இண்டிகோ விமானங்கள் ரத்து: டிக்கெட் ரீஃபண்ட் கிடைக்குமா? என்ன சொல்கிறது DGCA விதிமுறை ?

இந்தியா முழுவதும் இண்டிகோ விமான சேவைகள் பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டிசம்பர் 2 முதல், இண்டிகோ (IndiGo) நிறுவனம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகளை ரத்து செய்துள்ளதுடன், பல விமானங்களும் தாமதமாகியுள்ளன. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

வழக்கமாக விமான தாமதம் ஆனாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ, பயணிகளுக்கு பணம் திரும்பப் பெறுவதற்கும், இழப்பீட்டிற்கும் உரிமை உள்ளதா என்ற சந்தேகம் பயணிகளுக்கு எழுந்துள்ளது. விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) விதிமுறைகளின்படி, விமானச் சேவை ரத்து செய்யப்பட்டால், பயணிகளுக்கு முழுப் பணத்தையும் திரும்பக் கொடுக்க வேண்டியது கட்டாயம்.

இண்டிகோ விமானங்கள் ரத்து: டிக்கெட் ரீஃபண்ட் கிடைக்குமா? என்ன சொல்கிறது DGCA விதிமுறை ?

விமானம் ரத்து செய்யப்பட்டால்: ரத்து செய்யப்பட்ட விமான சேவைக்கு, புறப்படுவதற்கு குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்னரே நிறுவனம் பயணிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போது, பணத்தைத் திரும்பப் பெறுதல் அல்லது மாற்று விமானத் தேர்வு வாய்ப்பு பயணிகளுக்கு கிடைக்கும்.

இரண்டு வாரங்களுக்கு குறைவாக, ஆனால் புறப்படும் தேதிக்கு 24 மணிநேரத்திற்கு முன்னதாக ரத்து குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டால், பயணிகள் பணம் திரும்ப பெறுவது அல்லது மாற்று விமானத்தைத் தேர்வு செய்யலாம். சரியான நேரத்தில் விமான சேவை நிறுவனம் தகவல் தெரிவிக்காதபட்சத்தில் முழுப் பணத்தையும் இழப்பீட்டையும் நிறுவனம் வழங்க வேண்டும் அல்லது மாற்று விமானத்தில் பயணிக்கும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.

ஒரு மணி நேரம் வரையிலான விமானங்களுக்கு ரூ.5,000, இரண்டு மணி நேரம் வரையிலான விமானங்களுக்கு ரூ.7,500, மற்றும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் செல்லும் விமானங்களுக்கு ரூ.10,000 இழப்பீடாக வழங்கப்படும். நிறுவனங்கள் அடிப்படை கட்டணம் மற்றும் எரிபொருள் கட்டணம் ஆகிய இரண்டில் எது குறைவானது அதனை செலுத்தலாம்.

பயணிகளுக்கு விமான நிலையத்தில் காத்திருக்கும் வசதிகள் வழங்கப்பட வேண்டும். பயணிகள் தொடர்பு விவரங்களை வழங்காத பட்சத்திலோ அல்லது நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டாலோ இழப்பீடு பொருந்தாது.

விமானங்கள் தாமதமானால்: செக்-இன் செய்த பயணிகளுக்கு உணவு, பானங்கள் போன்ற அடிப்படை வசதிகள் வழங்குவது நிறுவனங்களின் கடமையாகும். குறுகிய தூர விமானங்களுக்கு தாமதம் இரண்டு மணி நேரத்தையும், நடுத்தர தூர விமானங்களுக்கு மூன்று மணி நேரத்தையும், நீண்ட தூர விமானங்களுக்கு நான்கு மணி நேரத்தையும் தாண்டினால் இந்த வசதிகள் வழங்கப்படும்.

உள்நாட்டு விமானம் ஆறு மணி நேரத்திற்கு மேல் தாமதமானால், மாற்று விமானம் அல்லது முழுப் பணத்தைத் திரும்பப் பெறுவது ஆகியவற்றைத் தேர்வுசெய்ய பயணிகளுக்கு வாய்ப்பளிக்கப்படும். தாமதம் 24 மணி நேரத்தைத் தாண்டினாலோ, அல்லது இரவு 8 மணி முதல் அதிகாலை 3 மணி வரை உள்ள இரவு விமானம் ஆறு மணி நேரத்திற்கு மேல் தாமதமானாலோ, விமான நிறுவனம் தங்குமிடம் (ஹோட்டல்) மற்றும் போக்குவரத்து போன்ற கூடுதல் வசதிகளை பயணிகளுக்கு வழங்க வேண்டும்.

நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக தாமதம் ஏற்பட்டால், இந்தச் சலுகைகள் பொருந்தாது. வானிலை மாற்றம், எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறுகள் போன்ற காரணங்கள் இதில் அடங்கும்.

தற்போது இண்டிகோவில் ஏற்பட்டுள்ள இந்தச் சூழ்நிலைகளை அந்த நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் 'தவிர்க்க முடியாதவை' என குறிப்பிட்டுள்ளது. இண்டிகோ செய்தித் தொடர்பாளர் "கடந்த சில நாட்களாக தொழில்நுட்ப சிக்கல்கள், விமான நிலைய நெரிசல் மற்றும் செயல்பாட்டுத் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எங்கள் விமானங்கள் தவிர்க்க முடியாத தாமதங்களையும், சில சேவைகளை ரத்து செய்யும் சூழலையும் எதிர்கொண்டோம்" என தெரிவித்தார்.

அவரது அறிக்கையில், "செயல்பாடுகள் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்புவதை உறுதிசெய்ய எங்கள் குழுக்கள் அயராது உழைத்து வருகின்றன. மேலும், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மாற்று விமான விருப்பங்கள் அல்லது பணம் திரும்பப் பெறுதல் ஆகியவை பொருந்தும் பட்சத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த இடையூறுகளால் எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"சிரமத்தைக் குறைக்க வாடிக்கையாளர்கள் விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன்பு, https://www.goindigo.in/check-flight-status.html என்ற வலைத்தளத்தில் விமானத்தின் தற்போதைய நிலையைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று இண்டிகோ செய்தித் தொடர்பாளர் அறிவுறுத்தினார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+