புவி வெப்பமயமாதல் மற்றும் அதன் காரணமாக ஏற்படக்கூடிய பருவநிலை மாற்றங்கள் உலகம் முழுவதுமே பெரிய அளவிலான தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. திடீரென கன மழை பெய்வது , கடுமையான புயல், சூறாவளிகளை சந்திப்பது, பெரும் வறட்சியை காண்பது என காலநிலை மாற்ற பாதிப்புகளை மனிதர்களாகிய நாம் அனுபவிக்க தொடங்கி விட்டோம்.
புவி வெப்பமயமாதலை தடுக்க புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்பதில் உலக நாடுகள் கவனம் செலுத்துகின்றன. இந்தியாவும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் புதிய புதிய திட்டங்களை ஊக்குவித்து வருகிறது. இதில் தமிழ்நாடு அரசும் தற்போது மிகச்சிறந்த ஒரு முன்னெடுப்பை தொடங்கி இருக்கிறது. தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பொதுமக்கள் அல்லது விவசாயிகள் தங்கள் வசம் இருக்கக்கூடிய பயன்பாடற்ற தரிசு நிலங்களை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் ஈடுபடக்கூடிய நிறுவனங்களுக்கு குத்தகைக்கு கொடுக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது.

இதற்காக ஒரு பிரத்தியேக இணையதளத்தையும் அறிவித்து இருக்கிறது . தமிழ்நாடு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இணைய தளம் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தில் நில உரிமையாளர்கள் தங்களுடைய நிலத்தை பதிவு செய்து கொள்ளலாம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் ஈடுபடக்கூடிய நிறுவனங்கள் தங்களுக்கு நிலம் தேவைப்படும்போது உங்களை தொடர்பு கொண்டு உங்களுடைய நிலங்களை குத்தகைக்கு எடுத்துக் கொள்வார்கள். கிட்டத்தட்ட 30 ஆண்டு காலத்திற்கு இந்த குத்தகை நீடிக்கும் என்றும் குத்தகை பணம் நில உரிமையாளருக்கு தொடர்ச்சியாக வந்து சேரும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவிக்கிறது.
இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் உற்பத்தியில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் இருக்கிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் மொத்த ஆற்றல் பயன்பாட்டில் 50 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலத்தில் இருந்து பெறவேண்டும் என அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. ஆனால் இதுபோன்ற திட்டங்களுக்கு நிலம் கிடைப்பது அடிப்படை தேவை என்பதால் தரிசு நிலங்களை இந்த திட்டங்களுக்கு பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
எனவே பயிரிட இயலாத அல்லது பயன்படுத்தப்படாத நிலங்களை கொண்ட விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் 30 ஆண்டுகள் வரை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் ஈடுபடக்கூடிய நிறுவனங்களுக்கு தங்களுடைய நிலத்தை குத்தகைக்கு கொடுக்கலாம். இதற்கான https://relp.tngecl.org/ இணையதளத்தை தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்திருக்கிறார்.
விவசாயிகள், நில உரிமையாளர்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்ட மேம்பாட்டாளர்கள் என அனைவரும் ஒரே தளத்தில் சந்திக்கும் வகையில் இந்த இணையதளத்தை வடிவமைத்திருக்கிறார்கள். நில உரிமையாளர்கள் தங்களுடைய நிலத்தின் விவரங்களை https://relp.tngecl.org/ இணையதளத்தில் பதிவு செய்து கொண்டால் நிறுவனங்களே உங்களை தேடி தொடர்பு கொள்ளும்.


Click it and Unblock the Notifications