வரி விலக்குகளை அள்ளித் தரும் 5 அசத்தல் முதலீடுகள்.. என்னென்ன தெரியுமா?

சென்னை: வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கு நிதி ஒழுக்கத்தை பராமரிப்பதில் வரி திட்டமிடல் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக நிதியாண்டின் கடைசி காலாண்டில் அல்லது புதிய நிதியாண்டின் தொடக்கத்தில், ஊதியம் பெறும் நபர்கள் வரிகளைக் குறைப்பதற்கான உத்திகள் மற்றும் முதலீட்டு வழிகளைப் பற்றி சிந்திப்பது வழக்கம்.

இருப்பினும், கடைசி நிமிட முயற்சிகளை மட்டுமே நம்பி, அவசர முதலீடு செய்வதால் நிதி பின்னடைவு ஏற்படலாம். அதனால் அனைவர்க்கும் உதவும் வகையில், ஆண்டு முழுவதும் செயல்படும் வரித் திட்டமிடலின் முக்கியத்துவத்தையும், வருமானத்தைப் பாதுகாத்தல் மற்றும் வருமான வரிச் சட்டங்களின் கீழ் வரிக் கடமைகளை நிறைவேற்றுவது போன்றவற்றின் அடிப்படையில் உள்ள ஸ்கீம்களை இந்தப் பதிவில் காண்போம்.

வரி விலக்குகளை அள்ளித் தரும் 5 அசத்தல் முதலீடுகள்.. என்னென்ன தெரியுமா?

பொது வருங்கால வைப்பு நிதி (PPF): பல்வேறு வகையான முதலீடு திட்டங்கள் இருந்தாலும், அதிக வட்டி வழங்கும் மற்றும் பாதுகாப்பான முதலீடுகளில் ஒன்று இந்த Public Provident Fund, பொது வருங்கால வைப்பு நிதி திட்டம். இந்தத் திட்டம் மத்திய அரசின் ஆதரவுடன் கூடிய வரி இல்லாத சேமிப்புத் திட்டமாகும். இதுவே இதன் சிறப்பம்சம்.

அனைத்து மக்களும் நலம்பெறும் வகையில் 1968, நிதி அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்டது. தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மக்களுக்கு இந்தத் திட்டம் பயன்பெறும் வகையில், வைப்புத்தொகைக்கு வட்டி வரி இல்லாமல் இருப்பதால், இது ஒரு சிறந்த திட்டமாக கருதப்படுகிறது. PPF திட்டத்தைப் பொறுத்தவரை 15 ஆண்டுகள் லாக் இன் காலம். அதாவது 15 ஆண்டுகள் கழித்தே தொகை எடுக்க முடியும்.

முன்பே, பணம் எடுக்கும் நிலை ஏற்பட்டாலும், கணக்கு தொடங்கப்பட்ட நாளில் இருந்து 5 ஆண்டுகள் கழித்தே எடுக்க முடியும். குறைந்தபட்சமாக ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். ஆண்டுதோறும், 7.1 சதவிகித வட்டியை இத்திட்டம் வழங்கி வருகிறது.

யூலிப் திட்டம் (ULIP): இது காப்பீடு மற்றும் முதலீடு என இரு பொன்னான அம்சங்களை உள்ளடக்கிய ஒரு திட்டமாகும். யூனிட் டிரஸ்ட் அப் இந்தியா நிறுவனத்தால் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் ஒருவருக்கு காப்பீடு வழங்கப்படுவது போலவே, பரஸ்பர நிதி போல் யூனிட்களும் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் காலாண்டு, அல்லது ஆண்டிற்கு ஒரு முறை எனப் பிரித்து முதலீடு செய்யலாம். யூலிப் திட்டத்தின் மூலம் வரும் வருமானத்திற்குப் பிரிவு 80 சி மற்றும் 10டி பிரிவுகளின் கீழ் வரிவிலக்கு கிடைக்கும்.

செல்வமகள் சேமிப்பு திட்டம் (SSY): செல்வமகள் சேமிப்பு திட்டம் என்று சொல்லப்படும் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் என்பது பெண் குழந்தைக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாகுவதை கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும். இந்த திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு ஆண்டுதோறும், 8.2 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது. இதன் முதிர்வு காலம் கணக்கு தொடங்கப்பட்ட நாளில் இருந்து 21 ஆண்டுகள் வரை. ஆனால் நீங்கள் கணக்கு தொடங்கியதில் இருந்து 15 வருடங்கள் மட்டுமே தொகையை செலுத்த முடியும். PPFஐப் போலவே, ஈட்டும் வட்டிக்கும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

ஈக்விட்டி லிங்க்டு சேவிங்க்ஸ் திட்டம் (ELSS): ஈக்விட்டி லிங்க்டு சேவிங்க்ஸ் திட்டம் எனப்படும் ELSS ஒரு வகையான முதலீடு திட்டமாகும். லாபம் பெரிய அளவில் இருக்க வேண்டும் அதே சமயத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு வரி விலக்கு இருக்க வேண்டும் என்று கருதுவோருக்கு இது ஒரு சிறந்த முதலீடு விருப்பமாக அமைகிறது.

பிரிவு 80சி இன் கீழ், முதலீடு செய்யும் தொகைக்கு ரூ. 1.5 லட்சம் வரை வரி விளக்கு உண்டு. ELSS திட்டத்தின் கீழ் பணம் போட்ட தேதியில் இருந்து 3 வருடங்கள் தொகையைப் பெற முடியாது. குறைந்தபட்சம் ரூ.500 முதல் இத்திட்டம் வாயிலாக முதலீடு செய்யலாம்.

தேசிய ஓய்வூதிய திட்டம்: தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) முதலீடு செய்வதற்கான பிரபலமான தேர்வாகும், ஏனெனில் இது மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது அதிக வருமானத்தை வழங்குகிறது. இது பல்வேறு முதலீட்டு விருப்பங்களை வழங்குகிறது மற்றும் சந்தாதாரர்கள் தங்கள் ஓய்வூதிய நிதியை தேர்வு செய்ய அனுமதிக்கிறது.

வரி செலுத்துவோர் மூன்று வெவ்வேறு வழிகளில் வரியைச் சேமிக்க அனுமதிப்பதன் மூலம் NPS கூடுதல் வரிச் சலுகைகளையும் வழங்குகிறது. பிரிவு 80CCD(1)ன் கீழ் முதலீடுகளில் 1.5 லட்சம் வரை விலக்கு கோரலாம். கூடுதலாக, பிரிவு 80CCD(1B) இன் கீழ் ரூ.50,000 வரை கூடுதல் விலக்கு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+