சென்னை: வரி ஏய்ப்பு செய்ததாக கூறி சிலரது வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபடும் செய்திகளை நாம் பார்ப்போம். அப்படி சோதனை நடத்தப்படும் போது கணக்கில் வராத பணம் கையகப்படுத்தப்பட்டதாக செய்திகளில் கூறப்படுவது உண்டு. அப்பொழுது இந்தியாவில் ஒரு குடிமகன் தன்னுடைய வீட்டில் எவ்வளவு பணத்தை ரொக்கமாக வைத்திருக்கலாம் சட்டம் என்ன சொல்கிறது என்ற குழப்பம் நமக்கு வரும். அதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவை சேர்ந்த குடிமக்கள் தங்களுடைய வீட்டில் இவ்வளவு பணத்தை தான் கையில் ரொக்கமாக வைத்திருக்க வேண்டும் என எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. அதாவது நமது இந்திய சட்டம் எந்த ஒரு கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை. எனவே நாம் எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் வீட்டில் ரொக்கமாக சேமித்து வைக்கலாம்.

வீட்டில் இவ்வளவு பணம் தான் இருக்க வேண்டும் என்ற வருமான வரித்துறை சார்பாக எந்த ஒரு அதிகபட்ச வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் அவ்வாறு நாம் வைத்திருக்கும் பணத்திற்கு சரியான கணக்கு வைத்திருக்க வேண்டும். அதாவது அந்த பணம் எப்படி உங்களுக்கு வந்தது, அதன் மூலம் என்ன என்பதை விவரிக்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
நீங்கள் வருமான வரி துறை தாக்கலின் போதே வருமானத்தின் அனைத்து ஆதாரங்களையும் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஒருவேளை உங்கள் வீட்டில் சோதனை நடக்கிறது அப்போது ரொக்கம் கையகப்படுத்தப்படுகிறது. இந்த சமயத்தில் நீங்கள் உங்களின் வருமானம் ஆதாரங்களை காட்ட தயாராக வேண்டும்.
ஒருவேளை அந்த பணத்தின் மூலத்தை நீங்கள் சமர்ப்பிக்க முடியவில்லை என்றால் வருமான வரிச் சட்டத்தின் 69B பிரிவின் கீழ், விளக்கம் அளிக்க முடியாத சொத்துக்கள் மற்றும் வருமானம் என அது வரையறுக்கப்படும். எனவே வருமான வரித்துறையினர் அந்த பணத்திற்காக உங்களிடம் வரி வசூல் செய்யலாம் மற்றும் அபராதமும் விதிக்கலாம்.
அதாவது இப்படி கணக்கில் காட்டாத பணத்திற்கு வருமான வரி அதிகாரிகள் மொத்தத் தொகையில் 78% வரை வரி மற்றும் அபராதத்தை வசூலிக்கலாம். இந்திய வருமான வரி சட்டம் வீட்டில் பணத்தை வைத்திருப்பதற்கான அதிகபட்ச வரம்பை குறிப்பிடவில்லை என்றாலும், அதன் மூலத்தை விளக்க முடியவில்லை என்றால் வருமான வரி அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தலாம்.
குறிப்பாக நீங்கள் தொழில் புரிபவர் என்றால் உங்கள் கணக்கு புத்தகங்கள் மிகச்சரியாக பராமரிக்கப்பட வேண்டும். அதாவது இந்தியாவில் ஒரு தனிநபர் வீட்டில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம், ஆனால் அதற்கான ஆவணங்களை முறையாக வைத்திருக்க வேண்டும். நீங்கள் நேர்மையாக சம்பாதித்த பணம் என்றால் எவ்வளவு தொகையாக இருந்தாலும் நீங்கள் வைக்கலாம் அதைபற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.


Click it and Unblock the Notifications