இன்றைய சூழலில் கிரெடிட் கார்டு பயன்படுத்தாதவர்களைப் பார்ப்பதற்கு அரிதாக உள்ளது. அவசரத் தேவைகளுக்கு உற்ற தோழனாக கிரெடிட் கார்டு மாறி வருகிறது.இதனால் பல வங்கிகள் ஆஃபர்களை அள்ளிக் கொடுத்து வாடிக்கையாளர்களின் கவர்ந்து கிரெடிட் கார்டு பெற வைக்கின்றன. ஒரு சிலர் வங்கிகள் கொடுக்கும் ஆஃபருக்கும் மயங்கி நான்கு ஐந்து கிரெடிட் கார்டுகளை வாங்கிவிடுகின்றனர். அதில் சிலவற்றை அப்படியே பீரோவில் பூட்டி வைத்து மறந்தும் விடுகின்றனர். இது போன்ற செயலால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கும் என்பது தெரியுமா?

வங்கிகள் எப்போது கிரெடிட் கார்டை க்ளோஸ் செய்யும்?: நீங்கள் ஒரு கிரெடிட் கார்டை வாங்கிவிட்டு அதை பயன்படுத்தாமல் அப்படியே வைத்திருக்கிறீர்கள். தொடர்ந்து 3 முதல் 12 மாதங்கள் வரை பயன்படுத்தாமல் வைத்திருந்தால் உங்களுடைய செயல்பாட்டை வங்கி கண்காணிக்கத் தொடங்கும்.
கிரெடிட் கார்டு பயன்பாட்டிற்கும் இந்திய ரிசர்வ் வங்கி சில விதிகளை வகுத்துள்ளது. அதன்படி உங்களுடைய கிரெடிட் கார்டை நிரந்தரமாக க்ளோஸ் செய்வதற்கு முன்பு வங்கிகள் 30 நாட்களுக்கு முன்னதாக அந்தந்த நபர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவித்துவிட்டால் நீங்கள் அதற்கான பதிலை வழங்க வேண்டும். இது போன்ற சூழலில் மீண்டும் உங்களுடைய கிரெடிட் கார்டை நீங்கள் பயன்படுத்தலாம்.
ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி ஒரு கிரெடிட் கார்டை வாங்கிவிட்டு அதை வைத்து நீங்கள் எந்த செலவும் செய்யாமல் இருந்து கொண்டு, வெறும் PIN நம்பரை மட்டும் மாற்றினாலோ அல்லது ஸ்டேட்மெண்ட்டை அவ்வப்போது செக் செய்து வந்தாலோ, அது பயன்பாட்டில் உள்ளதாகவே கருத வேண்டும். ஒரு வேலை இதையும் செய்யாமல் இருந்தால் தான் பிரச்சனை.
கிரெடிட் ஸ்கோருக்கு ஆபத்து: நீங்கள் பயன்படுத்தாத கிரெடிட் கார்டை வைத்திருந்தால் அது உங்கள் கிரெடிட் ஸ்கோரை நேரடியாக பாதிக்கும். எப்படி என்று தானே யோசிக்கிறீர்கள்? அதை ஒரு உதாரணத்தோடு பார்ப்போம். உங்களிடம் வெவ்வேறு வங்கியின் கிரெடிட் கார்டு இருந்தாலும் சிபில் போன்ற அமைப்புகள் அனைத்தையும் ஒன்றாக தான் கணக்கிட்டு கொள்ளும்.
உதாரணமாக நீங்கள் கார்டு A மற்றும் கார்டு B என்ற இரண்டு கார்டுகளை வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு கார்டுக்கும் கிரெடிட் லிமிட் ரூ.1 லட்ச ரூபாய். தற்போது உங்களிடம் இரண்டு கார்டு உள்ளது. இந்த இரண்டையும் சேர்த்தால் ரூ.2 லட்சம் கிரெடிட் லிமிட்.
நீங்கள் ஒவ்வொரு மாதமும் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ரூ.30,000 செலவு செய்யும் நபர் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் கார்டு A-வை மட்டும் பயன்படுத்தி தற்போது மாதத்திற்கு ரூ.30,000 செலவு செய்கிறீர்கள். 2 கிரெடிட் கார்டையும் சேர்த்து ரூ.2 லட்சம் கிரெடிட் லிமிட் என்று முன்பே பார்த்தோம். இந்த ரூ.2 லட்சத்தில் ரூ.30,000 என்பது வெறும் 15 சதவீதம் மட்டுமே.
உங்களுடைய செலவு 30 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் நீங்கள் நல்ல நிதி நடத்தை உடையவராக வங்கிகள் கருத்தில் கொள்ளும். தற்போது நீங்கள் கார்டு-Bஐ பயன்படுத்தாமல் அப்படியே வைத்திருக்கிறீர்கள். இதுபோன்ற சமயத்தில் வங்கிகள் உங்களுடைய கார்டை க்ளோஸ் செய்துவிடும். அதன் பிறகு உங்களுடைய கிரெடிட் லிமிட் ரூ.1 லட்சமாக மாறும். மறுமாதம் நீங்கள் மீண்டும் ரூ.30,000 செலவு செய்கிறீர்கள். ரூ.1 லட்சம் கிரெடிட் லிமிட்டில் 30,000 என்றால் 30 சதவீதம். நீங்கள் 30 சதவீதம் வரை செலவு செய்பவராக இருந்தால் உங்களை நல்ல நிதி நடத்தை உடையவராக வங்கிகள் கருதாது. இது போன்ற சமயத்தில் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும்.
எனவே கிரெடிட் கார்டை வாங்குவதற்கு முன்பு ஒன்றுக்கு இருமுறை யோசித்து வாங்குங்கள்! அதோடு உங்களுடைய செலவு பழக்க வழக்கத்தையும் கண்காணித்து அதன் பின்னர் தேர்வு செய்யுங்கள்!


Click it and Unblock the Notifications