தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை" என்ற திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000-த்தை வழங்கி வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் மே மாதம் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும், இதே தொகையை வழங்குமா? என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில் பதவி ஏற்பு விழா நடந்து முடிந்தது மே 10-ம் தேதி தான். இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படுவது போல் தொகை வருமா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் மக்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக வெற்றி கழகம், இந்த மே மாதத்திற்கான உரிமைத் தொகையை மாதத்தின் 15-ஆம் தேதி அன்று வங்கி கணக்கில் கணக்கச்சிதமாக வரவு வைத்தது. தவெக அரசு ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2500-ஆக உயர்த்தி வழங்கவிருப்பதாக உறுதி அளித்திருந்தது. அதேபோல மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சில மறு சீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளது.
ஏன் இந்த மறு சீரமைப்பு நடவடிக்கை?: தவெக அரசு தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்திருந்தது. தற்போது மகளிர் உரிமைத் தொகை பெற்று வரும் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், புதிய மறு சீரமைப்பு நடவடிக்கையின் கீழ் முதியோர் உதவித்தொகை என்ற திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள். இதனால் இதுவரையில் ரூ.1,000 பெற்று வந்த அவர்களுக்கு மாதா மாதம் ரூ.3,000 வழங்கப்படும். அதேபோல 60 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் தோறும் மகளிர் உரிமை தொகையாக 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. இதை செயல்படுத்தும் விதமாகத்தான் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை.

அதேபோல "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை" என்ற பெயரை "மதிப்புமிகு மகளிர் திட்டம்" என மாற்றவும் அரசு ஆலோசித்து வருகிறது. இது குறித்த இறுதி முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழகத்தில் 1.31 கோடிக்கும் அதிகமான குடும்பத் தலைவிகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?: நீங்கள் தமிழ்நாட்டில் வசிக்கும் பெண்ணாக இருக்க வேண்டும். 21 வயது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் பயன்படுத்தும் மின்சாரம் 3600 யூனிட்களுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
யார் விண்ணப்பிக்க முடியாது?: அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், வருமான வரி செலுத்துவோர், 4 சக்கர வாகன உரிமையாளர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தவிர்த்து பிற அரசியல் பதவிகளில் இருப்பவர்கள் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.
தேவையான ஆவணங்கள்: அடையாள ஆவணங்களான ஆதார் கார்டு, பான் கார்டு, ரேஷன் கார்டு, பேங்க் பாஸ்புக், முகவரி சான்றிற்காக மின்சார கட்டண ரசீது, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவை தேவைப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? நீங்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அல்லது அருகில் உள்ள சேவை மையங்களுக்கு சென்றும் விண்ணப்பிக்கலாம்.
ஸ்டெப் 1: முதலில் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான kmut.tn.gov.in அல்லது kmut.tnega.org என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
ஸ்டெப் 2: பின்னர் "ரெஜிஸ்ட்ரேஷன்" அல்லது "அப்ளை ஆன்லைன் லிங்க்" என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: உங்களுக்கான ப்ரோபைலை உருவாக்க வேண்டும். பிறந்த தேதி மற்றும் நீங்கள் பதிவு செய்ய இருக்கும் நபருக்கு, நீங்கள் என்ன உறவு முறை, மகனா? மகளா? என்பதையும் குறிப்பிட வேண்டும். பாலினம், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விபரங்களையும் வழங்க வேண்டும். பின்னர் ஒரு பாஸ்வேர்டை குறிப்பிட வேண்டும்.
ஸ்டெப் 4: இந்த செயல்முறையை முடித்த பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைலுக்கு ஒரு OTP வரும். அந்த OTP-ஐ வழங்க வேண்டும்.
ஸ்டெப் 5 : பிறகு விண்ணப்ப படிவத்தை நிரப்பலாம். உங்கள் குடும்பத்தின் வருமானம் மற்றும் வங்கி விவரங்களை வழங்க வேண்டும். தேவையான ஆவணங்களின் டிஜிட்டல் காப்பியை இணைத்து அப்லோட் செய்ய வேண்டும். உங்களுக்கான அப்ளிகேஷன் ஐடி காண்பிக்கப்படும். அதை பிற்காலத் தேவைக்கு குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஆன்லைன் வேண்டாம் என்று நினைப்பவர்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களுக்கு செல்லலாம். உங்களுடைய ஆவணங்கள் மற்றும் அவற்றின் ஜெராக்ஸ் காப்பியை கொண்டு செல்லுங்கள். அங்குள்ள ஊழியர்கள் உங்களுடைய ஆவணங்களை சரிபார்த்து ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தருவார்கள்.
புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அரசு மகளிர் உரிமைத் தொகையை விரைவில் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே மே மாதத்திற்கு பிறகு 21 வயதை பூர்த்தி செய்யும் பெண்கள் உடனடியாக விண்ணப்பித்து மகளிர் உரிமை தொகை பெறலாம்.


Click it and Unblock the Notifications