சென்னை: அரசு சேவைகளை பெற வேண்டும் என்றால் பொதுமக்கள் ஒரு நாள் முழுவதும் அதற்காக செலவிட வேண்டி இருக்கிறது. இதற்காக வேலைக்கு லீவு போட்டு அலைய வேண்டிய சூழலுக்கு ஆளாகிறோம். அப்படியே சென்றாலும் சில பணிகள் ஒரே நாளில் முடிந்து விடாது. ஆனால் இனி அந்த சிரமம், கிடையாது.
வாட்ஸ் அப் சேவை: சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கான அரசு சேவைகள் அனைத்துமே வாட்ஸ் அப் வாயிலாக வழங்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக சென்னை மாநகராட்சி தான் பொதுமக்களுக்கான சேவைகள் அனைத்தையுமே வாட்ஸ்அப் மூலம் வழங்க உள்ளது. இதற்காக சென்னை மாநகராட்சி நிர்வாகம் என்ற 9445061913 whatsapp எண்ணை அறிமுகம் செய்திருக்கிறது.

35 அரசு சேவைகள் ஒரே இடத்தில்: இந்த 9445061913 என்ற whatsapp எண் வாயிலாக சென்னை மக்கள் 35 அரசு சேவைகளை வாட்ஸ் அப் வாயிலாகவே பெற்றுக் கொள்ள முடியும். இதற்காக அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய தேவையே இல்லை. இந்த எண்ணிற்கு ஒரு மெசேஜ் அனுப்பினாலே போதும். உதாரணமாக நீங்கள் பிறப்புச் சான்றிதழை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றால் இந்த எண்ணுக்கு வணக்கம் அல்லது ஹாய் என மெசேஜ் அனுப்பினால் போதும்.
என்னென்ன சேவைகள்: உடனே பிரதான சேவைகள், அனைத்து சேவைகள், 1913ஐ அழைக்க என மூன்று பட்டன்கள் காட்டும். அதில் அனைத்து சேவைகள் என்பதை கிளிக் செய்தால் வரி மற்றும் கட்டண சேவைகள், முன்பதிவு மற்றும் உரிம சேவைகள், பொதுமக்கள் குறை தீர்க்கும் சேவை, ஆவணங்கள், சான்றிதழ்கள்,ரசீதுகள் பதிவிறக்கம் ஆகிய பட்டியல் காட்டும்.

எப்படி சான்றிதழ் பதிவிறக்கம்: இந்த பட்டியலில் ஆவணங்கள் பதிவிறக்கம் என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதனை அடுத்து பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் ஆகிய பட்டியல் காட்டும் அதில் பிறப்பு சான்றிதழ் என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதனை அடுத்து பதிவிறக்கம் செய்க என்பதை கிளிக் செய்தால் நீங்கள் பதிவு செய்த மொபைல் எண், பதிவெண் அல்லது விவரங்களை உள்ளிட்டால் வாட்ஸ் அப்பிலேயே பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.
வேறு என்ன வசதி: கடை வாடகை செலுத்துவது, செல்லப்பிராணிகளை பதிவு செய்வது, சொத்து வரி செலுத்துவது , தொழில் வரி செலுத்துவது, வர்த்தக உரிமம் செலுத்துதல் மற்றும் புதுப்பித்தல், சமுதாயக்கூடம் முன்பதிவு, முதல்வர் படைப்பகம் தொடர்பான சேவைகள், நீச்சல் குளம் முன்பதிவு, பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், நகரமைப்பு தொடர்பான சேவைகள், விண்ணப்பங்கள் கண்காணிப்பு, கட்டடம் பதிவு உள்ளிட்ட சேவைகள் கிடைக்கும்.
தமிழ், ஆங்கிலம்: அதே போல நமக்கு அருகே இருக்கும் மண்டல அலுவலகம், வார்டு அலுவலகம் கண்டறிவது, பேருந்து நிறுத்துமிடங்கள், அம்மா உணவகம், மயான பூமி, சமுதாயக்கூடம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற சமூக சுகாதார மையம், ஆகியவையும் நம்மால் இந்த வாட்ஸ் அப் சாட் பாட் சேவை மூலமே அறிய முடியும். தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் இதில் உரையாட முடியும் .


Click it and Unblock the Notifications