இந்திய வங்கிகளில் யாராலும் உரிமை கோரப்படாமல் 78,213 கோடி ரூபாய் பணம் தேங்கி கிடக்கிறது. ஞாபக மறதி, இறப்பதற்கு முன்னர் பெற்றோர் தங்கள் பெயரில் இருக்கும் டெபாசிட்டுகள் குறித்து பிள்ளைகளிடம் தெரிவிக்காமல் இருப்பது , பெற்றோர் இறப்புக்கு பிறகு டெபாசிட்டுகளை பெற்று கொள்வது தொடர்பான விழிப்புணர்வு பிள்ளைகளுக்கு இல்லாமல் இருப்பது ஆகியவையே இப்படி கோடிக்கணக்கான பணம் யாருக்கும் பயன்படாமல் வங்கிகளில் தேங்கி நிற்பதற்கு முக்கிய காரணமாகும்.
பொதுவாக வங்கிகள் ஒரு சேமிப்பு கணக்கு அல்லது நடப்பு கணக்கு 2 ஆண்டுகளுக்கு செயல்படாமல் இருக்கிறது என்றாலோ, ஃபிக்சட் டெபாசிட் அல்லது ரெக்கரிங் டெபாசிட் ஆகியவை முதிர்வு காலம் முடிந்த பின்னரும் 2 ஆண்டுகள் உரிமை கோரப்படாமல் இருக்கிறது என்றாலோ அவற்றை டார்மெண்ட் கணக்குகள் என வகைப்படுத்துகின்றன.

இவ்வாறு வகைப்படுத்தப்பட்ட கணக்குகளில் அடுத்த எட்டு ஆண்டு காலத்திற்கு எந்த ஒரு நடவடிக்கையும் நடைபெறாமல் அதில் இருக்கும் பணத்திற்கு யாரும் உரிமை கோராமல் இருந்தால் அந்த பணத்தை இந்திய ரிசர்வ் வங்கி Depositors' Education and Awareness Fund (DEAF) என்ற நிதியத்திற்கு அனுப்பி வைத்து விடுகிறது. இது இந்திய ரிசர்வ் வங்கி முதலீட்டாளர்களுக்கு கல்வி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு நிதியாகும்.
இந்தியாவில் இவ்வாறு உரிமை கோரப்படாத பணங்கள் உரிய நபருக்கு சென்று சேர வேண்டும் அது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்திய ரிசர்வ் வங்கி 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் Unclaimed Deposits Gateway to Access Information - UDGAM என்ற ஒரு தளத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது.
இந்த தளத்திற்கு சென்று நாம் எளிதாக நம்முடைய பெயரில் அல்லது நம்முடைய பெற்றோரின் பெயரில் உரிமை கோரப்படாத டெபாசிட்கள் ஏதேனும் வங்கிகளில் நிலுவையில் இருக்கின்றதா என்பதை தெரிந்துகொள்ள முடியும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த UDGAM தளத்தில் பாரத ஸ்டேட் வங்கி ,பஞ்சாப் நேஷனல் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, சவுத் இந்தியன் பேங்க் உள்ளிட்ட 30 வங்கிகள் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு தேவையான தகவல்களை வழங்குகின்றன. பொதுமக்கள் இதனை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்கிறது ரிசர்வ் வங்கி.
UDGAM-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று நம்முடைய தகவல்களை முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். நம்முடைய மொபைல் எண் , பெயர் மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை உள்ளிட வேண்டும். இதனை அடுத்து நீங்கள் அளித்த மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். அந்த ஓடிபி கொடுத்து சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பின்னர் உங்களுடைய மொபைல் எண் மற்றும் பாஸ்வேர்ட் , ஓடிபி ஆகிய மூன்றையும் கொண்டு இந்த தளத்தில் லாகின் செய்து கொள்ள வேண்டும். லாகின் செய்த பிறகு கணக்கு வைத்திருந்தவரின் பெயர் மற்றும் குறிப்பிட்ட வங்கியின் பெயரை உள்ளீடு செய்ய வேண்டும்.
அத்துடன் பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் எண், பாஸ்போர்ட் எண் அல்லது பிறந்த தேதி இவற்றில் ஏதேனும் ஒரு தகவலை உள்ளீடு செய்ய வேண்டும். இதனை அடுத்து சர்ச் என்பதை கிளிக் செய்யும் போது இந்த குறிப்பிட்ட நபரின் பெயரில் உரிமை கோரப்படாத டெபாசிட் ஏதேனும் இருக்கிறதா அது எந்த வங்கியில் இருக்கிறது என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் காட்டும்.
ஒரு வேளை உரிமை கோராத பணம் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று உரிய ஆவணங்களை சமர்ப்பித்து உங்கள் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
Story Written By: Devika


Click it and Unblock the Notifications