சென்னை: "கிரேடிட் கார்டு", இந்த வார்த்தையைக் கேட்டாலே சிலருக்குப் புன்னகையும், சிலருக்கு எரிச்சலும் வரும். உண்மைதான் எரிச்சல் படும் பெரும்பாலானோர் கிரேடிட் கார்டின் முழுமையான நன்மைகளையும், பிரச்சனைகளையும் சந்தித்தவர்கள்.
நாம் கிரேடிட் கார்டுகளை வாங்குவதற்கான முக்கியக் காரணம், திடீர் செலவுகளுக்காகப் பிறரிடம் கடன் கேட்கும் நிலையைத் தவிர்க்கவும், பர்ஸை பதம் பார்க்கும் செலவுகளைத் தடுக்கவும், பெற்ற கடனை செலுத்த போதுமான கடன் இருப்பதாலே கிரெடிட் கார்டுகளை வரும்பி வாங்குகிறோம். இது ஏறக்குறைய ஒரு ஷாப்பிங் லோனைப் போலத்தான். ஒரு குறிப்பிட்டத் தேதிக்குள் செலுத்தி விட்டால் வட்டி கூடக் கட்டத் தேவையில்லை.
ஒருவேளை நிலுவையைக் கட்டத் தவறினால், நீங்கள் அதற்குண்டான வட்டியையும் அபராதத்தையும் கட்ட வேண்டியிருக்கும். இதை உபயோகிக்கும்போது நீங்கள் அறிந்திராத பல்வேறு விதிமுறைகள் உள்ளன. நீங்கள் எளிதாகப் புரிந்துகொள்ள அவற்றைச் சுருக்கமாகத் தருகிறோம்.
வருடாந்திரக் கட்டணம்
பெரும்பாலான வங்கிகள் தங்களுடைய கிரெடிட் கார்டுகளுக்கு வருடாந்திரக் கட்டணங்களை வசூலிக்கின்றன. ஆனால் சில வங்கிகள் முதல் வருடத்திற்கு மட்டும் இந்தக் கட்டணத்திற்கு விலக்கு அளிக்கின்றன. இந்த வருடாந்திரக் கட்டணம் முழுவதும் வங்கி மற்றும் கார்டின் வகையைப் பொருத்தத்து.
வருடாந்திர வட்டி விகிதம்
இது கட்டணங்கள், நிலுவைத் தொகை மீது ஏற்படும் செலவுகளை உள்ளடக்கிய வருடாந்திர வட்டி விகிதத்தைக் குறிக்கும்.
ஒருவர் தன்னுடைய நிலுவைத் தொகை முழுவதையும் ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் செலுத்திவிட்டால், இந்த வருடாந்திர வட்டி விகிதம் பொருந்தாது என்பதோடு எந்த வட்டியையும் செலுத்த தேவையில்லை.
கட்டணச் சுழற்சி (Billing cycle)
பில்லிங் சைக்கிள் என அழைக்கப்படும் இது, உங்கள் கார்டுக்கான மாதாந்திர கட்டண விவரப்பட்டியல் தரப்படும் தேதியைக் குறிக்கும். டியு-டேட் எனப்படும் இது நீங்கள் கட்டணம் செலுத்துவதற்கான கடைசித் தேதியாகும். இந்த இரண்டு தேதி குறித்த விவரங்களும் உங்களுக்குக் கிரெடிட் கார்டு வழங்கப்படும்போது தெரிவிக்கப்படும்.
நிலுவை மாற்றம்
ஒருவர் தன்னுடைய ஒரு கிரெடிட் கார்டிலுள்ள நிலுவைத் தொகையை மற்றொன்றிற்கு மாற்றிக் கொண்டால் அதற்குப் பாலண்ஸ் டிரான்ஸ்ஃபர் என்று பெயர்.
