முன்பெல்லாம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் ரயில் நிலையம் சென்று படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சி காரணமாக அவை அனைத்தும் தற்போது டிஜிட்டல்மயமாகிவிட்டன. ஆனால் டிக்கெட் முன்பதிவு செய்யக் கூடிய ஏஜென்சிகள் இடையூறு காரணமாக சாமானிய மக்களால் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடிவதில்லை என தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.
தட்கல் டிக்கெட் பதிவில் சிக்கல்: குறிப்பாக தட்கல் முறையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது என்பது சாதாரண மக்களுக்கு பெரும் சிக்கலாக இருக்கிறது. ரயில் டிக்கெட் தட்கல் டிக்கெட் பதிவு தொடங்கிய ஒரு நிமிடத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளையும் ஏஜெண்டுகளே முன்பதிவு செய்து விடுவதால் சாதாரண மக்களுக்கு டிக்கெட் கிடைப்பது கிடையாது. இந்த பிரச்சனையை போக்குவதற்காக ரயில்வே துறை அமைச்சகம் கூடிய விரைவில் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் சரிபார்ப்பு கட்டாயம் என கொண்டு வரப்பட இருக்கிறது .

ஆதார் கட்டாயம்: இனிவரும் நாட்களில் தட்கல் முறையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் தங்களுடைய மின்னணு ஆதார் கார்டை சமர்ப்பித்து அத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்ணிற்கு வரும் ஓடிபியை உள்ளிட்டு அங்கீகரித்தால் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் . உண்மையான பயனாளர்கள் தட்கல் டிக்கெட் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ரயில்வே துறை அமைச்சகம் இப்படி ஒரு நடைமுறையை கொண்டு வருகிறது.
ஆதார் அங்கீகாரம் என்றால் என்ன?: ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு உங்களுடைய பெயர் ,பாலினம் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களையும் உங்களுடைய அடையாளங்களையும் சரி பார்க்கவே இந்த ஆதார் அங்கீகார முறை பயன்படுத்தப்படுகிறது. இந்திய தனித்துவ அடையாள அமைப்பு நம்முடைய ஆதார் எண்ணில் கைரேகை, கருவிழி , பெயர், பாலினம் உள்ளிட்டவற்றை பதிவு செய்து வைத்திருக்கிறது. எனவே அந்த தகவலை அடையாள சரிபார்ப்புக்கு உறுதி செய்ய நாம் நம்முடைய அனுமதியை வழங்க வேண்டும்.
தட்கல் டிக்கெட் எப்போது பதிவு செய்யலாம்: திடீரென வெளியூர் பயணம் செய்ய வேண்டிய நிலையில் இருப்பவர்கள் பயணத்திற்கு முந்தைய நாள் டிக்கெட் பதிவு செய்ய தட்கல் முன்பதிவு முறை கொண்டு வரப்பட்டது. ஏசி வகுப்புகள் கொண்ட பெட்டிகளுக்கு காலை 10 மணிக்கும், ஏசி அல்லாத வகுப்புகளுக்கு காலை 11 மணிக்கும் முன்பதிவு கிடைக்கும். ஒரு தட்கல் முன்பதிவில் நான்கு பயணிகள் வரை டிக்கெட்டினை முன் பதிவு செய்து கொள்ளலாம்.தட்கல் டிக்கட்டில் மூத்த குடிமக்களுக்கு எந்த ஒரு சலுகையும் வழங்கப்படுவது கிடையாது. நெட் பேங்கிங் உள்ளிட்ட முறைகளில் ஐஆர்சிடிசி வழியாக தட்கல் பதிவு செய்யலாம்.
எப்படி தட்கல் டிக்கெட் பதிவு செய்வது? :
· முதலில் https://www.irctc.co.in/nget/train-search தளத்தில் பயனர் பெயர், பாஸ்வேர்டு கொண்டு லாகின் செய்ய வேண்டும்.
· புறப்படும் ரயில் நிலையம் , சேரும் ரயில் நிலையம், பயண தேதி, வகுப்பு ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
· quota பிரிவில் தட்கல் டிக்கெட் என்பதை தேர்வு செய்ய வேண்டும், நீங்கள் குறிப்பிட்ட பகுதி வழியே செல்லும் ரயில்கள் அதில் காண்பிக்கும்.
· உங்களுக்கு தேவையான வகுப்பு மற்றும் ரயிலை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் "Book Now" என்பதை கிளிக் செய்ய வேண்டும்
· பயணியின் பெயர், வயது, பாலினம் ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
· சரிபார்ப்பு குறியீடை உள்ளிட்டு மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.
· Continue என்பதை தேர்வு செய்தால் டிக்கெட் விவரங்களும் கட்டணங்களும் காண்பிக்கும். அனைத்தையும் பார்த்து உறுதி செய்த பின் பணம் செலுத்த வேண்டும்.
· பணம் செலுத்திய உடன் டிக்கெட் பதிவு உறுதி செய்யப்பட்டதற்கான தகவல் திரையில் காட்டும். தொலைபேசி எண்ணுக்கும் தகவல் வந்துவிடும்.
· இனி தட்கல் முன்பதிவின் போது கூடுதலாக உங்களின் ஆதார் எண் கேட்கப்படும், அத்துடன் உங்கள் தகவல்களை பெற உங்களின் அனுமதி கேட்டு ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும்.
· நீங்கள் அந்த ஓடிபியை உள்ளிட்டால் மட்டுமே தட்கல் டிக்கெட் பதிவு செய்யப்படும். இது கட்டணம் செலுத்துவதற்கு முன்னரே கொண்டு வரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications