இந்திய பங்குச்சந்தையில் ஐபிஓ வெளியீடு அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சில்லறை முதலீட்டாளர்கள் ஐபிஓ-க்களில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இருப்பினும் பெரும்பாலானவர்கள் ஐபிஓ கிடைப்பதில்லை என புலம்புவதை கேட்க முடிகிறது. ஐபிஓ அலாட் ஆவதற்கான வாய்ப்புகளை எப்படி அதிகரிப்பது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஐபிஓ முதலீடுகளில் ஆர்வம் அதிகரிப்பு ஏன்?: சில்லறை முதலீட்டாளர்கள் ஐபிஓ-க்களில் முதலீடு செய்வது என்பது 2023ஆம் ஆண்டில் உச்சத்தை கண்டது. எஸ் எம் ஈ துறையில் வெளியான 166 நிறுவனங்களில் 51 நிறுவனங்களின் ஐபிஓ-க்கள் 100 மடங்கு அதிகமான விண்ணப்பங்களை பெற்றன.

இதில் குறிப்பிட்ட 12 நிறுவனங்கள் 300 மடங்கு அதிகமான விண்ணப்பங்களை பதிவு செய்தன. கடந்த வெளியான ஐபிஓ-க்களில் பெரும்பாலானவை 50 முதல் 140 % லாபத்தை தந்தன.
ஐபிஓ-க்களில் முதலீடு செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் பங்குகள் கிடைத்து முதல் நாள் சந்தையில் பட்டியலிடும் போதே விற்று விடுவர், சிலர் நீண்ட கால முதலீடாக வைத்துக் கொள்வர். சில்லறை முதலீட்டாளர்களில் பலருக்கு தாங்கள் எதிர்பார்க்கும் நிறுவனங்களின் ஐபிஓ கிடைப்பதில்லை.
விண்ணப்பங்களை அதிகரிக்கலாம்: உங்கள் குடும்ப உறுப்பினர்களில் எத்தனை பேரிடம் டிமாட் கணக்கு உள்ளதோ அத்தனை கணக்குகளில் இருந்தும் ஐபிஓ விண்ணப்பம் செய்யலாம். அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் இருந்தால் ஏதேனும் ஒரு கணக்கிற்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
சிறார் பெயரில் விண்ணப்பிக்கலாம்: நமது சட்டப்படி 15 வயதுக்கு மேற்பட்ட சிறார்களின் பெயர்களில் டிமாட் கணக்கு தொடங்க முடியும். எனவே உங்கள் வீட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட சிறார் இருந்தால் அவர்கள் பெயரில் டிமாட் கணக்கு தொடங்கி வங்கி கணக்குடன் இணைக்கலாம். 15 வயதுக்கு மேற்பட்டவர் எனில் யுபிஐ ஐடி பெற முடியும்.
எனவே பாதுகாவலரால் எளிதாக இந்த கணக்கை இயக்கி ஐபிஓ விண்ணப்பம் , முதலீடு ஆகியவற்றை மேற்கொள்ளலாம். சிறார் பெயரில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பங்குகள் வரை விண்ணப்பிக்கலாம்.
பிரிக்கப்படாத இந்து குடும்பம் (HUF): பிரிக்கப்படாத இந்து குடும்பங்களின் பெயரில் ஐபிஓ விண்ணப்பம் செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. பிரிக்கப்படாத இந்து குடும்பத்தினருக்கு , சில்லறை தனி முதலீட்டாளர்கள், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் ஆகிய பிரிவுகளில் பங்குகள் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
பெரிய அளவில் பங்குகளை கோராதீர்கள்: 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவான அனைத்து சில்லறை தனிப்பட்ட முதலீட்டாளர் விண்ணப்பங்களையும் சமமாக கருதி, லாட்டரியில் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஒரு முதலீட்டாளருக்கு அதிகபட்சமாக ஒரு லாட்டை ஒதுக்குமாறு நிறுவனங்களை கட்டாயப்படுத்தும் செயல்முறையை செபி வகுத்துள்ளது. எனவே, ஒரு பெரிய விண்ணப்பத்தை உருவாக்குவதன் மூலம் உங்கள் ஒதுக்கீட்டின் வாய்ப்புகளை அதிகரிக்க முடியாது.
கட் ஆஃப் விலையில் விண்ணப்பம் செய்வது: ஐபிஓவில் ஒரு பங்கின் விலை வரம்பு ரூ.200- 205 எனில், நிராகரிப்பைத் தவிர்க்க, அதிகபட்ச விலையில் (ரூ.205) விண்ணப்பிப்பது உங்களுக்கு பங்குகளை பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். எனவே கட்-ஆஃப் விலையில் விண்ணப்பிக்க வேண்டும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications