிருஷ்ணகிரி பகுதியின் பொருளாதாரத்தையும் வேலை வாய்ப்பையும் அதிகரிக்கும். இந்த ஆலை செயல்பாட்டுக்கு வரும் போது சுமார் 1000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.
LOHUM நிறுவனத்தை பொறுத்தவரை முழுக்க முழுக்க மறுசுழற்சி மறுபயன்பாடு முறையிலேயே பேட்டரிகளை தயாரிக்க வேண்டும் என இலக்கு கொண்டுள்ளது. தற்போது மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் பேட்டரிகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இருந்தாலும் சுற்றுச்சூழலுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில் அவற்றை உற்பத்தி செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications