பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது அரசாங்கத்தால் வழங்கப்படும் முதலீட்டு திட்டம் ஆகும். நீண்ட காலத்திற்கு சேமிக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். அரசாங்கத் திட்டம் என்பதால் உங்களுடைய முதலீடு பாதுகாப்பாக இருப்பது மட்டுமின்றி கணிசமான வருமானத்தையும் பெற முடியும். பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு தற்போது 7.1 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டுக்கும் இதே வட்டி விகிதம் தான் பொருந்தும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தப் பதிவில் ஒருவர் எப்படி PPF திட்டத்தின் கணக்கை திறக்கலாம் என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

வட்டி எப்படி கணக்கிடப்படுகிறது?: PPF திட்டத்திற்கான வட்டி விகிதம் மாதத்தின் ஐந்தாவது நாளில் இருந்து மாதத்தின் இறுதி நாட்கள் வரை இருக்கும் குறைந்த பேலன்ஸின் அடிப்படையில் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்திற்கு குறைந்தபட்ச முதலீடாக 500 ரூபாய் முதல் தொடங்கலாம்.
அதிகபட்சமாக ஒரு நிதியாண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். PPF திட்டத்தின் முதிர்வுக் காலம் 15 ஆண்டுகள். அதாவது 15 ஆண்டுகளுக்கு உங்களால் முதலீட்டு தொகையை எடுக்க முடியாது.
PPF கணக்கு தொடங்குவதற்கான தகுதி: எந்த ஒரு இந்தியக் குடிமகனும் PPF திட்டத்தின் கணக்கைத் திறக்கலாம். மைனர் குழந்தைகளின் சார்பாக பெற்றோர்கள் அல்லது சட்டபூர்வ பாதுகாவலர்கள் PPF கணக்கைத் தொடங்கலாம். NRI-கள் PPF கணக்கைத் திறக்க தகுதியற்றவர்கள்.
ஆவணங்கள்: PPF கணக்கு தொடங்க பின்வரும் ஆவணங்கள் தேவைப்படும்.
அடையாளச் சான்று: ஆதார் கார்டு, பான் கார்டு அல்லது பாஸ்போர்ட்.
முகவரி ஆதாரம்: ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை அல்லது யுட்டிலிட்டி பில் (எலக்ட்ரிசிட்டி பில் வாட்டர் பில் கேஸ் பில்)
புகைப்படம்: சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்.
PPF கணக்கை ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் தொடங்கலாம். அதுமட்டுமின்றி நீங்கள் உங்கள் வங்கி மற்றும் தபால் அலுவலகங்கள் என எங்கு வேண்டுமானாலும் PPF கணக்கைத் திறக்கலாம்.
ஆன்லைன் செயல்முறை:
ஸ்டெப் 1: உங்கள் வங்கியின் நெட் பேங்கிங் போர்ட்டலில் உள்நுழையவும்.
ஸ்டெப் 2: PPF பகுதிக்குச் சென்று, "Open new account" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: விவரங்களைப் பூர்த்தி செய்து, ஆவணங்களைப் பதிவேற்றவும், குறைந்தபட்சம் ரூ.500 டெபாசிட் செய்யவும். OTP அல்லது நெட் பேங்கிங் மூலம் பரிவர்த்தனையை முடிக்கவும்.
ஆப்லைன் செயல்முறை: ஆஃப்லைனில் PPF கணக்கைத் தொடங்க உங்கள் வங்கி அல்லது தபால் அலுவலகத்திற்கு செல்லவும். சென்று படிவம் A-வை பெற்று பூர்த்தி செய்யவும். அதோடு அடையாள ஆவணங்களையும் சமர்ப்பிக்கவும்.


Click it and Unblock the Notifications