நிகர லாப வரம்பு என்பது ஒரு நிறுவனத்தின் நிதி நிலவரத்தை அல்லது ஆரோக்கியத்தை காட்டும் ஒரு முக்கியமான நிதி அளவீடாகும். நிறுவனத்தின் நிகர லாப வரம்பில் ஏற்படும் அதிகரிப்பு மற்றும் சரிவுகளை கண்காணிப்பதன் மூலம், நிறுவனத்தின் தற்போதைய நடைமுறைகள் செயல்படுகின்றனவா என்பதை மதிப்பிடலாம் மற்றும் வருவாயின் அடிப்படையில் லாபத்தை கணிக்கவும் முடியும். நிறுவனங்கள் லாப வரம்பை ஒரு ரூபாய் தொகையாக அல்லாமல் சதவீதமாக வெளிப்படுத்துகின்றன.
இந்த விகிதம் ஒரு நிறுவனம் அனைத்து செலவுகள்,வரிகள் மற்றும் வட்டிக்கு பிறகு ஒவ்வொரு ரூபாய் விற்பனைக்கும் எவ்வளவு லாபம் ஈட்டுகிறது என்பதை காட்டுகிறது. லாப வரம்பு அதிகமாக இருந்தால் அந்த நிறுவனம் வணிகத்தை மிகவும் திறமையாக நடத்தி வருகிறது என்று அர்த்தம். மேலும் அங்கு அதிக வருவாய் உண்மையான லாபமாகிறது. நிகர லாப வரம்பை எளிதான பார்முலா வாயிலாக நாம் கணக்கிடலாம். நிகர லாப வரம்பு = (நிகர வருவாய் / வருவாய்) x 100.

உதாரணமாக ஒரு நிறுவனத்தின் வருவாய் ரூ.10,00,000 என்றும், நிகர வருவாய் ரூ.1,00,000 என்று வைத்துக்கொள்வோம். இப்போது இந்நிறுவனத்தின் நிகர லாப வரம்பு = (1,00,000 / 10,00,000) x 100. இந்நிறுவனத்தின் லாப வரம்பு 10 சதவீதமாகும்.
பொதுவாக ஒரு நிறுவனத்தின் லாப வரம்பு அதிகமாக இருந்தால், அந்த நிறுவனத்தால் அதன் செலவுகளை கட்டுப்படுத்த முடியும் மற்றும் செலவுகளை விட கணிசமான அதிக விலையில் பொருட்கள் அல்லது சேவைகளை வழங்க முடியும் என்பதாகும். திறமையான மேலாண்மை, குறைந்த செலவுகள் மற்றும் வலுவான விலை நிர்ணய உத்திகள் போன்றவை நிறுவனத்தின் நிகர லாப வரம்பு அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக இருக்கும்.
நிறுவனத்தின் லாப வரம்பு குறைவாக இருந்தால், அந்த நிறுவனம் பயனற்ற செலவு மற்றும் மோசமான விலை நிர்ணய உத்திகளை பயன்படுத்தி வருகிறது என்பதை குறிக்கிறது. திறமையற்ற மேலாண்மை, அதிக செலவுகள் மற்றும் பலவீனமான விலை நிர்ணய உத்திகள் போன்ற காரணங்களால் நிகர லாப வரம்பு குறைவாக இருக்கலாம்.
முதலீட்டாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் வெவ்வேறு அளவிலான வெவ்வேறு நிறுவனங்களை அவற்றின் லாபத்தின் அடிப்படையில் ஒப்பிட்டு பார்க்கலாம். இதன் மூலம், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டு எந்த நிறுவன பங்குகளில் முதலீடு செய்யலாம் என்பதை தீர்மானிப்பதில் நிகர லாப வரம்பு விகிதம் உதவியாக இருக்கும்


Click it and Unblock the Notifications