இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் அந்த சாலையை பராமரிக்கும் நிறுவனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்த வேண்டும். இதனை FASTag முறையில் வசூல் செய்கிறார்கள். அதாவது நமது கார் உள்ளிட்ட வாகனங்களில் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். அதில் இருந்து ஸ்கேன் செய்து தானாக பணம் எடுத்து கொள்ளும்.
வாகன ஓட்டிகளிடம் இருந்து சுங்க கட்டணம் வசூல் செய்யும் நிறுவனங்கள் அதற்கேற்ற சேவைகளை வழங்குவதை உறுதி செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒரு முக்கியமான நடவடிக்கை எடுத்துள்ளது. பெரும்பாலும் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் மக்கள் எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சினை பொது கழிப்பறைகள் பற்றாக்குறை மற்றும் அவை பயன்படுத்தும் வகையில் சுத்தமாக இருக்காது என்பது தான்.

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் கழிப்பறைகளை கட்டியிருந்தாலும், பல இடங்களில் அவை முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால் பயணிகளுக்கு, குறிப்பாக பெண்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. இந்த சிக்கலை தீர்க்கவும், கழிப்பறைகளின் தரத்தை மேம்படுத்தவும் NHAI இந்த திட்டத்தை கொண்டுவந்துள்ளது.
பயணிகள் சுங்கச்சாவடிகளில் கழிப்பறைகள் அசுத்தமாக இருக்கிறது முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்றால் புகைப்படம் எடுத்து புகாரளித்தால் 1000 ரூபாய் பரிசாக கிடைக்கும். இந்த திட்டம் Clean Toilet Picture Challenge என்பதன் ஒரு பகுதியாகும். 2025இல் தொடங்கப்பட்ட இந்த திட்டம் பொதுமக்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இந்த திட்டம் இப்போது ஜூன் 30, 2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 429 பயணிகள் இந்த திட்டத்தின் கீழ் அசுத்தமான கழிப்பறைகளை புகாரளித்து, தலா 1,000 ரூபாய் FASTag ரீசார்ஜ் பரிசை பெற்றுள்ளனர்.
நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் போது NHAI அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு கழிப்பறை தூய்மையின்றி இருந்தால், அதன் தெளிவான புகைப்படத்தை எடுக்க வேண்டும். அதனை Rajmargyatra செயலியில் அப்லோட் செய்ய வேண்டும். நீங்கள் அப்லோட் செய்யும் புகைப்படத்தில் கழிப்பறையின் சரியான இருப்பிடத்தை குறிக்கும் Geo-tagging மற்றும் எடுக்கப்பட்ட நேரத்தை காட்டும் Time-stamp கட்டாயம் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
புகைப்படத்துடன் சேர்த்து உங்கள் பெயர், இருப்பிடம், வாகனம் பதிவு எண் மற்றும் உங்கள் மொபைல் எண் போன்ற அடிப்படை தகவல்களைப் பதிவிட வேண்டும். நீங்கள் அனுப்பும் புகைப்படங்கள் AI மற்றும் நேரடி சரிபார்ப்பு மூலம் பரிசீலிக்கப்படும். உங்கள் புகைப்படம் உண்மை என உறுதி செய்யப்பட்டால், உங்கள் உங்கள் வாகனப் பதிவு எண்ணுக்கான ஃபாஸ்டேக்கில் 1,000 ரூபாய் பரிசுத் தொகை ரீசார்ஜ் செய்யப்படும்.
ஒரு வாகனம் ஒரு முறை மட்டுமே இந்த பரிசுத் தொகை பெற முடியும். தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் நேரடி அதிகார வரம்பின் கீழ் கட்டப்பட்ட, இயக்கப்படும் அல்லது பராமரிக்கப்படும் கழிப்பறைகளுக்கு மட்டுமே இது பொருந்தும். தேசிய நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் நிலையங்கள் , தாபாக்கள் அல்லது பிற பொது நிறுவனங்களுக்கு சொந்தமான கழிப்பறைகள் இடம்பெறாது.


Click it and Unblock the Notifications


