புதிதாக கார் வாங்குபவர்களும் சரி ஏற்கனவே சொந்தமாக கார் வைத்திருப்பவர்களும் சரி இந்த ஒரு டிரிக்கை ஃபாலோ செய்தால் ஒவ்வொரு ஆண்டும் FASTag-இல் பல ஆயிரங்களை சேமிக்க முடியும். அதற்கென ஒரு டிரிக் உள்ளது, அது என்ன என்பதை தெரிவித்து கொள்ளலாம்.
நம் நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் அந்த சாலையை பராமரிக்கும் நிறுவனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்த வேண்டும். இதற்காகவே டோல் கேட் எனப்படும் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்பெல்லாம் இங்கே வாகனங்கள் வரிசையாக நின்று பணம் செலுத்த வேண்டி இருந்தது. ஆனால் FASTag வருகையால் அந்த பிரச்சினை தீர்ந்தது. அதாவது நம் வங்கி கணக்கில் இருந்து ஃபாஸ்டேக் வாலெட்டில் பணத்தை போட்டு வைத்தால் டோல் கேட்டை கடக்கும் போதெல்லாம் தானாகவே அதில் இருந்து பணம் எடுத்து கொள்ளப்படும்.

டோல் கட்டணம்: சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் அடிக்கடி வெளியூர் செல்பவர்களாக இருந்தால் ஒவ்வொரு டிரிப்பிலும் பெட்ரோல் செலவுக்கு பயப்படுவதை போல சுங்க கட்டணத்திற்கும் பயன்பட வேண்டும். ஏனெனில் டோல் கட்டணமே ஒரு கணிசமான செலவாக இருக்கும். உதாரணமாக ஒரு நபர் சென்னையில் இருந்து கோவைக்கு காரில் பயணம் செய்தால், கிட்டதட்ட 8 முதல் 9 டோல் கேட்களை கடக்க வேண்டி இருக்கும், அதற்கு சுமார் 750 ரூபாய் வரை செலவிட வேண்டும்,. ஒரு வழி பயணத்துக்கு மட்டுமே இது, திரும்ப வரும் போது அதே 750 ரூபாய் செலவு உண்டு.
அது என்ன FASTag Annual Pass?: ஆனால் இந்த ஒரு டிரிக்கை பயன்படுத்தினால் இந்த டோல் செலவை மிச்சப்படுத்தலாம். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பாஸ்டேக் வருடாந்திர பாஸ் (FASTag Annual Pass) என்ற ஒரு திட்டத்தை செயல்படுத்துகிறது. தனிநபர் பயன்பாட்டுக்கான கார்கள், ஜீப்கள் மற்றும் வேன்கள் அதாவது Non-commercial private vehicles எனப்படும் இலகுரக வாகனங்களுக்கு மட்டுமே இந்த பாஸ் பொருந்தும். வணிக வாகனங்களுக்கு , டாக்சிகளுக்கு எல்லாம் இது செல்லாது.

எப்படி பயன்படுத்தலாம்?: இதன்படி நீங்கள் ஓராண்டுக்கான டோல் பாஸை 3,075 ரூபாய் கட்டணம் செலுத்தி பெற்று கொள்ளலாம். இந்த பாஸ் வாங்கிய நாளிலிருந்து ஒரு வருடத்திற்கு அல்லது 200 டிரிப்களுக்கு - இதில் எது முதலில் வருகிறதோ அது வரை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது 200 சுங்கச்சாவடிகளை கடப்பது அல்லது பாஸ் எடுத்து ஓராண்டு காலம் இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை பாஸ் செல்லும்.
எங்கு செல்லாது?: இந்தியாவின் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய விரைவுச்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் மட்டுமே இது வேலை செய்யும். மாநில நெடுஞ்சாலைகளில் வழக்கமான ஃபாஸ்டேக் கட்டணம் பிடிக்கப்படும்.
எவ்வளவு மிச்சம்?: வழக்கமான பாஸ்டேக் முறையில் ஒவ்வொரு முறையும் ஊருக்கு சென்று திரும்பும்போது கட்டணம் செலுத்தினால் கணிசமான தொகை செலவாகும். ஆனால், இந்த வருடாந்திர பாஸை எடுப்பதன் மூலம் எவ்வளவு மிச்சப்படுத்தலாம் என்பதை பின்வரும் உதாரணம் மூலம் புரிந்து கொள்ளலாம்.
உதாரணம்: நீங்கள் சென்னை - பெங்களூர் போன்ற நெடுஞ்சாலைகளில் மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பயணம் செய்பவர் என வைத்துக்கொள்வோம். ஒரு முறை சென்று வர கட்டணமாக சுங்கச்சாவடிகளில் தோராயமாக 500 ரூபாய் வரை செலவாகும். ஒரு மாதத்திற்கு 2 முறை சென்று வந்தாலே 1000 ரூபாய் முதல் செலவு. ஓராண்டுக்கு என்றால் 10,000 ரூபாய்க்கு மேல் செலவு.
ஆனால், நீங்கள் முன்கூட்டியே 3,075 செலுத்தி வருடாந்திர பாஸை வாங்கிவிட்டால், அடுத்த ஒரு வருடத்திற்கு அல்லது 200 முறை சுங்கச்சாவடியை கடக்கும் வரைகூடுதலாக ஒரு பைசா கூட கட்ட தேவையில்லை. இதன் மூலம் ஆண்டு முழுவதும் பல ஆயிரம் ரூபாயை உங்களால் சேமிக்க முடியும்.
அதுவும் புதிதாக கார் வாங்கியவர்கள் அந்த உற்சாகத்தில் மாநிலங்களுக்கு இடையேயான நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வார்கள். வழக்கமான முறையில் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் 100 முதல் 150 வரை பிடிப்பதனால் பயணத்தின் இறுதியில் சுங்கக் கட்டணமே பெரிய தொகையாக இருக்கும். இந்த வருடாந்திர பாஸ் இருந்தால், பணம் குறையும் என்ற டென்ஷன் இல்லாமல் 200 முறைகள் வரை தடையில்லாமல் நெடுஞ்சாலைகளில் பயணிக்கலாம்.
எப்படி பாஸ் பெறுவது?: இந்த பாஸ் பெறுவது மிகவும் ஈஸி, உங்கள் காரில் உள்ள பாஸ்டேக் உங்கள் வாகனத்தின் பதிவு எண்னுடன் (VRN) சரியாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.இதனை அடுத்து போனில் 'Rajmarg Yatra' மொபைல் செயலலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். ஹோம் பக்கத்திலேயே annual toll pass என காட்டும். அதில் உங்களின் வாகனத்துடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், வாகன பதிவு எண் ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
விவரங்கள் சரிபார்க்கப்பட்ட உடன், ஆன்லைன் மூலமாக 3,075 ரூபாய் செலுத்தினால், உங்களது ஃபாஸ்டாக்கில் இந்த வருடாந்திர பாஸ் ஆக்டிவேட் ஆகிவிடும். சொந்தமான கார் வைத்திருப்பவர்கள் வெளியூர் பயண செலவை குறைக்க இந்த வருடாந்திர பாஸ் முறையை தேர்ந்தெடுப்பது மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் லாபகரமான வழி.


Click it and Unblock the Notifications