இது பொதுவாக நிலுவைத் தொகை மீதான வருடாந்திரக் கட்டணங்களைக் குறைத்துக் கொள்ளச் செய்யப்படுவதுடன் முதல் கார்டிலுள்ள வட்டிவிகிதம் இரண்டாவது கார்டிலுள்ள வட்டிவிகிதத்தை விடக் குறைவானதாக இருந்தால் மட்டுமே பயன் தரும். ஆனால் அவ்வாறு மாற்றுவதற்கும் கட்டணமுண்டு.
கடன் வரம்பு
இது உங்கள் கிரெடிட் கார்டு மூலம் நீங்கள் பெறக்கூடிய கடனின் உச்ச வரம்பைக் குறிக்கும். நீங்கள் இந்த அளவைப் பயன்படுத்தும் விதத்தைப் பொருத்து உங்கள் கிரெடிட் ஸ்கோர் எனப்படும் கடன் பெறும் திறன் மதிப்பீடும் மாறும்.
கடன் வரம்பு உங்கள் திருப்பிச் செலுத்தும் திறனையும் பொருத்து அமையும். எனவே வரம்பு மீறிய செலவுகளைச் செய்து உங்கள் கடன் வரம்பை அதிகரிக்க முயலாதீர்கள்.
பண வரம்பு
கடன் வரம்பு மற்றும் பணவரம்பு ஆகியவை இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு. பணவரம்பு என்பது உங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தி எந்த அளவு பணத்தை எடுக்க முடியும் என்பதைக் குறிக்கிறது.
இந்த இரண்டிற்கும் வரம்பு வேறுபடுவதுடன் பண வரம்பிற்கான வட்டி விகிதம் எடுத்த நாளிலிருந்தே தொடங்கிவிடும். பணவரம்பிற்கான வட்டி விகிதம் மிகவும் அதிகம் என்பதால் அதை அவசரக் காலங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்
கார்டு சரிபார்ப்பு மதிப்பு (சிவிவி)
உங்கள் கார்டின் பின் பகுதியில் இந்த மூன்று இலக்க எண் குறிப்பிடப் பட்டிருப்பதைப் பார்க்கலாம். இது இணைய அல்லது மின்னணு பரிமாற்றங்களில் செய்யப்படும் செலவுகளுக்குத் தேவைப்படும் ஒரு குறியீடு. இதன் மூலம் உங்கள் கார்டின் நம்பகத் தன்மை உறுதிசெய்யப்படும்.
தாமதக் கட்டணம்
உங்கள் நிலுவைத் தொகையில் செலுத்தவேண்டிய குறைந்த அளவையும் நிலுவைத் தேதிக்குள் கட்டத் தவறும்போது இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கேஷ்பேக்
இது சில சிறப்பான காலக் கட்டங்களுக்காகத் தரப்படும் சலுகை. நீங்கள் கார்டின் மூலம் செய்யும் செலவுகளைப் பொருத்துச் சலுகை புள்ளிகளாகக் கணக்கிடப்பட்டு உங்கள் கணக்கிற்குப் பணமாகக் கிடைக்கும். ஆனால் நீங்கள் நிலுவைகளைச் சரியாகச் செலுத்தினால் மட்டுமே இந்தச் சலுகைகள் கிடைக்கும்.
சிபில் ஸ்கோர்
உங்களுடைய கடன்பெறும் நம்பகத்தன்மையை அதிகரிக்க இந்தச் சிபில் ஸ்கோர் எனப்படும் கடன் நம்பகத்தன்மை மதிப்பீட்டுப் புள்ளிகள் அவசியம்.
ஒருவர் பல கிரெடிட் கார்டுகளை வைத்திருந்து அவற்றில் சிலவற்றை ரத்துச் செய்ய விரும்பினால் (அவற்றின் மொத்த கடன் வரம்பு 2 லட்சம் என வைத்துக்கொண்டால்), உங்கள் கடன்வரம்பு குறைக்கப் படுவதுடன் உங்கள் சிபில் ஸ்கோரும் குறையும்.


Click it and Unblock the Notifications