இந்தியாவில் ரயில் பயணங்கள் சௌகரியமாக இருந்தாலும் ரயில் டிக்கெட் முன்பதிவு அத்தனை சௌகரியமாக இருப்பதில்லை. அதிலும் தட்கல் டிக்கெட் என்றால் பெரும் தலைவலி தான். புக்கிங் தொடங்கிய ஒரு நிமிடத்திலேயே டிக்கெட் காலியாகிவிடும். ஆனால் ஏஐ இந்த பிரச்சினையை தீர்த்துவிட்டது.
ரயில் டிக்கெட் முன்பதிவு தளமான IRCTC, தனது இணையதளத்தை மேம்படுத்தி ஜூலை 15, 2026 அன்று புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தட்கல் போன்ற அவசர கால டிக்கெட் முன்பதிவுகளின் போது பயணிகள் சந்திக்கும் சிரமங்களை போக்கவும், முன்பதிவு வேகத்தை அதிகரிக்கவும் புதிய இணையதளத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

பழைய இணையதளம் ஒரு நிமிடத்திற்கு சுமார் 32,000 முன்பதிவுகளை மட்டுமே கையாளும் திறன் கொண்டிருந்தது. புதிய தளம் ஒரு நிமிடத்திற்கு 1.5 லட்சம் முன்பதிவுகளை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், பயணிகளின் Enquiry-களை கையாளும் திறனும் ஒரு நிமிடத்திற்கு 4 லட்சத்தில் இருந்து 40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே தட்கல் முன்பதிவின் போது இணையதளம் முடங்கிப்போவதை இது தவிர்க்கும்.
மேலும் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது இடையில் வரும் தேவையில்லாத பாப்-அப்கள் , விளம்பரங்கள் மற்றும் மீண்டும் மீண்டும் கேட்கப்படும் 'கேப்ட்சா' சரிபார்ப்புகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் முன்பதிவு நொடியில் செய்து முடிக்கும் வேலையாக மாறி இருக்கிறது.
இதற்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, ஸ்லீப்பர், ஏசி என வெவ்வேறு வகுப்புகளுக்கு தனித்தனியாக தேடி பார்க்க வேண்டும் இப்போது அந்த அவசியம் இல்லை. புதிய தளத்தில், அனைத்து வகுப்பு இருக்கை விவரங்களும் ஒரே திரையில் தெரியும் என்பதால் நாம் எளிதாக தேர்வு செய்து கொள்ளலாம். எனவே தட்கல் டிக்கெட் பதிவு மிகவும் சுலபமாகிவிட்டது.
இதற்கு முன்பு தட்கல் டிக்கெட் பதிவு செய்யும் போது தளம் ஹேங்காகி லாகினே செய்ய முடியாது. ஆனால் இப்போது லாகின் செய்யாமலேயே ரயில்கள், இருக்கை விவரங்கள், கட்டணங்கள் ஆகியவற்றை ஹோம் பக்கத்திலேயே தெரிந்து கொள்ளலாம். மேலும் ஒரே இடத்தில் ஸ்லீப்பர், ஏசி உள்பட அனைத்து வகுப்பு இருக்கைகளும் காட்டும் என்பதால் பேக் வந்து ரிஃபிரஸ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
தட்கல் டிக்கெட் உங்களுக்கு கிடைக்குமா கிடைக்காதா என்பதை ஏஐ மூலம் முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் புதிய ஏஐ கருவி இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இது முந்தைய டிக்கெட் பதிவு டிரெண்ட் மற்றும் தரவுகளை கொண்டு வெயிட்டிங் லிஸ்ட் என்றால் உங்கள் டிக்கெட் உறுதியாவதற்கான சாத்தியம் இருக்கிறதா இல்லையா என்பதை காட்டி விடும். பின்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றினால் புதிய இணையதளத்தில் மிக ஈஸியாக தட்கல் டிக்கெட் பதிவு செய்யலாம்.
தட்கல் டிக்கெட் புக்கிங் தொடங்கும் அரைமணி நேரம் முன்பே லாகின் செய்து 'My Profile என்ற பகுதியில் Master List என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் பயணியின் பெயர், வயது, அடையாள சான்று ஆகிய விவரங்களை கொடுத்து save passenger details என்பதை கிளிக் செய்ய வேண்டும். எனவே டிக்கெட் பதிவின் போது ஒரு கிளிக் செய்தாலே பயணியின் விவரங்கள் வந்துவிடும் நீங்கள் ஒவ்வொரு முறையும் விவரங்களை கொடுக்க வேண்டாம்.
நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, யுபிஐ மூலம் கட்டணம் செலுத்தும் போது தாமதம் ஏற்படுவது, ஓடிபி வராமல் இருப்பது போன்ற சிக்கல்கள் உள்ளன. எனவே முன்கூட்டியே டிக்கெட் கட்டணத்தை IRCTC eWallet -இல் போட்டு வைத்தா, 2 விநாடிகளில் கட்டணம் செலுத்தி டிக்கெட் பதிவு செய்யலாம்.
அடுத்ததாக Vikalp என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள். உங்கள் டிக்கெட் , ரயிலின் சார்ட் தயாராகும் வரை கூட உறுதியாகவ்பில்லை என்றால் இதே வழித்தடத்தில் இயங்கும் வேறு ஒரு ரயிலில் உங்களுக்கு உறுதியான டிக்கெட் கிடைக்கும்.
இது மட்டுமில்லாமல் தட்கல் முன்பதிவின் போது முறைகேடாக பயன்படுத்தப்படும் பாட் மென்பொருள்களைத் தடுக்க ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் முன்பதிவு முடிப்பவை அல்லது வழக்கத்திற்கு மாறான வேகத்தில் செயல்படும் கணக்குகளை ஏஐ கண்டறிந்து அவற்றை உடனே தடுத்து நிறுத்தும். இதன் மூலம் உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications


