2023ஆம் ஆண்டு இறுதியில் புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் பிரதான மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்காக முதலமைச்சர் நிவாரண நிதியில் பொதுமக்கள் பலர் நிதியுதவி அளித்தனர்.
ஆயிரங்களில் தொடங்கி லட்சங்கள் வரை நிதியுதவிகள் வழங்கப்பட்டன. இது போன்ற நிதியுதவிகளுக்கு வரிச் சலுகை வழங்கும் ஒரு பிரிவு தான் இந்திய வருமான வரி சட்டத்தின் பிரிவு 80G.

பிரிவு 80G: அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு, அமைப்புகளுக்கு அளிக்கப்படும் நிதிக்கு வரி விலக்கு வழங்கும் பிரிவு தான் இந்த 80G. தொண்டு நிறுவனங்கள் மட்டுமல்ல பூகம்ப நிதி, நிவாரண நிதி, கோயில் அறக்கட்டளைகள் போன்றவையும் இதில் அடங்கும். ஆனால் எவ்வளவு தொகையை வரி விலக்காக கோர முடியும் என்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.
நிபந்தனைகள்: தனிநபர், பிரிக்கப்படாத இந்து குடும்பத்தினர், நிறுவனங்கள் வரி விலக்கு கோர முடியும். 100% வரி விலக்கு கோரலாம் என அரசு வரையறுத்துள்ள தொண்டு நிறுவனங்கள் அல்லது நிதிகளுக்கு உதவி செய்திருந்தால் மட்டுமே முழு தொகையையும் வரி விலக்காக கோர முடியும்ய
டிஜிட்டல் முறையிலோ அல்லது ரொக்கமாகவோ வழங்கி இருக்க வேண்டும், அரிசி, பருப்பு, துணி உள்ளிட்ட பொருட்களாக வழங்கி இருந்தால் அதற்கு வரிச் சலுகை கிடைக்காது. 80ஜி பட்டியலில் இடம்பிடித்துள்ள நிறுவனங்களுக்கு அல்லது நிதிகளுக்கு அளித்த நன்கொடை மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.
கவனிக்க வேண்டிய அம்சங்கள்: காசோலை, வரைவோலை, டிஜிட்டல் பரிமாற்றம் ஆகிய முறையில் வழங்கப்பட்ட நிதிக்கு தான் முழுமையான வரி விலக்கு கோர முடியும். ஓர் நிதியாண்டில் ரூ.2,000 வரை மட்டுமே ரொக்கமாக வழங்கிய நிதியுதவிக்கு விலக்கு கிடைக்கும்.
நிதியுதவி பெற்ற நிறுவனம் உரிய ரசீது வழங்குவதை உறுதிப்படுத்தவும்
நிறுவனத்தின் பெயர், முகவரி, பான் எண், உங்களின் பெயர் முகவரி மற்றும் பிரிவு 80ஜீ பட்டியலில் அந்த நிறுவனத்தின் பதிவு எண் ஆகியவை இருக்க வேண்டும்.
குறிப்பாக நீங்கள் உதவி செய்த தொண்டு நிறுவனத்திடம் இருந்து படிவம் 10பீஇ பெற்று கொள்வது அவசியம். தேசிய குழந்தைகள் நிதி, தேசிய விளையாட்டு நிதி உள்ளிட்ட சில குறிபிட்ட நிதிகளுக்கு 100% வரிச் சலுகை பெறலாம்.
இந்திராகாந்தி நினைவு அறக்கட்டளை, பிரதமர் வறட்சி நிவாரண நிதி போன்றவற்றுக்கு 50% வரிச் சலுகை பெறலாம். கோயில் அறக்கட்டளை போன்றவற்றுக்கு உங்களுக்கு மொத்த வருமான தொகையில் 10% தொகையை தானமாக செலுத்தி விலக்கு பெறலாம் என்பன போன்ற விதிகள் உள்ளன.
புயல் நிவாரணம், பூகம்பம் உள்ளிட்டவற்றுக்கு மாநில அரசுகள் உருவாக்கும் நிதிகளுக்கு குறிப்பிட்ட காலம் வரையில் தான் 100% வரிச் சலுகை கிடைக்கும். எனவே, நிதியுதவி அளிக்கும் முன், அது அரசு அங்கீகரித்த நிதியா? இதனால் எத்தனை சதவிகிதம் வரி விலக்கு கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம்.
நிதியுதவிகளுக்கான வரிச் சலுகை நிபந்தனைகளை அரசு அவ்வப்போது திருத்தம் செய்வதால் வருமான வரித்துறை இணையதளத்தில் சரிபார்த்து கொள்வது முக்கியமாகும்.


Click it and Unblock the Notifications