பான் கார்டு இந்தியர்களின் முக்கிய அடையாள ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. பான் கார்டு நமக்கான ஒரு புகைப்பட அடையாளமாக பயன்படுகிறது. அதுமட்டுமில்லாமல் வருமானவரி கணக்கு தாக்கல் செய்வது, பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது, வங்கி கணக்கு தொடங்குவது, ஒரு காப்பீடு எடுப்பது என நிதி சார்ந்த பெரும்பாலான சேவைகளை பெறுவதற்கு பான் கார்டு என்பது கட்டாயம்.
பான் கார்டு பெறுவதற்கு நாம் நம் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வாயிலாகவே எளிமையாக விண்ணப்பம் செய்யலாம். சரியான ஆவணங்கள் உங்கள் கைகளில் இருக்கிறது எனும் போது ஐந்து நிமிடங்களில் பான் கார்டு வேண்டி நீங்கள் ஆன்லைன் வாயிலாகவே விண்ணப்பம் செய்யலாம். இதற்காக எங்கும் சென்று அலைய வேண்டிய அவசியம் கிடையாது.

புதிதாக பான் கார்டு வேண்டும் என்பவர்கள் https://www.proteantech.in/services/pan/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் Tax modernization என்பதை கிளிக் செய்து பான் என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர் ஓபன் ஆகும் பக்கத்தில் new application என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதனை அடுத்து எந்த வகையிலான பான் கார்டுக்கு விண்ணப்பம் செய்கிறீர்கள் அதாவது இந்திய குடிமகன் என்றால் படிவம் 49ஏ என்பதை கிளிக் செய்து விட்டு தனிநபராக விண்ணப்பம் செய்கிறீர்களா அல்லது ஒரு நிறுவனமாக விண்ணப்பம் செய்கிறீர்களா என்பன உள்ளிட்ட தேர்வுகள் இருக்கும் அதில் individual என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அடுத்ததாக உங்களுடைய பெயர், உங்களின் ஆதார் அட்டையில் இருக்கும் அதே ஸ்பெல்லிங்கை இதில் உள்ளிட வேண்டும். அடுத்ததாக உங்களுடைய பிறந்த தேதி, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகிய அனைத்தையும் உள்ளிட்டு சப்மிட் கொடுக்க வேண்டும். இதனை அடுத்து புகைப்படம் , முகவரி, பிறந்த தேதிக்கான அடையாள ஆவணங்களாக எதை கொடுக்கிறீர்களோ அவற்றை ஸ்கேன் செய்து அப்லோட் செய்ய வேண்டும். உங்களின் புகைப்படத்தையும் அப்லோடு செய்ய வேண்டும்.
இதன் பின்னர் இந்த விண்ணப்பத்திற்கான கட்டணத்தை செலுத்திய பிறகு சப்மிட் செய்ய வேண்டும். அடுத்த 15 நாட்களுக்குள் உங்களுடைய பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு பான் கார்டு வந்து சேர்ந்துவிடும். பான் கார்டு விண்ணப்பம் செய்வதற்கு அடையாள ஆவணமாக பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை பயன்படுத்தலாம். முகவரிக்கான அடையாள ஆவணமாக ஆதார், பாஸ்போர்ட் ,வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் அல்லது வங்கி கணக்கு பாஸ்புக் ஆகியவற்றை பயன்படுத்தலாம். பிறந்த தேதிக்கான அடையாள ஆவணமாக பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட், ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications