இந்தியாவில் பிரபல தொழிலதிபர் தொடங்கி மாத சம்பளம் வாங்குபவர் என அனைவருக்கும் தேவைப்படும், இன்றியமையாத பங்கு வகிப்பது இந்த PAN card தான். இந்தியாவில் நிதி பரிவர்த்தனை செய்ய வேண்டும் அல்லது வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் எனில் அனைவரும் இந்த பான் கார்டு வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
ஆனால் சமீபத்தில் சைபர் குற்றவாளிகள் சிலர் பிரபலங்கள், விளையாட்டு வீரர் தோனி, நடிகை ஷில்பா ஷெட்டி தொடங்கி சாமானிய மக்களின் பான் கார்டு விவரங்களை கைப்பற்றி மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனால் இந்த பான் கார்டு திருட்டு மற்றும் மோசடிகளிலிருந்து தப்பிப்பது எப்படி, உங்கள் பான் கார்டை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து இங்குக் காணலாம்.
பான் கார்டு மோசடிகள்!
கடந்த சில மாதங்களாகவே பான் கார்டு மோசடி வழக்குகள் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பலரும் பான் கார்டு மோசடிகளால் நிதி இழப்பு, திருட்டு போன்ற பிரச்சனைகளை எதிர் கொண்டுள்ளனர்.
திருடப்படும் பான் கார்டு விவரங்கள்
நீங்கள் பான் கார்டை வெளியில் உபயோகிக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் உங்கள் பான் கார்டு விவரங்களை மூன்றாம் நபரிடம் கூறினாலோ அல்லது பான் கார்டை தவறுதலாக தொலைத்து விட்டாலோ, அது மோசடி கும்பல்களின் கையில் சிக்குமேயானால், உங்கள் விவரங்களை வைத்து அவர்கள் பணத்தை திருடவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக நீங்கள் பான் கார்டுகளை ஜெராக்ஸ் எடுக்கும் கடைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
பிரபலங்களின் பான் கார்டு விவரங்கள் திருட்டு!
விளையாட்டு வீரர் தோனி மற்றும் நடிகை ஷில்பா ஷெட்டி உட்பட பல பிரபலங்களின் பான் கார்டு விவரங்களையும், சைபர் குற்றவாளிகள் திருடி அதன் மூலம் பண மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மோசடி செய்த நபர்கள் கூகுள் மூலம் பிரபலங்களின் GSTIN எண்ணை கண்டறிந்துள்ளனர். அந்த GSTIN எண்ணில் முதல் இரண்டு இலக்கங்கள் மாநிலக் குறியீடு என்றும் அடுத்து வரும் 10 இலக்கங்கள் PAN எண் எனவும் அவர்கள் அறிந்துள்ளனர். மேலும் பிரபலங்களின் பிறந்த தேதி கூகுளிடமிருந்தே எடுத்துள்ளனர்.
இதன்மூலம் அவர்கள் தங்கள் அடையாளங்களையும் பிரபலங்களுக்கேற்றவாறு மாற்றி கிரெடிட் கார்டுகளை பெற்று, மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
பான் கார்டு பயன்பாடுகள்!
நீங்கள் பான் கார்டை தவறவிடும் அல்லது உங்கள் விவரங்கள் மோசடி செய்பவர்களிடம் கிடைத்தால், அவர்கள் உங்கள் பான் கார்டை பயன்படுத்தி வங்கிகளிடம் கடன் வாங்கலாம், ஆனால் அதற்கான முழுப் பொறுப்பையும் நீங்கள் தான் ஏற்க வேண்டும்.
மேலும் பான் கார்டு மூலம் சட்டவிரோதமாக நகைகளை வாங்கவும், சொகுசு விடுதிகளில் அறை எடுத்து தங்குவது போன்ற மோசடிகளும் நடக்கலாம். அதனால் கவனமாக இருக்க வேண்டும்.
பான் கார்டை பாதுகாப்பது எப்படி!
முதலில் உங்கள் மொபைல் ஃபோனில் பான் கார்டு புகைப்படத்தை வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். அதை PDF முறையில் ஏதேனும் Folder இல் பாதுகாப்பாக வைப்பது சிறந்தது.
நீங்கள் எல்லா இடத்திலும் பான் கார்டை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். பான் கார்டுக்கு பதிலாக உங்கள் ஓட்டுநர் உரிமம் அல்லது வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தலாம்.
உங்கள் பான் கார்டு விவரங்களை நகல் முறையில் சமர்ப்பிக்கும்போது அதில் அன்றைய தேதி மற்றும் வருடம் விவரங்களுடன் கையொப்பமிடுவது அவசியம்
அனைத்து ஆன்லைன் போர்ட்டல்களிலும் உங்கள் முழுப்பெயர் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடுவதை தவிர்க்கலாம்.
உங்கள் கிரெடிட் ஸ்கோர் அல்லது CIBIL ஸ்கோர்களை சரிபார்ப்பதன் மூலம், உங்கள் பான் கார்டு மூலம் ஏதேனும் மோசடி நடந்துள்ளதா என்பதை அறிய முடியும்
பான் கார்டு மோசடியை புகாரளிப்பது எப்படி!
உங்கள் பான் கார்டு பெயரில் மோசடி செய்யப்பட்டிருந்தால் நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியவை
1. TIN NSDL எனும் போர்டலுக்குச் செல்லவும்
2. முகப்புப் பக்கத்தில், வாடிக்கையாளர் பராமரிப்பு பிரிவிற்குச் செல்லுங்கள்
3. அதன்பின் தோன்றும் திரையில் புகார்/ கேள்விகள் என்பதை திறக்கவும், உடனடியாக புகார் படிவம் திறக்கப்படும்.
4. அந்த புகார் படிவத்தில் தேவையான விவரங்களை உள்ளிட்டு, இறுதியில் Submit என்பதை க்ளிக் செய்யவும்.
இனி உங்கள் பான் கார்டு விவரங்கள் சோதிக்கப்பட்டு உடனடியாக பிளாக் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications