இந்தியாவில் ஏற்கனவே NPS (National pension scheme) எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் இருக்கிறது. அதற்கு மாற்றாக மத்திய அரசு தற்போது UPS (Unified pension scheme) எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது, மத்திய அரசு ஊழியர்கள் ஜூன் 30-ஆம் தேதிக்குள் இந்த இரண்டில் எந்த திட்டத்தை பயன்படுத்துவது என்ற முடிவினை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
என்பிஎஸ் Vs யூபிஎஸ் திட்டம்: என்பிஎஸ் திட்டத்தில் இருப்பவர்கள் யுபிஎஸ் திட்டத்திற்கு மாறினால் மீண்டும் என்பிஎஸ் திட்டத்திற்கு திரும்ப முடியாது என்ற மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் தற்போது குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தியாவில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் இருந்தது அதற்கு மாற்றாக 2004ஆம் ஆண்டு என்பிஎஸ் திட்டமும் தற்போது அதற்கு மாற்றாக 2025ஆம் ஆண்டில் யுபிஎஸ் திட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களிலும் இருக்கும் சாதக பாதகங்கள் என்னென்ன என்பதை நாம் தற்போது தெரிந்து கொள்ளலாம்.

ஓய்வூதிய தொகை: அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் இந்த இரண்டில் ஏதேனும் ஒரு திட்டத்தை தேர்வு செய்து பயன்பெற முடியும். ஓய்வூதிய தொகை எவ்வளவு கிடைக்கும் எனப் பார்த்தால் என்பிஎஸ் திட்டத்தில் பங்களிப்பு செய்திருப்பவர்களுக்கு கிடைக்கக்கூடிய ஓய்வூதிய தொகை என்பது இந்தத் திட்டத்தில் அவர்கள் செய்திருக்கும் முதலீட்டின் அளவை பொறுத்து இருக்கும் . ஆனால் யுபிஎஸ் திட்டத்தில் ஓய்வு பெறக்கூடிய நபர் கடந்த 12 மாதங்களில் பெற்ற அடிப்படை சம்பளத்தின் சராசரி தொகையில் 50 சதவீதம் ஓய்வூதிய தொகையாக கிடைத்துவிடும். இது குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் மத்திய அரசு ஊழியராக இருந்த நபர்களுக்கு பொருந்தும் 10-25 ஆண்டுகள் மட்டுமே மத்திய அரசு ஊழியராக இருந்த நபர்களுக்கு விகிதாச்சார ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும்.
குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை: என்பிஎஸ் திட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை என எந்த ஒரு உத்திரவாத தொகையும் கிடையாது. என்பிஎஸ் திட்டத்தில் அவர்கள் செய்த முதலீட்டின் அடிப்படையில் தான் அந்த ஓய்வூதியத் தொகை அமையும். யுபிஎஸ் திட்டத்தில் குறைந்தது 10 ஆண்டுகள் மத்திய அரசு ஊழியராக இருந்த நபருக்கு 10 ஆயிரம் ரூபாயிலிருந்து ஓய்வூதியம் கிடைக்கும்.
கிராஜுவிட்டி: என்பிஎஸ் திட்டத்தில் எந்த ஒரு கிராஜுவிட்டியும் வழங்கப்படுவது கிடையாது. ஆனால் யுபிஎஸ் திட்டத்தில் ஓய்வூதியம் மற்றும் இறப்புக்கான கிராஜுவிட்டி பணமானது வழங்கப்படுகிறது.
குடும்பத்திற்கான ஓய்வூதியம்: என்பிஎஸ் திட்டத்தில் அந்த ஊழியர் செய்த பங்களிப்பு அதன் மூலம் அதில் உருவாகி இருக்கக்கூடிய நிதி தொகுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தான் குடும்பத்திற்கான ஓய்வூதிய தொகை என்பது நிர்ணயம் செய்யப்படும். யுபிஎஸ் திட்டத்தில் ஓய்வு ஊதியம் பெற்று வரக்கூடிய நபர் இறந்துவிட்டார் எனும் போது அந்த நபர் பெற்ற ஓய்வூதியத் தொகையில் 60 சதவீத தொகையானது குடும்பத்திற்கு வழங்கப்படும்.
பங்களிப்பு : என்பிஎஸ் திட்டத்தில் மத்திய அரசு செய்யும் பங்களிப்பு ஊழியரின் அடிப்படையில் சம்பத்தில் 14 சதவீதம், யுபிஎஸ் திட்டத்தில் 18.5 சதவீதம், ஊழியர் செய்யும் பங்களிப்பு என பார்க்கும்போது இரண்டு திட்டங்களிலுமே அவர்களுடைய சம்பளத்தில் 10 சதவீத தொகையாகும்.EPFO
அபாயங்கள் என்ன?: என்பிஎஸ் திட்டம் சந்தையுடன் இணைக்கப்பட்ட இது திட்டம் என்பதால் பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப உங்களுக்கு கிடைக்கக்கூடிய நிதி தொகுப்பு இருக்கும். ஆனால் யுபிஎஸ் திட்டத்தில் உத்தரவாதமான ஓய்வூதியம் கிடைக்கும்.
ஓய்வூதிய தொகை மாறுமா?: என்பிஎஸ் திட்டத்தில் உங்கள் கணக்கில் சேர்ந்த பணத்தை பொறுத்து ஓய்வூதிய தொகை கிடைக்கும், ஆனால் யுபிஎஸ் திட்டத்தில் பணவீக்கத்தின் அடிப்படையில் அரசு ஓய்வூதிய தொகையை உயர்த்தி கொண்டே இருக்கும். நுகர்வோர் விலை குறியீடு தரவுகளின் அடிப்படையில் ஓய்வூதிய தொகையானது மாற்றத்திற்கு உட்பட்டது .
எது சிறந்தது?: என்பிஎஸ் மற்றும் யுபிஎஸ் இரண்டிலுமே வெவ்வேறு நன்மைகளும் அம்சங்களும் இருக்கின்றன. ஊழியர்கள் தங்களுக்கு எது பொருத்தமானதாக இருக்கும் என்பதை ஆய்வு செய்து முடிவு செய்து கொள்வது நல்லது. ஆனால் என்பிஎஸ் உடன் ஒப்பிடும்போது யுபிஎஸ் முறையில் ஒரு உத்தரவாதமான ஓய்வூதிய தொகை நமக்கு கிடைக்கிறது அதேபோல அந்த ஓய்வூதிய தொகையானது பணம் வீக்கத்தின் அடிப்படையில் மாற்றத்திற்கு உட்பட்டது என்பதால் பலரும் யுபிஎஸ் திட்டத்தையே தேர்வு செய்வார்கள் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications