இந்தியாவில் அண்மை காலமாக கார் வாங்கும் போக்கு மக்களிடையே அதிகரித்துள்ளது. குறிப்பாக எஸ்யூவி ரக கார்கள், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட கார்களை மக்கள் அதிகம் வாங்குகின்றனர். இவ்வாறு புது கார் வாங்கும் போது அரசு உங்களுக்கு Tax refund செய்யும். ஆனால் இது பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் பெரும்பாலானவர்கள் இந்த பணத்தை பெறாமலே விட்டு விடுகிறோம்.
இந்தியாவில் மூலத்தில் கழிக்கப்படும் வரிகளை TDS மற்றும் TCS (tax collected at source ) என அழைக்கிறோம். நீங்கள் புதிதாக கார் வாங்கும்போது உங்களுக்கு காரை விற்பனை செய்யக்கூடிய அந்த நிறுவனம் வருமான வரி சட்டத்தின் பிரிவு Section 206Cஇன் கீழ் டிசிஎஸ் பிடித்தம் செய்து அதனை வருமான வரித்துறையிடம் வழங்கிவிடும். இந்த டிசிஎஸ் என்பது காரை வாங்கும் நபரின் கணக்கில் இருந்து பணம் டெபிட் செய்யப்படும் நேரத்திலோ அல்லது விற்பனையாளர் பணம் பெறும் நேரத்திலோ எது முதலில் நடக்கிறதோ அப்போது வசூல் செய்யப்படும்.

அதிக மதிப்புள்ள பர்ச்சேஸ்களை கண்காணிக்க வேண்டும் , வரி ஏய்ப்புகளை தடுக்க வேண்டும் , முறைகேடான சட்டவிரோத பண பரிவர்த்தனைகளை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த டிசிஎஸ் என்பது பிடித்தம் செய்யப்படுகிறது. இதன்படி வருமானவரிச் சட்டத்தின் பிரிவு 206C(1F) இன் கீழ் , உங்களுக்கு காரை விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்கள் காரின் விலை 10 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கிறது எனும் போது அதில் 1 சதவீதம் தொகை டிசிஎஸ் ஆக பிடித்தம் செய்ய வேண்டும்.
இது பொதுமக்களுக்கு மட்டுமே பொருந்தும் . அரசு நிறுவனங்கள் ,தூதரகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சில பொது துறையின் நிறுவனங்களில் கார் வாங்கும் போது இந்த விதி பொருந்தாது . கார் டீலர்கள் , மறு விற்பனைக்காக காரை வாங்கும்போது இந்த விதி பொருந்தாது . எனவே ஒரு சாமானிய மக்கள் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட ஒரு காரை வாங்குகிறார் என்றால் அவரிடம் இருந்து பத்தாயிரம் ரூபாய் டிசிஎஸ் ஆக பிடித்தம் செய்யப்படும் .

காரின் மதிப்பு ஏற ஏற அதில் ஒரு சதவீதம் தொகை டிசிஎஸ் என பிடித்தம் செய்யப்படும் .50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் வாங்கினால் 50 ஆயிரம் ரூபாய் நீங்கள் டிசிஎஸ் ஆக செலுத்தி இருப்பீர்கள் . இந்த தொகையை நாம் டேக்ஸ் ரீஃபண்டாக பெறலாம். நீங்கள் கார் வாங்கும் போது உங்களுடைய டீலரிடம் படிவம் 27 டி-ஐ உடனடியாக பெற வேண்டும் .
இதனை அடுத்து நீங்கள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யும்போது படிவம் 26 ஏஎஸ் எனப்படும் ஆண்டு முழு அறிக்கையை சோதித்துப் பார்க்க வேண்டும் அதில் இந்த டிசிஎஸ் விவரம் பெற்று இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். இது இருக்கும் பட்சத்தில் அந்த டிசிஎஸ் தொகையை நீங்கள் ரீஃபண்ட் கோரி வருமானவரித்துறை இடம் விண்ணப்பம் செய்யலாம் அல்லது நீங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியில் இருந்து இந்த தொகையை கழித்துக் கொள்ளலாம். நிச்சயம் அரசாங்கம் உங்களுக்கு அந்த டிசிஎஸ் தொகையை திரும்ப செலுத்தியாக வேண்டும்.


Click it and Unblock the Notifications