மங்களூரில் குக்கர் வெடிகுண்டு வெடித்து ஆட்டோ சிதறிய நிலையில், கர்நாடக மாநிலத்தில் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூரில் சாலையில் சென்று கொண்டிருந்த பயணிகள் வாகனம் ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. இந்த வெடிவிபத்தில் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த இருவர் மோசமாக காயமடைந்துள்ளனர்.
இது குறித்து தீவிர ஆய்வு நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த ஆட்டோவில் குக்கர் ஒன்று காணப்பட்டது. இந்த குக்கரில் வெடிபொருட்கள் வைத்து வெடி பொருட்கள் வெடிக்க வைக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகின்றது.
ஆதாரை வைத்து சிம் கார்டு
இது குறித்து கர்நாடக மாநில டிஜிபி, இந்த வெடிவிபத்து சம்பவம் தற்செயலானது அல்ல, இது ஒரு திட்டமிட்ட சதி என்றும் விளக்கமளித்துள்ளது. அதெல்லாம் சரி, இந்த சம்பவத்திற்கும் ஆதார் கார்டிற்கும் என்ன சம்பந்தம்? வாருங்கள் பார்க்கலாம்.
தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த விபத்தில் காயமடைந்த நபர் ஒருவர் பயன்படுத்திய செல்ஃபோனின் சிம் கார்டு ஊட்டியை சேர்ந்த , குந்தசப்பை கிராமத்தை சேர்ந்த சுரேந்தர் என்பவரின் ஆதாரை வைத்து வாங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
ஆதார் தவறாக பயன்படுத்தல்
இந்த வெடி விபத்தில் சம்பந்தபட்டவர் சமீபத்தில் தமிழகத்தில் கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையில் இதற்கும் கோயம்புத்தூர் வெடிப்பு சம்பவத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கலாமோ என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகின்றது. இந்த சம்பவத்தில் ஆதார் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்ட நிலையில், இதுபோன்ற காலகட்டத்தில் சிக்கலுக்கு உள்ளாவதும் இதன் மூலம் அறிய முடிகிறது. ஆக இதுபோன்ற மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி?
இன்றைய காலகட்டத்தில் முக்கிய ஆவணமாக உள்ள ஆதார் கார்டு, அனைத்து பரிவர்த்தனைகளில் ஒன்றாக இருந்து வருகின்றது. எனினும் இத்தகைய அவசியமான ஆதார் கார்டினை பயன்படுத்தி மோசடி சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. ஆக ஆதார் கார்டினை பத்திரமாக வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாகும்.
மொபைல் நம்பருடன் இணைத்துள்ளீர்களா?
உங்களது 12 இலக்க ஆதார் எண்ணுடன் செல்போன் எண் இணைக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி படுத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை உங்களது ஆதார் கார்டில் வேறு மொபைல் எண் பயன்படுத்தப்படுவதாக நீங்கள் நினைத்தால் அதனை உடனடியாக மாற்றிக் கொள்ளுங்கள்.
சரியான மொபைல் எண்?
முதலில் https://myaadhaar.uidai.gov.in/verify-email-mobile என்ற இணைய பக்க்கத்தில் சென்று, அதில் வெரிஃபை மொபைல் நம்பர் அல்லது வெரிஃபை ஈமெயில் என்பதில், எதனை வெரிஃபை செய்ய வேண்டுமோ அதனை வெரிபை செய்ய வேண்டும்.
இதனையடுத்து உங்களது ஆதார் எண்ணினை கொடுக்க வேண்டும். அதனை தொடர்ந்து உங்களது மொபைல் எண் அல்லது மெயில் ஐடியினை பதிவு செய்ய வேண்டும்.
அதன் பிறகு கேப்ட்சா எழுத்தினை பதிவு செய்யுங்கள். மொபைல் என் வெரிஃபிகேஷன் எனில், அதில் ஓடிபி கொடுத்து செக் செய்து கொள்ளவும். உங்கள் மொபைல் எண் சரியாக லிங்க் செய்யப்பட்டிருந்தால், உங்களது மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். மெயில் எனில் மெயிலுக்கு ஓடிபி வரும். ஆக அதன் மூலம் செக் செய்து கொள்ளலாம்.
ஆதார் லாக்
ஆதார் லாக் அல்லது பயோமெட்ரிக் வசதியினை பயன்படுத்தலாம். இதன் மூலம் தேவைப்படும் சமயத்தில் நீங்கள் லாகின் செய்து கொள்ளலாம். இதுவும் உங்கள் ஆதார் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வழிவகுக்கும்.
இதற்காக https://uidai.gov.in/ என்ற இணையத்தின் பக்கம் சென்று, மை ஆதார் என்ற மெனு பாரினை கிளிக் செய்ய வேண்டும். அதில் ஆதார் சர்வீசஸ் என்ற மெனு பாரின் கீழ் உள்ள Aadhaar lock and unlock services என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
இல்லையெனில் https://resident.uidai.gov.in/aadhaar-lockunlock பக்கத்தில் நேரிடையாக செல்லலாம்.
எப்படி லாக் செய்வது?
இப்பக்கத்தில் ஆதார் எண் மற்றும் திரையில் தெரியும் பாதுகாப்புக் குறியீட்டு எண் (Security Code), பெயர், உங்களது பின்கோடு ஆகியவற்றை பதிவு செய்து Send OTP என்பதைக் கிளிக் வேண்டும்.
அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட உங்களது மொபைல் எண்ணுக்கு வரும் ஒடிபி-யை Enter OTP என்ற இடத்தில் டைப் செய்துவிட்டு, Login என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
இதைச் செய்ததும் ஆதார் லாக் செய்யப்பட்டுவிடும். எனினும் லாக் செய்யப்பட்ட ஆதார் எந்த இடத்திலும் பயன்படாது என்பது குறிப்பிடதக்கது. தேவையானபோது லாக் செய்த ஆதாரை ஆக்டிவேட் (Activate) செய்யவும் முடியும். அதற்கும் இதையே திரும்ப ஒருமுறை செய்ய வேண்டும்.
ஆதார் பயன்பாட்டு வரலாறு?
ஆதார் எண் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும், அது எப்போது, எங்கு பயன்படுத்தப்பட்டது என்பதையும் நாம் நாம் இணையம் மூலம் பார்க்க முடியும். ஆதார் எண்ணை பயன்படுத்திய விதம், தேதி, நேரம், எந்த நிறுவனத்துக்காக ஆதார் எண் பயன்படுத்தப்பட்டதோ அந்த நிறுவனத்தின் பெயர் (உதராணம் இன்சூரன்ஸ், வங்கிகள், பங்கு சந்தைகள், ஐடி), பயன்பாடு வெற்றிகரமாக முடிந்ததா இல்லையா என்ற விவரம், ஏதேனும் பிரச்னை ஏற்பட்டிருந்தால், என்ன பிரச்சனை என்பன உள்ளிட்ட விவரங்கள் பட்டியலிடப்பட்டிருக்கும். ஆக ஒரு வேளை இந்த வரலாற்றிலும் உங்களது ஆதார் தவறாக பயன்பட்டிருந்தால் தெரியவரும். அதனை வைத்தும் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கலாம்.


Click it and Unblock the Notifications