இந்தியாவில் மூத்த குடிமக்கள் அவர்களின் வசதிக்காகவும், அவர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கிலும் அமலில் உள்ள சில சலுகைகளை அனுபவிக்கலாம்.
மூத்த குடிமக்கள் என்போர் 60 வயது மற்றும் அதற்கு மேலுள்ள வயதான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் ஆவர். இந்தியாவில் உள்ள மத்திய, மாநில அரசுகளும், பல்வேறு நிறுவனங்களும் மூத்த குடிமக்களுக்காக வழங்கியுள்ள பல்வேறு சலுகைகளை எகனாமிக் டைம்ஸ் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.
குறைந்த வரி
அவர்களின் நிதிச் சுமையைச் சுலபமாக்க வரிச் சட்டங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளன. ரூ.3 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி கிடையாது. சூப்பர் மூத்த குடிமக்களுக்கு (80 வயதுக்கு மேற்பட்டோர்) ரூ.5 லட்சம் வரையுள்ள வருமானத்திற்கு வரி கிடையாது.
ரூ.30,000 வரையிலான சுகாதாரக் காப்பீட்டுப் பாலிசிகளுக்கான பிரிமியம் தொகைக்கு இந்திய வருமான வரிச் சட்டம் 1961பிரிவு 80 D படி வரித் தள்ளுபடி உண்டு. கடுமையான நோய்களால் அவதிப்படும் மூத்த குடிமக்கள் 80 DDB படி ரூ.60,000 வரை வரித் தள்ளுபடி பெறலாம். இந்தச் சலுகை சூப்பர் மூத்த குடிமக்களுக்கு ரூ.80,000 க்கு நீட்டிக்கப்படுகிறது.
பயணச் சலுகைகளும், தள்ளுபடிகளும்
மூத்த குடிமக்கள் பயணக் கட்டணங்களில் பல்வேறு சலுகைகள் பெறலாம். அரசு பேருந்துகள், ரயில், விமானம் என அனைத்திலும் சலுகைகள் கிடைக்கும்.
வான் பயணம்
இந்திய குடியுரிமை பெற்ற 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடி மக்களுக்கு 50% வரை பொருளாதாரப் பிரிவுகளில் உள்நாட்டுப் பயணங்களில் பயணக் கட்டணத்தில் தள்ளுபடி உண்டு.
இரயில் பயணம்
60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் முறையே 40% மற்றும் 50% பயணக்கட்டணம் தள்ளுபடி உண்டு. இக்கட்டணச் சலுகை அனைத்து மெயில் / எக்ஸ்பிரஸ் / ராஜதானி / சதாப்தி / ஜன் சதாப்தி / டுராண்டோ ரயில்களின் அனைத்து வகுப்புகளிலும் கிடைக்கும்.
பேருந்து பயணம்
சில நகராட்சி, மாநகராட்சிகள் மற்றும் சில மாநில அரசுகள் மூத்த குடிமக்களுக்கான பேருந்து கட்டண சலுகைகளை அறிவித்துள்ளன. சில பேருந்துகளில் சில இருக்கை வசதிகளும் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன.
அதிக வட்டி
இவர்கள் முதலீடுகளின் மீது அதிக வட்டியைப் பெற முடியும்.
60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து முதியவர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இக்கணக்குகளுக்கு ஆண்டுக்கு 8. 4% வட்டி கிடைக்கும்.
மூத்த குடிமக்களின் வைப்புத் தொகைகளுக்கு வழக்கத்தில் உள்ள வட்டியை விடக் கூடுதலாக 0.5% வட்டி கிடைக்கும்.
சிறப்புத் திட்டங்கள் அரசுகள் மூத்த குடிமக்களுக்கான பல்வேறு சிறப்புத் திட்டங்களை நடைமுறை படுத்தி வருகின்றன.
மருத்துவக் காப்பீடு
தேசிய காப்பீட்டு நிறுவனம் "வரிஷ்டா மருத்துவக் காப்பீடு" பாலிசி மூலம் 60-80 வயது வரையுள்ள மூத்தவர்களுக்குப் பலன்களை அள்ளி வழங்குகிறது. மருத்துவச் செலவினங்களுக்காக ரூ.1 லட்சமும், கடுமையாக நோய்வாய்ப்பட்டால் ரூ.2 லட்சமும் வழங்குகிறது.
எல் ஐ சி யின் வரிஷ்தா பென்ஷன் பீமா யோஜனா 2017 திட்டத்தின் கீழ் 8% உத்தரவாதமான வட்டியுடன் 10 ஆண்டுகளுக்கு மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியம் வழங்குகிறது. 7.5 லட்சம் வரை அதிகபட்சமாக முதலீடு செய்யக்கூடிய இந்தத்திட்டத்தின் கீழ் ஒருவருக்கு மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஓராண்டு என்ற அளவீடுகளில் ஓய்வூதியம் வழங்கக்கூடிய வசதிகள் உண்டு.
குறைந்த கட்டணங்கள்
இவர்களின் தொலைப்பேசி கட்டணங்களுக்கு மானியமுண்டு.
பிஎஸ்என்எல் : 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் முன்னுரிமை அடிப்படையில் புதிய தொலைப்பேசி இணைப்புக்குப் பதிவு செய்து கொள்ளலாம். பதிவுக்கட்டனத்திளிருந்து விலக்கும் அளிக்கப்படுகிறது.
எம்டிஎன்எல் : 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு 25% சலுகை நிறுவுதல் கட்டணத்திலும், லேன்ட்லைன் இணைப்புக்கான மாதாந்திரக் கட்டணத்திலும் வழங்கப்படுகிறது.
இதர பயன்கள்
வங்கிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட சில நிறுவனங்கள் சில சிறப்பு வசதிகளை இவர்களுக்காகப் பயன்பாட்டில் வைத்துள்ளன. மருத்துவமனைகளில் பதிவுகளின் போதும், ஆய்வக பரிசோதனைகளின் போதும் மூத்தோருக்குத் தனி வரிசைகள் உண்டு.
நீதிமன்றம்
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்களது வழக்குகளின்போது முன்னுரிமையான விசாரணைகள் கோரி நீதிமன்றத்திற்குக் கடிதம் எழுதலாம்.
பாஸ்போர்ட் சரிபார்ப்புச் சலுகை
மூத்த குடிமக்களின் 18 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்கும்போது பிள்ளைகளின் பாஸ்போர்ட் நகலுடன் விண்ணப்பித்தால் காவல்துறையின் சோதனையை ஒத்திவைத்து உடனடி பாஸ்போர்ட் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வங்கி கிளைகள்
வங்கிகளின் கிளைகளில் மூத்தொருக்காகத் தனி வரிசைகள் உண்டு. பெரும்பாலான வங்கிகள் மூத்த குடிமக்களுக்கான சிறப்புக் கணக்குகள் துவங்கி மூத்த குடிமக்களுக்கான அட்டை வழங்குதல், முன்னுரிமை வங்கி சேவைகள் அளித்து வருகின்றனர்.
குறிப்பு
மதிப்புமிக்க இந்திய மூத்த குடிமக்களுக்கு அரசுகள் வழங்கியுள்ள திட்டங்களின் விவரங்களைத் தெரியப்படுத்தி அவற்றின் பயன்கள் அவர்களைச் சென்றடைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நாமும் ஒருநாள் அந்தப் பட்டியலில் வரக்கூடியவர்கள் என்பதை நினைத்துப் பார்த்து நடந்து கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications