இந்தியாவில் பிரதமர் மோடி அவர்கள் பண மதிப்பு நீக்க நடவடிக்கையினை எடுத்த பிறகு பல முன்னணி வாலெட் மற்றும் டெக் நிறுவனங்கள் யூபிஐ மூலமாகப் பணப் பரிமாற்றம் செய்வதற்கான செயலிகளை அறிமுகம் செய்து வருகின்றன.
வாட்ஸ் ஆப் நிறுவனம் பணப் பரிமாற்ற சேவை வழங்க ஆர்பிஐ வங்கியிடம் இருந்து அனுமதிகளைப் பெற்று வரும் நிலையில் கூகுள் இந்தியா டேஜ் என்ற செயலி மூலமாகச் செப்டம்பர் 18 முதல் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவையினை யூபிஐ வழியாக அளிக்க இருக்கின்றது.
ஆல்ப்பாபெட் நிறுவனத்தின் கீழ் வரும் கூகுள் நிறுவனம் செப்டம்பர் 18 முதல் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவையினை வழங்க உள்ளதாக Ken.com தெரிவித்துள்ளது.
மேக் இன் இந்தியா
தேஜ் செயலி முழுக்கு முழுக்க இந்தியாவிலேயே மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. தேஜ் என்றால் இந்தியில் வேகமாக என்று பொருளாகும். இந்தச் செயலி ஆதார் பே மூலம் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூபிஐ என்றால் என்ன?
யூபிஐ என்பது செயலி மூலம் பணப் பரிமாற்றம் செய்யக் கூடிய ஒரு வசதி ஆகும். இந்தச் சேவை ரகுராம் ராஜன் அவர்கள் ஆர்பிஐ கவர்னராக இருந்து விலகுவதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட சேவையாகும். மொபைல் தளத்தில் இயங்கும் இந்த யூபிஐ சேவையின் மூலம் இரண்டு வங்கி கணக்குகள் இடையில் எளிதாகப் பணப் பரிமாற்றம் செய்ய முடியும்.
போட்டி
இந்தியாவில் அதிகப் பயனர்கள் உடைய பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் ஆப் செயலியும் விரைவில் யூபிஐ சேவையினை அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களும் யூபிஐ செயலி சேவையினை வழங்குவது மட்டும் இல்லாமல் இந்தியாவில் உள்ள 45-க்கும் மேற்பட்ட வங்கி சேவைகள் யூபிஐ பணப் பரிமாற்ற சேவையினை வழங்குகின்றன.
பிற சாட் செயலிகள்
விசாட், ஹைக் உள்ளிட்ட செயலிகள் ஏற்கனவே யூபிஐ பணப் பரிமாற்ற சேவையினை வழங்கி வருகின்றன.
பிஓஏஸ்
விரைவில் பிஓஎஸ் இயந்திரங்களிலும் யூபிஐ மூலம் பணப் பரிமாற்ற சேவை வழங்குவது குறித்து மத்திய ஐடி அமைச்சகம் ஆராய்ந்து வருகின்றது.


Click it and Unblock the Notifications