தமிழ்நாடு அரசு தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாயை மகளிர் உரிமை தொகையாக வழங்கி வருகிறது. தற்போது தமிழ்நாட்டை சேர்ந்த இலட்சக்கணக்கான பெண்கள் இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக விண்ணப்பம் செய்துவிட்டு தங்களுக்கு பணம் கிடைக்குமா கிடைக்காதா என காத்திருக்கின்றனர்.
தமிழ்நாடு அரசு உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக தகுதி வாய்ந்த பெண்கள் மகளிர் உரிமைத்தொகை கோரி விண்ணப்பம் செய்யலாமென அறிவிப்பு வெளியிட்டது. இதனை அடுத்து லட்சக்கணக்கான பெண்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக மகளிர் உரிமைத்தொகை வேண்டி விண்ணப்பம் செய்துள்ளனர். 45 நாட்களுக்குள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா இல்லையா என்பது தெரிந்துவிடும் என கூறப்பட்ட நிலையில் இதுவரை முடிவு தெரியாததால் பெண்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

அரசு தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த பணம் சென்று சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. இதனால் அதிகாரிகளை கொண்டு கள ஆய்வு நடத்தி தான் இந்த விண்ணப்பங்களின் மீது முடிவுகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பான சில அடிப்படை சந்தேகங்கள் மற்றும் அதற்கான விளக்கங்களை நாம் தற்போது தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பம் ஒரு மாதம் ஆகிவிட்டது இன்னும் குறுந்தகவல் வரவில்லை என்பவர்கள் என்ன செய்யலாம்? - முதலில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் ஆக்டிவாக இருக்கிறதா இல்லையா என்பதை சரிபாருங்கள். ஒரு வேளை ஆக்டிவாக இருந்தும் அரசிடம் இருந்து உங்களுக்கு இதுவரை எந்த ஒரு குறுஞ்செய்தியும் வரவில்லை என்றால் உங்கள் விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கும் என அர்த்தம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
விண்ணப்பம் நிராகரிப்பட்டால் மேல்முறையீடு செய்யலாமா? - ஒருவேளை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு உங்களுடைய மனு நிராகரிக்கப்பட்டது என்ற குறுஞ்செய்தி வரும். இந்த குறுஞ்செய்தி வந்த 30 நாட்களுக்குள் மீண்டும் ஒருமுறை உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு சென்று நீங்கள் மேல்முறையீடு செய்யலாம் . நான் தகுதி வாய்ந்த பயனாளி என்பதற்கான உரிய ஆவணங்களை கையில் கொண்டு செல்ல வேண்டும்.
விண்ணப்பம் எதற்காக நிராகரிக்கப்பட்டது என்பதை எப்படி தெரிந்து கொள்வது? - பொதுவாக ஒருவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் உங்களுக்கு வரும் குறுந்தகவலிலேயே உங்களுடைய விண்ணப்பம் ஏற்கப்படாததற்கான காரணம் என்ன என்பதையும் சேர்த்துதான் அனுப்பி வைப்பார்கள் . அந்த காரணம் எனக்கு திருப்தி அடையவில்லை நான் இதற்கு தகுதி வாய்ந்தவர் தான் என எண்ணுபவர்கள் மேல் முறையீடு செய்யலாம்.
வங்கி கணக்கில் ஆதார் இணைக்கவில்லை என்றால் மகளிர் உரிமை தொகை கிடைக்காதா? - மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பம் செய்தவர்கள் முதலில் உங்களுடைய வங்கி கணக்கோடு ஆதார் எண் இணைக்கப்பட்டு இருக்கிறதா என்பதை சரி பார்க்க வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர் இல்லை என்றால் உடனடியாக உங்களுடைய வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவுரை வழங்குகின்றனர்.
என்னிடம் ரேஷன் அட்டை இல்லை ஆனால் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க அனைத்து தகுதியும் இருக்கிறது, நான் விண்ணப்பம் செய்யலாமா? - மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதி இருக்கிறது ஆனால் என்னிடம் ரேஷன் கார்டு இல்லை என்பவர்களால் இந்த திட்டத்தில் விண்ணபிக்கவே முடியாது. ரேஷன் கார்டை அடிப்படையாக கொண்டு தான் இந்த திட்ட பயனாளிகளே முடிவு செய்யபப்டுகிறார்கள் என்பதால் முதலில் ரேஷன் கார்டு பெற்றுவிட்டு பின்னர் இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்யலாம்.


Click it and Unblock the Notifications